BREAKING NEWS

தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடவில்லை –  நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது.


 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது

சுங்க கட்டணம்

டீசல் விலையை குறைக்க வேண்டும், சுங்க சாவடிகளை அகற்றி விட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும், 3-ம் நபர் காப்பீட்டு தொகை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை மாதம் 20-ந் தேதியான நேற்று முதல் நாடு முழுவதும் காலை வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது.

டேங்கர் லாரி

இந்த போராட்டத்திற்கு தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்கம், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம், கோழிப் பண்ணையாளர்கள் சங்கங்கள் மற்றும் சரக்கு புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம் என பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அறிவித்த படி லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது.

4.5 லட்சம் லாரிகள்

இந்த போராட்டத்திற்கு நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்ததால் தமிழகத்தில் உள்ள 4.5 லட்சம் லாரிகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்றன.

தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் இரும்பு தளவாடங்கள், ஜவுளிகள் உள்பட பொருட்கள் தேக்கம் அடைய தொடங்கி உள்ளது.

சுங்க சாவடிகள்

இதே போல வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் வெங்காயம், பருப்பு உள்பட அத்தியாவசிய பொருட்கள் தடைபட்டுள்ளது. வட மாநிலங்களில் 4 மற்றும் 6 வழி சாலைகள் அதிகரித்துள்ளதால் 300-க்கும் மேற்பட்ட சுங்க சாவடிகளும், தென் மாநிலங்களில் 162 சுங்க சாவடிகளும் உள்ளன.

இதனால் தற்போதைய வேலை நிறுத்ததினால் மகராஷ்டிரா, டெல்லி, குஜராத், மத்தி பிரதேசம், உத்திரபிரதேசம் உள்பட வட மாநில லாரி உரிமையாளர்களும் தீவிரம் காட்டுவதால் இந்த வேலை நிறுத்தம் வலுவடைந்துள்ளது.

பெரும்பாலான லாரிகள் ஷெட்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் இந்த தொழிலை நம்பியுள்ள 50 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதில் பெரும்பாலான டிரைவர்கள், கிளீனர்கள் லாரிகளை ஷெட்களில் நிறுத்தி விட்டு வீடுகளுக்கு சென்று விட்டனர்.

காய்கறிகள்

லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக மார்க்கெட்களுக்கு செல்லும் காய்கறிகள், மளிகை பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் முடங்கி உள்ளது. மேலும் ரெயில்கள் மூலம் எடுத்து வரப்படும் பொருட்கள் கூட் ஷெட்களிலேயே தேங்கி உள்ளது.

இதே நிலை நீடித்தால் இன்னும் ஓரிரு நாட்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல்லை தலைமையிடமாக கொண்ட டிரெய்லர் உரிமையாளர்கள் சங்கமும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போரட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் இந்த சங்கத்தின் கீழ் நாடு முழுவதும் இயக்கப்படும் 7 ஆயிரம் டிரெய்லர் லாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

ராணுவ வாகனங்கள்

இதனால் ராணுவ வாகனங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள், ரிக் வண்டிகளில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள், அனல் மின்சாரம் தயாரிக்க தேவையான இரும்பு உபகரணங்கள் உள்பட பல்வேறு பணிகளும் தடைபட்டுள்ளது.

இந்த போராட்டம் குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளன செயலாளர் தன்ராஜ் கூறியதாவது: எங்கள் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் நேற்று காலை வரை அரசு அழைக்காததால் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்த படி நேற்று தொடங்கியது,

சரக்குகள் தேக்கம்

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழகத்தில் எங்கள் சங்கத்தின் கீழ் உள்ள 4 லட்சத்து 60 ஆயிரம் லாரிகளும் பங்கேற்றுள்ளன. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வட மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படும் இரும்பு தளவாடங்கள், சிமிண்ட், ஜவ்வரிசி மாவு, ஜவுளி , பால் பவுடர், தேங்காய், தானியங்கள்,மஞ்சள் உள்பட பல கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன.

பொதுமக்கள்

தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வால் பொதுமக்களும் பாதிக்கப்படுவதால் பொது மக்களும் வாகனங்களை நிறுத்தி தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும். இதனால் தமிழகத்தில் தினமும் லாரி உரிமையாளர்களுக்கு 250 கோடி இழப்பு ஏற்படும். மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு எங்களை அழைத்து சுமூக தீர்வு எற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வரை எங்களது போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதுவை

புதுவையிலும் நேற்று காலை 6 மணி முதல் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது. இதனால் புதுவையில் உள்ள 3 ஆயிரத்துக்கும் அதிகமான லாரிகள் இயக்கப்படவில்லை. உள்ளூர் லாரிகளும், வெளியூரில் இருந்து வந்த லாரிகளும் மேட்டுப்பாளையத்தில் உள்ள போக்குவரத்து முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

லாரிகள் நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு வர்த்தக இழப்பாக ரூ.150 கோடி ஏற்படும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.




Leave a Reply