தற்போதைய செய்திகள்
ops

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதா?பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்து ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலடி…

சென்னை,
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக கூறியுள்ளதற்கு ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்யை கூறுவதாக ஓ.பன்னீர்செல்வம் பதிலடி அளித்து உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஜெயலலிதா பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதா பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடுவது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

ரத்ததானம்

மறைந்த முதல்-அமைச்சர் அம்மாவின் 70-வது பிறந்த நாளை, அவர் உயிரோடு இருந்த காலத்தில் ஏழைகளுக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும் என்று பல யோசனைகள் வழங்கியதற்கு ஏற்ப உற்சாகமாகக் கொண்டாட உள்ளோம். பல்வேறு அரசியல் கட்சிகள் மிகவும் ஆடம்பரமாக தலைவர்கள் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றன. ஆனால் நாங்கள் அம்மா வகுத்து தந்த கட்டுப்பாடுபடி ரத்த தானம் செய்தல், ஏழை- எளியவர்களுக்கு உதவிகள் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
அது தொடர்பாக கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டது.

சட்டம் ஒழுங்கு

இதை தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கேள்வி:-தமிழகம் பயங்கரவாதிகள் பயிற்சி பெறும் கூடாரமாக மாறி விட்டதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறி உள்ளாரே?
பதில்:- மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லி இருப்பது உண்மைக்கு மாறானது. அது ஜமுக்காளத்தில் வடி கட்டிய பொய்.
கே:- தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளாரே?
ப:- இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கு சீராக இருப்பது தமிழ்நாட்டில் தான். தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழும் மாநிலமாக உள்ளது. பல்வேறு மாநிலங்களின் சட்டம்- ஒழுங்குடன் இதை ஒப்பிட்டு பார்த்தால் தெரியும்.
புதிய நிர்வாகிகள்
கே:- அ.தி.மு.க.வில் புதிய நிர்வாகிகள் எப்போது நியமிக்கப்படுவார்கள்?
ப:- புதிய நிர்வாகிகள் நியமனம் ஓரிரு தினங்களில் வர உள்ளது. கழகத்துக்கு துரோகம் செய்து விட்டு சென்றவர்களின் பதவிக்கும் நிர்வாகிகள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
கே:- புதிய நிர்வாகிகள் ஜெயலலிதா பிறந்த தினத்துக்கு முன்பு நியமிக்கப்படுவார்களா?
ப:- அதற்கு முன்பாக நிரப்பப்படும்.
அம்மா உணவகம்
கே:- அம்மா உணவகங்களில் வருவாய் குறைந்து வருகிறதே? தரமும் இல்லை என்ற புகார்கள் எழுந்துள்ளதே?
ப:- அம்மா உணவகம் வருவாய் ஈட்டுவதற்காக திறக்கப்படவில்லை ஏழை- எளிய மக்களுக்கு தரமான உணவு வழங்க திறக்கப்பட்டுள்ளது. அவை தொடர்ந்து சீராக இயங்கும்.
கே:- அனிதா குப்புசாமி அ.தி.மு.க.வில் இருந்து விலகி தலைமை சரியில்லை என்று குற்றம் சாட்டி உள்ளாரே?
ப:- எங்களுக்கு எதிர் கருத்து சொல்பவர்கள் அவரவர் மனநிலைக்கு ஏற்ப கருத்துகளை சொல்கிறார்கள். அது மக்களின் கருத்துக்கள் அல்ல.

பிரதமர் மோடி

கே:- எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு பிரதமர் மோடி வருவாரா?
ப:- பொறுத்து இருந்து பாருங்கள்.
கே:- ஜெயலலிதா படத் திறப்புக்கு பிரதமர் நேரம் ஒதுக்கி தரவில்லைஎன்று சொல்லப்படும் நிலையில் தற்போது மத்திய அமைச்சர்களும் தமிழகத்துக்கு எதிராக பேசி வருகிறார்களே?
ப:- பிரதமர் நேரம் ஒதுக்கி தரவில்லை என்பது அவர்கள் சொல்லும் கருத்தாகும்.
கே:- மத்திய காப்பீடு திட்டத்தை ஏற்க மாட்டோம் என்று மம்தாபானர்ஜி கூறியுள்ளார். தமிழகமும் அதில் இருந்து வெளியேறுமா?
ப:- இந்தியாவில் முழு மருத்துவ காப்பீடு திட்டத்தை கொண்டு வந்து தமிழகம் செயல்படுத்துகிறது. இதனால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தொடர்ந்து அந்த காப்பீடு திட்டம் நீடிக்கும்.
மத்திய நிதி
கே:- மத்திய அரசு தரும் நிதி 71 சதவீதம் குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது?
ப:- ஏற்கனவே 13-வது நிதிக்குழு, 14-வது நிதிக் குழுவில் தருவதாக கூறிய தொகை இன்னும் பாக்கி உள்ளது. அதை கேட்டுள்ளோம்.
தமிழ்நாட்டுக்கு நிதி இழப்பு அதிகமாகத்தான் உள்ளது. தமிழ்நாட்டின் திட்டங்களுக்காக 15-வது நிதிக்குழுவில் உரிய பங்கை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம்.
கே:- மு.க.ஸ்டாலின் கொடுத்த 27 பரிந்துரைகள் பற்றி பரிசீலனை செய்ய வாய்ப்புள்ளதா?
ப:- 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சிக்காலத்தில்தான் தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு முழுக் கடனும் ஏற்பட்டது. அப்போது வராத ஞானோதயம் இப்போது வந்துள்ளது வியப்பாக உள்ளது. இந்த மாதிரி ஆலோசனையை அப்போதிருந்த முதல்-அமைச்சரிடமோ, போக்குவரத்து அமைச்சரிடமோ தெரிவித்து இருக்கலாம்.
நினைவிடம்
இப்போது தமிழக அரசு போக்குவரத்து கழகம் செம்மையாக நடைபெற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கே:- ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள் எப்போது தொடங்கப்படும்?
ப:- ஒப்பந்தப்புள்ளி நிறைவு பெற்றவுடன் அந்த பணி தொடங்கும். அந்த நினைவிடம் உலகிலேயே சிறந்த மண்டபமாக திகழும்.
கே:- டி.டி.வி.தினகரன் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செல்வதால் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு ஏற்படுமா?
ப:- டி.டி.வி.தினகரன் உள்பட எந்த எதிர்க்கட்சி மூலமும் அ.தி.மு.க.வுக்கு பின்னடைவு ஏற்படாது. எங்களுக்கு ஒரு உறுதியான அஸ்திவாரத்தை அம்மா தந்துள்ளார். அந்த அஸ்திவாரம் மிகவும் பலமாக உள்ளது. எனவே யார் என்ன செய்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க இயலாது.
கே:- நீங்கள் முதல்வர் பதவியில் இருந்து விலகி ஓராண்டாகிறது. இதற்காக வருத்தப்பட்டதுண்டா?
ப:- எதை கொண்டு வந்தோம். இழப்பதற்கு.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
Leave a Reply