தந்தை பெரியாரின் பார்வையில் காந்தியின் கொலை…!

நெல்சன் மண்டேலாவை 27 ஆண்டுகாலம் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு தனித்தீவில் இருக்கும் சிறையில் அடைத்தனர்  ஆட்சியாளர்கள். மண்டேலா செய்த குற்றம் என்பது தென்னாப்பிரிக்கா பிரிட்டன் காலனி ஆதிக்கத்திலிருந்து முழுமையாக விடுதலை பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்துப் போராடியதால்தான் இந்த சிறைவாசம்.  உலக நாடுகளின் வற்புறுத்தலுக்கு இணங்க தென்னாப்பிரிக்கா விடுதலை பெற்று அதன் அதிபராக நெல்சன் மண்டேலா பதவி ஏற்கையில் இந்தியா இருக்கும் திசை நோக்கி, முதல் வணக்கம் செலுத்திய பின்னர்தான் பதவி ஏற்றுக் கொண்டார் என்பது சமீபத்திய வரலாறு.  “என்னுடைய மன உறுதி குலையாமல் தென்னாப்பிரிக்கா மக்களுக்காகப் போராடும் வலிமையை காந்தியின் வாழ்க்கையிலிருந்துதான் கற்றுக் கொண்டேன்.  தென்னாப்பிரிக்கா இன்று விடுதலை பெற்றதற்கு காந்திதான் தொடக்கப் புள்ளி. அதற்காக நான் மட்டுமல்ல தென்னாப்பிரிக்கா மக்கள் எல்லோருமே காந்தியிடம் தான் முதல் நன்றியைத் தெரிவிப்போம்” என்று உணர்ச்சிகரமான முறையில் மண்டேலா பேசியதை அன்றைய சர்வதேச ஊடகங்கள் முதல் பக்கச் செய்தியாக வெளியிட்டன!

தென்னாப்பிரிக்காவில் எந்த ரயில் நிலையத்தில் இருந்து நிறவெறி காரணமாக வழக்கறிஞராக இருந்த காந்தி தூக்கி வீசப்பட்டாரோ அந்த இடத்தில் இன்று காந்தி சிலை அமைக்கப்பட்டு வணங்கத்தகுந்த இடமாக மாறி உள்ளது.  அரை நிர்வாணப் பக்கிரிகள் எல்லாம் வட்டமேசை மாநாடுகளில் கலந்து கொள்வதா என காந்தி வாழ்ந்த காலத்தில் ஏளனப்படுத்தியது பிரிட்டன் அரசு.  இன்று பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தியின் உருவம் கம்பீரமாக சிலை வடிவில் அதே அரை நிர்வாண வயோதிக உருவத்தில் சிலையாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல 2007-ம் ஆண்டில் ஐ.நா பொதுச்சபையில், காந்தி பிறந்த அக்டோபர் 2-ம் தேதியை உலக அமைதி நாளாக ஐ.நா சபையில் தீர்மானத்தை இந்தியா கொண்டு வந்தபோது சபையில் இருந்த 142 நாடுகளும் எழுந்து நின்று வரவேற்றன.  அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் அக்டோபர் 2-ம் நாள் அமைதி, அகிம்சை தினமாகக் கொண்டாடப்படுகிறது.  உலகளவில் எந்த நாட்டிற்கும் கிடைக்காத கௌரவத்தை காந்தி இந்தியாவிற்கு வழங்கினார் என்றால் அது மிகையாகாது.

கோட்சேவால் காந்தி சுடப்பட்டு இறந்து இன்று 70 ஆண்டுகள் கடந்து போகின்றன.  காந்தியுடன் பல நேரங்களில் முரண்பட்ட தந்தை பெரியார், காந்தி சுடப்பட்ட செய்தியைக் கேட்டவுடன், கோட்சேவின் துப்பாக்கியை உடைப்பதற்கு உறுதி பூண்டு செயல்பட வேண்டிய காலம் இது என்று இரங்கல் செய்தியில் தெரிவித்தார். மேலும், இந்தியா என்னும் பெயரை காந்தி தேசமாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.  பெரியார் சுட்டிக் காட்டிய துப்பாக்கி இன்றும் உயிருடன் இருக்கிறது என்பதை தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடரில் வெளியாகி உள்ளது.  மத்தியப்பிரதேச நாடாளுமன்ற பாஜக உறுப்பினர் பிரக்யாசிங் தாகூர், கோட்சேவை தேசபக்தர் என்று அவையில் பதிவு செய்கிறார். நல்லவேளையாக சபாநாயகர் அவைக் குறிப்பில் அந்த உறுப்பினரின் பேச்சை நீக்கி உள்ளார்.  அவர் சார்ந்த பா.ஜ.க கட்சியும் இந்தப் பேச்சைக் கண்டித்துள்ளது.  சிந்தனையில் பெரியார் என்பதால் கவனத்துடன் கோட்சேவை விமர்சிக்காமல் கோட்சேவின் கையில் துப்பாக்கி வழங்கிய சித்தாந்தத்தை உடைப்பதுதான் நல்லது என்றார்.  இன்று மீண்டும் கோட்சேவின் துப்பாக்கிகள் உயிர் பெறுகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

விடுதலை பெற்ற இந்தியா எந்த வழியில் பயணிக்க வேண்டும் என்று காந்தியிடம் கேட்டதற்கு, இது வெறும் பதிலாக என்பதல்ல மாறாக விடுதலை பெற்ற இந்திய அரசுக்கு ஆணையாகவே இடுகிறேன்.. “சுதந்திரமான வலுவான இந்தியாவை காண விரும்புகிறேன்.  உலக நன்மைக்காக தூய்மையான தியாகத்தையும் உறுதியான எண்ணத்தையும் அது சுயமாகவே கொண்டிருக்க வேண்டும்.  தனி நபரின் தியாகம் என்பது தான் சார்ந்த குடும்பத்திற்கும், பிறகு குடும்பம் தாம் சார்ந்த கிராமத்திற்காகவும், கிராமம் மாவட்டத்திற்காகவும், மாவட்டம் மாநிலத்திற்காகவும், மாநிலம் தேசத்திற்காகவும், தேசம் அனைத்து மக்களுக்காகவும் தியாகம் செய்வதாக அமையும்.  இந்த முறைதான் புவியுலகின் கடவுளின் ராஜ்ஜியம் இதுவே என் விருப்பமும் கூட” என்றார் காந்தி.!

யாருக்கு இந்தியா சொந்தம்? என்னும் கேள்விக்கும் விடையளித்தார். “இந்தியா குறிப்பிட்ட ஒரு மதத்தவருக்கோ அல்லது இனத்திற்கோ சொந்தமானதல்ல.  இங்கே பிறந்தவர்களுக்கு மட்டுமல்ல, மாறாக எந்த தேசமும் இன்றி அகதிகளாக இருப்போருக்கும் இந்தியா சொந்தமாக இருக்க வேண்டும்.  அதுதான் மனித குலத்திற்கு நியாயமானது கூட என்று நினைக்கிறேன்” என்றார்.  அதனால்தான் இந்தியப் பிரிவினை என்பது என் பிணத்தின் மீதுதான் நடைபெறும் என்று உறுதியுடன் சொன்னவர் காந்தி. நாடுகளுக்கிடையில் இருக்கும் எல்லைக்கோடுகளையே விரும்பாதவர் இந்தியப் பிரிவினையை எப்படி ஏற்றுக் கொள்வார்? மவுண்ட்பேட்டன் பிரபு  பாகிஸ்தான் பிரிவினை குறித்து முதலில் ராஜாஜியுடனும் பிறகு படேலுடனும், அதன்பிறகு நேருவிடமும் பேசி காந்தி இல்லாத செயற்குழு கூட்டத்தில்தான் பிரிவினைக்கான தீர்மானம் இயற்றப்பட்டது.  சொல்லப்பட்ட காரணம் இதனால் இந்திய சுதந்திரம் தள்ளிப் போகக் கூடாது என்பதுதான்..!

என் நாடு, என் மதம் என்கிற குறுகிய எண்ணங்களால் உருவான சித்தாந்தத்தின் எதிரியாக காந்தி பார்க்கப்பட்டதன் விளைவுதான் கோட்சேவின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானது.  மனிதர்கள் எல்லோரையுமே பேதமின்றி நேசித்த மகாத்மா மண்ணில் சாய்ந்த செய்தியைத் தாங்கிய இந்துஸ்தான் பத்திரிகை இவ்வாறு தலையங்கம் தீட்டியது.

“எவரின் மீட்புக்காக காந்திஜி வாழ்ந்தாரோ அந்த மக்களின் ஒருவனாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.  உலக வரலாற்றில் இரண்டாவது சிலுவையேற்றம் வெள்ளிக் கிழமையிலேயே நடந்துள்ளது(காந்தி இறந்தது வெள்ளிக்கிழமை).  இதே நாளில்தான் 1915 ஆண்டுகளுக்கு முன் இயேசு நாதர் மரித்தார்.  பிதாவே எங்களை மன்னியும்” என்று இந்துஸ்தான் பத்திரிகை இரங்கலை எழுதியது.  மனிதகுல வரலாற்றில் கிறித்துவுக்கும், புத்தருக்கும் இணையாக மகாத்மா போற்றப்படுவார் என்று சொல்லி மவுண்ட்பேட்டன் கண்ணீர் சிந்தினார்.  நல்லவராக இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை காந்தியின் படுகொலை உணர்த்துகிறது என்றார் பெர்னாட்ஷா.  அலகாபாத்தில் காந்தியின் அஸ்தியை கரைத்த பிறகு நேரு சொன்னார் “நம்முடைய காலத்தின் மாபெரும் மனிதரைக் கொன்ற மிகக் கொடிய விஷத்தை முறியடிக்க இந்தியர்கள் ஒன்று சேர வேண்டும்” என்று கண்கள் சிவக்கப் பேசினார்.

காந்தியை கொலை செய்த குற்றத்திற்காக நாராயணன் ஆப்தே, நாதுராம் கோட்சே, மதன்லால் பாவா, கார்காரே, சாவர்க்கார், தத்தாத்ரேய பாச்சூர், திகம்பர பாடகேயின் உதவியாளர் சாங்கர் ஆகியோரை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  திகம்பர பாடகே அரசு தரப்பு சாட்சியானான்.  வழக்கு விசாரணை நடைபெறுவதற்கு உகந்த இடமாக டெல்லி செங்கோட்டையில் மொகலாய மாமன்னர் ஷாஜகான் நீதி வழங்கிய இடத்தின் ஒரு பகுதியில் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த ஆத்மசரண் கான்பூரின் மாவட்ட நீதிபதியாகவும், செஷன்ஸ் நீதிபதியாகவும் பணியாற்றியவர்.  எந்தவித அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் விசாரித்த காவல்துறை உயர் அதிகாரி நகர்வாலா குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்தார்.  நாராயணன் ஆப்தே டெல்லியில் உள்ள இந்து மகாசபையின் பின்புறம் இருந்த பகுதியில் கோட்சே துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றதை உறுதி செய்தான்.  கோட்சே சுடப்பழகிய மரத்தையும் அடையாளம் காட்டினான்.  சுடப்பழக இடத்தை வழங்கிய உரிமையாளர் டாக்டர் பார்ச்சர் கைது செய்யப்பட்ட விவரங்கள் எல்லாமே குற்றப் பத்திரிகையில் இருந்தது.  1948 ஜூன் 24-ல் விசாரணை தொடங்கி நவம்பர்  வரை நடைபெற்றது.  அரசுத் தரப்பில் 149 சாட்சிகள் 720 பக்க ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டன.

1949 பிப்ரவரி 10 ஆம் நாள் 204 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பினை நீதிபதி வாசித்தார்.  அகிம்சாவாதியைக் கூட ஒருவன் கொன்று விட்டு தப்பிவிடக் கூடாது என்பதற்காகவே கோட்சேவுக்கு, மரண தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி அழுத்தமாகப் பதிவு செய்தார்.  மேலும் நீதிபதி தனது தீர்ப்பில் நீதியின் செயல்பாடு, இந்திய சமூகத்தில் அறத்தின் முக்கியத்துவம் என்று தொடங்கி, இந்தியப் பிரிவினையில் இருந்து எப்படி காந்தியைக் கொல்லும் சதிச்செயல் உருவானது என்பதையெல்லாம் தெளிவான முறையில் நீதிபதி ஆத்மசரண் விளக்கியிருந்தார்.  தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது.  மேல்முறையீட்டிலும் கோட்சேவிற்கு தூக்கு தண்டனை உறுதிசெய்யப்பட்டது.  தூக்கிலிடப்பட்ட கோட்சேவின் உடலை சிறைக்குள்ளேயே தகனம் செய்யப்பட்டு காகர் என்ற சிறிய ஆற்றில் கோட்சேவின் சாம்பல் கரைக்கப்பட்டதாக காந்திஜியின் கொலை வழக்கு  முடிகிறது. ஆனால், பெரியார் சொன்னது போல கோட்சேவின் துப்பாக்கிகள் உயிருடன் இருக்கிறதோ என்கிற அச்சம் சமீபகால அரசியல் நிகழ்வுகளில் தென்படுகிறது.

 

 

 

 

 

 

– நீ.சு.பெருமாள்,

தொடர்புக்கு: giriperumal1964@gmail.com

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *