தற்போதைய செய்திகள்
rajini_0

“தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தலைமைக்கான வெற்றிடம்”தலைமைக்கு இனி சினிமா கவர்ச்சி எடுபடாது ‘ஊர்குருவி பருந்தாகாது-தலைவர்கள் பாய்ச்சல்….

நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில், தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதை நான் நிரப்புவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார். அவரின் இந்த கருத்துக்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் ஜெயக்குமார்:

தமிழில் பேசினால் மட்டும் தமிழ் வளராது என்ற ஒரு கண்டுபிடிப்பை, நடிகர் ரஜினிகாந்த நேற்று கண்டுபிடித்து தமிழுக்கு மிகப்பெரிய பெருமை சேர்த்திருக்கிறார். எம்.ஜி.ஆர். ஆட்சி தருவோம் என்ற, நடிகர் பாக்கியராஜில் ஆரம்பித்து இன்றைக்கு எத்தனை பேர் விலாசம் தெரியாமல் போனார்கள் என்ற வரலாற்றை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். நடிகர் ரஜினிகாந்தும் அதனை மறந்து இருக்க மாட்டார். எவ்வளவுதான் உயர, உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது. இந்த ஊர் குருவிக்கு எல்லாம் அஞ்சவேண்டிய அவசியம் இல்லை. வானத்தில் இருந்து குதித்த அவதார புருஷன் மாதிரி பேசுகிறார். மீண்டும் தேர்தலை சந்தித்து ஆட்சியை தொடர்வோம்.

மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை:

தமிழகத்தில் தற்போது நடப்பதே எம்.ஜி.ஆர். ஆட்சிதான் நடைபெற்று வருகிறது.
உலகத்தில் வெற்றிடம் என்று ஒன்று இல்லை. பரலோகத்தில் தான் வெற்றிடம் உள்ளது.

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்:

தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனை தமிழ்நாட்டு மக்களும் ஒப்புகொள்ள மாட்டார்கள். எந்தச் சூழ்நிலையிலும், அடுத்த ஆட்சியாக தி.மு.க. ஆட்சிதான் அமையப்போகிறது. மக்கள் அதற்கு தயாராக இருக்கிறார்கள்.

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்:

அரசியல் கட்சிகள் சரியாக செயல்படவில்லை என ரஜினி கூறுவதை ஏற்க முடியாது. மக்கள் யாருக்கு ஆதரவு தருகிறார்கள் என்பதைப் பொறுத்து வருங்காலம் இருக்கும். எல்லாரும் தெளிவாக நடைபோடட்டும். பின்பு மக்கள் எடை போடுவார்கள். ஒட்டு மொத்தமாக அனைத்து அரசியல் தலைவர்களும் சரியில்லை என ரஜினி கூறியிருக்க மாட்டார்.

மாற்று சக்தியாக நாங்கள் இருப்போம். ரஜினியும் அதையேதான் கூறியிருக்கிறார். யாரை ஆதரிப்பது என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ரஜினிகாந்துக்கு கிடைக்கும் விளம்பரம் எங்களுக்கு கிடைப்பதில்லை.

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்:

எம்.ஜி.ஆர். வழியில் நல்லாட்சி அமைப்பேன் என்று ரஜினிகாந்த் கூறியிருப்பதை, பொது மக்கள் அங்கீகரிக்கிறார்களா என்பதைவிட, அவரின் ரசிகர்கள் அதை ஏற்று கொள்வார்களா என்று தெரியவில்லை. தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை, வெறும் சினிமா கவர்ச்சியின் மூலம் நிரப்பி விட முடியும் என்பதில் நம்பிக்கை இல்லை.
கமலும் அரசியலில் இருப்பதால், ரஜினியால் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியுமா என்பது சந்தேகமே. இவர்களின் திட்டங்கள் மக்களிடத்தில் எடுபடப் போகிறதா? அல்லது சினிமா கவர்ச்சி எடுபட போகிறதா? என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.
தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான 42 நாள் கெடுவில், இன்னும் 24 நாட்களே உள்ளது. இந்த நிலையில், பிரச்சனையை கர்நாடகத் தேர்தலைத் தாண்டி இழுத்துக்கொண்டு சென்றுவிட வேண்டும் என்பதுதான் மோடி அரசின் எண்ணம். இதற்கு எதிர்ப்பும் கண்டனமும் தமிழகத்தில் வலுத்திருப்பதால், அதனைத் திசைதிருப்புவதற்காக ரஜினிகாந்தை ஏவி எம்.ஜி.ஆர். சிலை திறப்பு என்ற நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது மோடி அரசு.

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்:

என் நிலத்தில் நான் ஆளாமல் இன்னொருவன் ஆள்வது என்பது அடிமை. நாங்கள் அடிமையாக வாழ விரும்பவில்லை. மக்களை கர்நாடகாவிலோ, மஹாராஷ்டிராவிலோ போய் தட்டி எழுப்புங்கள். தலைவனே இல்லை என்றால் எப்படி? இந்தத் திமிர், ஆணவத்திற்கான தைரியம் யார் கொடுக்கிறார்கள்.
நல்லகண்ணு, நெடுமாறன், திருமாவளவன், வேல்முருகன், அன்புமணி ஆகியோரெல்லாம் இங்கு இல்லையா? இவர்களுக்கு எல்லாம் தலைவனாகும் தகுதி இல்லையா? யாருக்குமே தலைமைக்கான பண்பு இல்லை என்பது திமிர் பேச்சு.

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்:

தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் செல்வாக்கோடு இருப்பவர் ரஜினிகாந்த். அவரின் பேச்சு தமிழகத்தின் மூலை முடுக்கு எல்லாம் நல்லவிதமாக உள்ளது. அதனை தி.மு.க., கமல் ரசிகர்கள் எதிர்ப்பதற்கு எதுவும் கிடையாது. மாற்றுக்கருத்து கூறுபவர்கள் கூட ஏற்கும் வகையிலே உள்ளது. அவரின் இந்த உரை வரலாற்றுச் சிறப்புமிக்கது. அவர் தலைமைப் பண்புள்ள தலைவராக உருவெடுத்து, 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply