BREAKING NEWS

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மீட்பு படைகள் தயார் நிலையில் உள்ளது

குமரி கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது என மழை நிலவரம் தொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் சென்னை தலைமையகத்தில் பேட்டியளித்துள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

குமரிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘ மீட்பு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேபோல மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

கன்னியாகுமரியில் இருந்து 750 விசை படகுகள் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றன. அதில், 763 படகுகள் திரும்பி வந்துள்ளதாகவும், 7 படகுகள் இன்னும் திரும்பவில்லை. அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். அதேபோல தென்பகுதியில் கடல் சீற்றம் காரணமாக, நீண்ட நாள் தங்கி மீன்பிடிக்கும் மீனவர்கள் 525 படகுகளுடன் கடல் பகுதிக்கு சென்றுள்ளனர். அதில் 5 விசை படகுகள் மட்டும் கரை திரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

மீனவர்களுக்கு உரிய முறையிலான எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார். இதுதவிர, மழையை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார். மேலும், தென் மாவட்டங்களில் மழை வெள்ளம் சூழ கூடிய பகுதிகள் இருந்தால், அங்கு வசிக்கும் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார். குழந்தை சுஜித் மீட்பு பணிகள் குறித்து அவர் கூறியதாவது:- ‘பேரிடர் மீட்பு குழுவின் விதிமுறைப்படியே குழந்தை சுஜித் உடல் மீட்கப்பட்டது. துர்நாற்றம் வீசியதால் தான் ஆழ்துளை கிணற்றில் இருந்து சுஜித்தின் உடல் எடுக்கப்பட்டது. ஆழ்துளை கிணறு சம்பவங்களில் இறந்தவர்களின் உடலை எப்படி எடுக்க வேண்டும் என வழிமுறைகள் உள்ளன. அதன் படியே குழந்தையின் உடல் மீட்கப்பட்டது.

குழந்தையை மீட்க 600க்கும் மேற்பட்ட அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவரும் போராடினர். களப்பணியாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை சந்தேகிப்பது சரியான எண்ணம் இல்லை. அவர்களை குறை கூற வேண்டாம். கடுமையாக உழைத்தும் விமர்சனங்களை எதிர்கொள்வது களப்பணியாளர்களை கவலை அடைய செய்யும் என தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *