BREAKING NEWS

தமிழகத்தின் பிரச்சினைகளை தீர்க்க உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் நாங்குநேரியில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மக்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை

தமிழகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் பேசினார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசியதாவது:-

கவலையில்லை

இந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் விவசாயத்தைப் பற்றியும், பெண்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் பற்றியும் கவலைப்படவில்லை. நாட்டைப் பற்றி கவலைப்படாத, மக்களைப் பற்றியும் சிந்திக்காத ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கிறது.

கருணாநிதி 5 முறை முதலமைச்சராக இருந்தபோது, ஏழை மக்களுக்கு விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு, என எல்லாத் தரப்பு மக்களுக்கும் பல திட்டங்களைக் கொண்டு வந்தார். பெண்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் பாடுபட்டவர் கருணாநிதி. சொத்தில் பெண்களுக்கு சம உரிமையை வாங்கிக் கொடுத்தார். பெண்கள் தன்னம்பிக்கை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக மகளிர் சுய உதவிக்குழுவையும் துவங்கி வைத்தார்.

விவசாயிகள் தற்கொலை

ஆனால், இன்றைக்கு மகளிர் சுய உதவிக்குழு இருக்கிறதே தவிர, வங்கியில் கடன் கேட்டால் முறையாகக் கிடைக்கிறதா, சுழல் நிதி கிடைக்கிறதா? இல்லை. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்ததும் கருணாநிதிதான். எனவே, விவசாயத்திற்காக உழைத்தது, பெண்களின் மேம்பாட்டிற்காக உழைத்தது கருணாநிதி ஆட்சி. ஆனால், இப்போது இருக்கக்கூடிய ஆட்சியில் 250 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்து போயிருக்கிறார்கள்.

விவசாயிகள் டெல்லிக்குச் சென்று கூட போராட்டங்கள் நடத்தினர். அதைப்பற்றி, மத்திய ஆட்சியும், மாநில ஆட்சியும் கவலைப்படவில்லை. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சிக்கு நல்ல பாடத்தைப் புகுத்த வேண்டும். அ.தி.மு.க. ஆட்சி ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அதை காப்பாற்றி கோடி கோடியாக பணம் கொடுத்து எம்.எல்.ஏ.க்களையும் அமைச்சர்களையும் பிடித்து வைத்திருக்கிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தல்

உள்ளாட்சித் தேர்தலை முறையாக ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நடத்தியிருக்க வேண்டும். தி.மு.க. ஆட்சி இருந்தபோது உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்தியிருக்கிறோம். அ.தி.மு.க. ஆட்சி, உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருக்கிறது. இதுவரைக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் முயற்சியில் ஈடுபடவில்லை.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் வெற்றிபெற முடியாது என்ற அச்சம் காரணமாக, அதைத் தள்ளிப் போடுகிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் 90 சதவீத பிரச்சனைகளைச் சரிசெய்ய முடியும்.

விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் தண்ணீர் இல்லை. சென்னையிலேயே தண்ணீர் இல்லாத நிலையில் திண்டாடிக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு இருக்கிறது. அதைப் பற்றி இன்றைக்கு இருக்கும் ஆட்சி கவலைப்படவில்லை.

ஜெயலலிதா மரணம்

ஜெயலலிதா மரணம் எப்படிப்பட்ட மரணம்? அதில் மர்மம் இருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தான் சொன்னார். அதற்குப் பிறகுதான் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. தமக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைத்தவுடன் அங்கு சென்று விட்டார். விசாரணை நடந்து கொண்டுதான் இருக்கிறது.

தி.மு.க ஆட்சியில் மக்களுக்குக் கிடைத்தவை எல்லாம் இப்போது கிடைக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறாரே தவிர, மக்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை.

உங்களது எந்தப் பிரச்சினைகளைப் பற்றியும் அவர்கள் கவலைப்படவில்லை. பிரச்சினைகளை எல்லாம் தீர்க்க ஒரே வழி, உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்.

உரிமைகள் பறிப்பு

நம் உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் பேச முடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நம் பிள்ளைகள் மருத்துவர்களாக வரக்கூடாது என நினைக்கிறார்கள். அதனால் மருத்துவராகக்கூடிய அவர்களின் கனவு நிராசையாகப் போய்விட்டது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஒரு சூழ்நிலையில் இந்த ஆட்சி இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *