தற்போதைய செய்திகள்

தன்னாட்சி அதிகாரமிக்க மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா?

தன்னாட்சி அதிகாரமிக்க மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா?

மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி, வரைவு திட்டம் மீண்டும் தாக்கல்:

சென்னை, மே 16-

உச்சநீதிமன்றத்தில் 17.05.2018 மீண்டும் தாக்கல் செய்யப்படும் வரைவு திட்டத்தில், தன்னாட்சி அதிகாரம் மிக்க மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா? என்று மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்  வௌியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

செயற்கை தாமதம்

காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பின் அத்தனை அம்சங்களையும், உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்ட பிறகும், ஸ்கீம் என்பதற்கு என்ன அர்த்தம்? பிரதமர் சுற்றுப்பயணத்தில் இருப்பதால் ஒப்புதல் பெற முடியவில்லை என ஒரு வரைவுத்திட்டத்தை உருவாக்க மூன்று மாதம் தாமதத்தை மத்திய அரசு செயற்கையாக உருவாக்கியிருப்பது தமிழக நலனை அடியோடு புறக்கணிப்பதாக அமைந்துள்ளது.

பின்னணி என்ன?

வாரியமோ, ஆணையமோ எந்தப் பெயரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று மத்திய அரசு சொல்கிறது என்றால், மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையே உச்சநீதிமன்றத் தீர்ப்பில் இல்லை என்று முன்பு கூறியது ஏன்?

காவிரி நடுவர்மன்றம் இறுதித்தீர்ப்பில் இன்ஜினியர் ஒருவர் காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைவராக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. ஆனால், வரைவுத்திட்டத்தில் இஞ்ஜினியர் அல்லது அதிகாரி தலைமை என்று குறிப்பிட்டிருப்பது ஏன்? தமிழக அரசின் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்க வேண்டும் என கூறியதன் பின்னணி என்ன?

காவிரி மேலாண்மை வாரியம் தன்னாட்சி மிக்க அமைப்பாக இருக்க வேண்டும் என்று காவிரி நடுவர்மன்றம் குறிப்பிட்டுள்ளது. ஆனால், தன்னாட்சி அமைப்பு பற்றி தமிழக அரசு ஏன் வாய் திறக்கவில்லை? மத்திய அரசும் தனது வரைவுத் திட்டத்தில், தன்னாட்சி அமைப்பு என்று குறிப்பிடவில்லை. மாறாக, கண்காணிப்பு அமைப்பு என்றுதான் கூறுகிறது. மத்திய அரசு ஒரு அதிகாரமில்லாத வரைவுத்திட்டத்தைக் கொடுத்து விட்டது.

தமிழக அரசு வாரியத்திற்கு என்ன அதிகாரம்? அதை வரைவுத்திட்டத்தில் தெளிவுபடுத்துங்கள் என்று ஏன் வாதிடவில்லை? தமிழகத்திற்கு குறைக்கப்பட்ட 14.75 டி.எம்.சி தண்ணீரை, எந்த மாதத்தின் ஒதுக்கீட்டில் இருந்து குறைக்கப் போகிறார்கள்? தமிழகத்தில் விவசாயத்திற்குத் தண்ணீர் திறக்க வேண்டிய மாதத்தில் வரும் ஒதுக்கீட்டிலிருந்து குறைக்காமல் இருக்க இந்த வரைவுத்திட்டத்தில் என்ன பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது? இதுபற்றி தமிழக அரசு கேள்வி எழுப்பாததற்கு என்ன காரணம்?

தாக்கல் செய்யுமா?

நாளை  தாக்கல் செய்யப்படும் வரைவுத் திட்டத்திலாவது தன்னாட்சி அதிகாரமிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. எனவே, அனைத்துக் கட்சிக் கூட்டத்தையோ, விவசாய சங்கப் பிரதிநிதிகளையோ, முதலமைச்சர் அழைத்துப் பேசாமல், தன்னிச்சையாகச் செயல்பட்டிருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது.

அதனால், உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட அதிகாரம் மிக்க தன்னாட்சியான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு நாளை (இன்று) தாக்கல் செய்யும் வரைவுத்திட்டத்தில் உறுதி செய்ய வேண்டும். தமிழக அரசும் உரிய அழுத்தத்தை மத்திய அரசுக்கும், மூத்த வழக்கறிஞர்கள் மூலம் உறுதியான வாதத்தை உச்ச நீதிமன்றத்திலும் எடுத்து வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply