தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் நோயற்ற வாழ்வை உருவாக்க தொடர்ந்து பாடுபடுவோம்:காசநோயாளிகளுக்கு மாதம் ரூ.500 உதவித் தொகை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்…..

சென்னை,
காசநோயாளிகளுக்கு ரூ.500 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்து தமிழகத்தில் ஒரு நோயற்ற வாழ்வை உருவாக்குவோம் என்று அவர் பேசினார்.

காசநோய் தினம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முகாம் அலுவலகத்தில், “உலக காசநோய் தினத்தை” முன்னிட்டு, காசநோய் தடுப்புப் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்கள் மற்றும் முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கு கையடக்கக் கணினிகள் வழங்கும் திட்டம், காசநோயாளிகளுக்கு மாதம் 500 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் ரீச் என்னும் தொண்டு நிறுவனம் மற்றும் என்ஐஆர்டி இணைந்து நிறுவியுள்ள 35 நக்ஷத்ரா மையங்கள் ஆகியவற்றை துவக்கி வைத்தார். மேலும், காசநோய் கண்டறியும் அதிநவீன கருவியுடன் கூடிய இரண்டு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானி ராபர்ட் கொச், 1882-ம் ஆண்டு மார்ச் திங்கள் 24-ந் தேதி காசநோய் கிருமியைக் கண்டறிந்து உலகிற்கு அறிவித்தார். இந்நோயைக் கண்டுபிடித்து நூறு ஆண்டுகள் 1982-ம் ஆண்டில் நிறைவு பெற்றதை ஒட்டி, ஒவ்வொரு ஆண்டும் உலக காசநோய் தினம், மார்ச் 24-ந் தேதியன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், உலக காசநோய் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

கண்காணிப்பு

உலக சுகாதார நிறுவனம், உலகளவில் 2030-ம் ஆண்டிற்குள் காசநோயைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. இந்தியாவில் இக்குறிக்கோளை 2025-ம் ஆண்டிற்குள் அடைய முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசும், குறிப்பிட்ட இலக்கு காலத்திற்கு முன்னதாகவே காசநோயை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மத்திய காசநோய் பிரிவின் சார்பில் தமிழகத்தில் காசநோய்த் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் 1412 முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்கள் மற்றும் முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வையாளர்களுக்கு கையடக்கக் கணினிகள் வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இக்கணினி மூலம் காசநோயாளிகளின் விவரங்கள், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மருந்துகள் போன்ற விவரங்கள் உடனுக்குடன் செயலி மூலம் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, எளிதாக காசநோயாளிகளை கண்காணிக்க முடியும்.

நடமாடும் வாகனம்

மத்திய அரசின் 2018-19-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், காசநோயாளிகளுக்கு மாதந்தோறும் 500 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்திலுள்ள காசநோயாளிகளுக்கு அவர்களது சிகிச்சை காலங்களில் மாதம் 500 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காசநோயாளிகளுக்கு உதவித்தொகை வழங்கி துவக்கி வைத்தார். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்தத் தொகை காசநோயாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

காசநோய் இல்லா சென்னையை உருவாக்க, பெருநகர சென்னை மாநகராட்சியும், ரீச் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து, சென்னையில் நிறுவியுள்ள 35 நக்ஷத்ரா மையங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று துவக்கி வைத்தார். இம்மையங்கள், அரசுக்கு அறிவிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் காசநோயாளிகளின் சிகிச்சைகளை கண்காணிக்கும். மேலும், மத்திய காசநோய் பிரிவு தமிழ்நாட்டிற்கு வழங்கியுள்ள காசநோயைக் கண்டறியும் அதிநவீன கருவியுடன் கூடிய இரண்டு நடமாடும் வாகனங்களை முதல்வர் துவக்கி வைத்தார்.

இந்த நிகழச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

சிறப்பான ஏற்பாடு

ஒவ்வொரு ஆண்டும், உலக காசநோய் தினம் மார்ச் 24-ந் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், உலக காசநோய் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு காசநோய் தினத்தின் வாசகம், “காசநோய் இல்லா உலகம் – தலைவர்கள் தேவை” என்பதாகும். இதனையொட்டி, காசநோய் கண்டறியும் அதிநவீன கருவியுடன் பொருத்தப்பட்ட
2 வாகனம் தமிழ்நாடு அரசின் சார்பாக இன்று (நேற்று) துவக்கி வைக்கப்படுகிறது.

இதன்மூலமாக, இந்த நடமாடும் வாகனங்கள், எல்லா பகுதிகளுக்கும் செல்கின்றபோது, அந்த பகுதியிலே காசநோயால் பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் இந்த அதிநவீன வாகனத்தில் பொருத்தப்பட்ட கருவிகளுடன் அவர்களுக்கு நோயுடைய தன்மை அறிந்து, குணப்படுத்துவதற்கு ஏதுவாக அமையும் என்பதன் காரணத்தினாலே, நோயுற்றவர்களை தேடி, இந்த வாகனமே சென்று, அவர்களுக்கு நோயை கண்டறிந்து குணப்படுத்தக்கூடிய ஒரு சூழ்நிலையை அரசு ஏற்பாடு செய்திருக்கின்றது.

வங்கி மூலமாக…

அதேபோல, கிராமப்புறத்திலே இருக்கின்ற ஏழை எளிய மக்கள், அவர்கள் சாதாரண குடும்பத்திலே பிறந்து வாழ்ந்த காரணத்தினாலே, இந்த காசநோயால் பாதிக்கப்படுகின்ற போது, அதற்கு தேவையான மாத்திரைகள் வாங்கி அவர்கள் உட்கொள்ள வேண்டும். பொருளாதார சூழ்நிலை காரணமாக அதை வாங்க முடியாத சூழ்நிலை இருக்கின்றவர்களுக்கு, அந்த நோயாளிகளுக்கு உழவர் பாதுகாப்பு அட்டையின் மூலமாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல, 2018-19-ம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையிலே இந்த காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் 500 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதையும், அவர்களுக்கு வங்கி மூலமாக நேரடியாக போய் சேர்வதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து, அதேபோல இன்றைக்கு, உலகளவிலேயே 2030-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத உலகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற இலக்கை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

பாராட்டு

பிரதமர் நரேந்திர மோடி, 2025-க்குள் இந்தியாவில் காசநோய் இல்லாத இந்தியாவாக உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பை நல்கி, அதை நிறைவேற்றப்படும் என்பதை இந்த தருணத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன். காசநோய் குணப்படுத்துகின்ற ஒரு நோய். அதை உரிய முறையிலே சிகிச்சை எடுத்துக் கொண்டால் நிச்சயம் பரிபூரண குணமடையலாம்.

ஆகவே, அரசாங்கம் மட்டுமல்ல, இங்கே வருகை தந்திருக்கின்ற முக்கிய மருத்துவமனை நிர்வாகிகளும், தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இந்த காசநோயால் பாதிக்கப்பட்டவர்களை இலவசமாக தங்கள் மருத்துவமனையிலே பரிசோதனை செய்து, குணப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் இந்த தருணத்திலே தெரிவிக்கிறேன்.

நோயற்ற வாழ்வு

இன்றைக்கு தமிழ்நாட்டை பொறுத்தவரை மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டும், சுகாதாரமாக வாழ வேண்டும், நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்று, கருத்திலே கொண்டு, பல்வேறு அடிப்படைகளை இன்றைக்கு செய்து வந்து கொண்டு இருப்பதை, இந்த நேரத்திலே சுட்டிக்காட்டி, நம்முடைய பெரியவர்கள் குறிப்பிடுவார்கள் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்று சொல்வார்கள்.

எவ்வளவு தான் செல்வம் இருந்தாலும், நோயில்லாமல் இருந்தால் தான், மனித வாழ்க்கை வாழ முடியும். ஆகவே, அப்படி ஒரு நோயற்ற வாழ்வை தமிழகத்திலே உருவாக்கி தருவதற்கு ஜெயலலிதா அரசு தொடர்ந்து பாடுபடும் அதற்கு தேவையான நடவடிக்கை சுகாதாரத்துறை மூலமாக எடுக்கப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Leave a Reply