BREAKING NEWS

தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

மகாபலிபுரத்தில் 5 செ.மீ.,

தென்மேற்கு பருவமழையால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக, காஞ்சிபுரம் மாவட்டம் மகாபலிபுரத்தில் 5 செ.மீ., மழை பெய்தது.

இடியுடன் மழை

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரில் ஒருசில இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஜூலை 31-ந் தேதி முதல் மலைப்பகுதியான நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை நகரில் வானம் மேகமூட்டமாக காணப்படும். மாலை அல்லது இரவில் நகரின் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தெற்கு மற்றும் தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 25-35 முதல் 45 கி.மீ வேகத்தில் வடதமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப்பகுதி்களில் வலுவான காற்று வீசக்கூடும். அதேபோல, தென்மேற்கு மற்றும் மேற்கு திசையிலிருந்து மணிக்கு 25-35 முதல் 45 கி.மீ வேகத்தில் தென்தமிழக கடலோரப்பகுதி்களில் சூறைக்காற்று வீசக்கூடும்.

மழை விவரம்

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் மகாபலிபுரத்தில் 5 செ.மீ., நீலகிரி மாவட்டம் தேவாளாவில் 4 செ.மீ., கோவை மாவட்டம் சின்னகல்லார், பெரும்புதுாரில் தலா 3 செ.மீ., நடுவட்டம், சத்தியபாமா பல்கலை, கேளம்பாக்கம், வால்பாறை பி.டி.ஓ.,வில் தலா 2 செ.மீ., வால்பாறை தாலுகா அலுவலகம், கூடலுார் பஜார், பூந்தமல்லி, காவேரிபாக்கத்தில் தலா ஒரு செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




Leave a Reply