BREAKING NEWS

தமிழகத்தில் பொருளாதாரம் மேம்பாடு அடையவே வெளிநாட்டு பயணம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படுவதற்காகவும், தமிழகத்தின் பொருளாதாரம் மேம்பாடு அடையவுமே வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். இதன்மூலம், அதிகளவிலான முதலீடுகள் ஈர்க்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொழில் முதலீட்டாளர்களுடன் ஆலோசனை, தொழில்நுட்பங்கள் ஆய்வு உள்ளிட்ட காரணங்களுக்காக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்ெகாள்வதற்காக நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து புறப்பட்டு சென்றார். அப்போது, அவர் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

வெளிநாட்டு பயணம்

கேள்வி: இந்தப் பயணத்தின் மூலமாக தமிழ்நாட்டிற்கு எவ்வளவு முதலீடு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது?

பதில்: இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய், ஆகிய வெளிநாடுகளுக்குச் சென்று, அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய தொழில் துவங்குவதற்கு அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன். ஏற்கனவே 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தினோம். அப்பொழுது பல தொழிலதிபர்கள், நீங்கள் வெளிநாட்டிற்கு வந்து தொழிலதிபர்களை சந்தித்து, தமிழகத்திலே தொழில் துவங்க முன்வாருங்கள் என்று அழைப்பு விடுத்தால், அதிக அளவில் தமிழகத்திற்கு தொழில் முதலீட்டாளர்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது, அந்த வகையில் நீங்கள் வாருங்கள் என்று அழைத்தார்கள். அந்த அழைப்பின் பேரில் இப்பொழுது வெளிநாடு செல்கிறேன். பல்வேறு தொழிலதிபர்களை சந்தித்து, தமிழகத்திலே புதிய தொழில் துவங்குவதற்கு உண்டான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வதற்காக செல்கிறோம். தமிழ்நாட்டில் அதிக அளவில் முதலீட்டை ஈர்ப்பதற்குத் தான் இந்த சுற்றுப் பயணமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எவ்வளவு முதலீடுகள்

கேள்வி : இதற்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா?

பதில்: நான் ஏற்கனவே அவர்களிடத்திலே குறிப்பிட்டிருக்கின்றேன். அங்கு சென்று அவர்களையெல்லாம் சந்தித்து விட்டு, உங்களை சந்திக்கின்றபொழுது, நிச்சயமாக எவ்வளவு முதலீடு தமிழகத்திற்கு வரும் என்ற செய்தி தெரிவிக்கப்படும்.

பொருளாதார மேம்பாடு

கேள்வி: இந்தப் பயணத்தைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் வருகிறதே?

பதில்: நான் பெரிய தொழிலதிபர் இல்லை, சாதாரண விவசாயி. இந்த நாட்டினுடைய வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். புதிய, புதிய தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வரவேண்டும். அதன் மூலமாக படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும், பொருளாதாரம் மேம்பாடு அடைய வேண்டும், அதுதான் எங்கள் நோக்கம். அதுதான் எங்களுடைய லட்சியம் அதற்காகத் தான் நாங்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணம் புறப்பட்டிருக்கின்றோம்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

கேள்வி: ஏற்கனவே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் நிலை என்ன?

பதில்: புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் எந்த ஆட்சியினாலும் உடனடியாக தொழிற்சாலைகளை அமைத்துவிட முடியாது. சில நடைமுறைகள் உள்ளன. அதனை நிறைவேற்றத் தேவையானவற்றை நடைமுறைப்படுத்தியவுடன் தான் தொழில் துவங்க முடியும். 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவைகளெல்லாம் படிப்படியாக நிறைவேற்றப்படும். நாம் தொழில் முதலீட்டாளர்களை அழைத்தால் தான் அவர்கள் இங்கு வந்து தொழில் துவங்குவதற்கு ஆர்வம் காட்டுவார்கள். அதன் அடிப்படையில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறேன்.

முதலீட்டாளர்கள் ஆர்வம்

கேள்வி: இந்தப் பயணம் எந்தளவிற்கு தமிழகத்திற்கு ஆக்கப்பூர்வமாக இருக்கும்?

பதில்: தமிழகம் அனைத்து அம்சங்களுடன் கூடிய ஒரு மாநிலம். தடையில்லா மின்சாரம் வழங்கிக் கொண்டிருக்கின்றோம், சட்டம்-ஒழுங்கு சிறப்பான முறையில் காக்கப்படுகிறது. படித்த இளைஞர்கள் அதிகம் இருக்கின்றார்கள். 1074 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரைச் சாலையும் இருக்கின்றது, பல துறைமுகங்கள் இருக்கின்றன, விமான நிலையங்கள் இருக்கின்றன. தொழில் துவங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ள சிறந்த மாநிலம் தமிழ்நாடு. எனவே, தமிழ்நாட்டில் தொழில் துவங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த ஆர்வத்தைப் பயன்படுத்தி அதிகளவில் தமிழகத்திற்கு தொழில் முதலீட்டாளர்களை ஈர்த்து தொழில் துவங்க வேண்டுமென்பது தான் எங்கள் எண்ணம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply