BREAKING NEWS

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் இணைய விரும்பினால் கட்சி மேலிடம் முடிவு செய்யும் – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் இணைய விரும்பினால், அவர்களை சேர்த்துக்கொள்வது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

தலைமை நீதிபதி தீர்ப்பு

நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சனம் செய்யக்கூடாது. ஆனால், அதுகுறித்து கருத்து கூறலாம். 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில், சபாநாயகர் உத்தரவு செல்லும் எனக்கூறிய தலைமை நீதிபதியின் தீர்ப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும். அதில், பேரவைத் தலைவருக்கு உள்நோக்கம் இல்லை, பேரவைத் தலைவருக்கு அதிகாரம் இருக்கின்றது, பேரவைத் தலைவரின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கூடாது என தலைமை நீதிபதி கூறியுள்ளார். இதுதான் அவரது தீர்ப்பின் முக்கிய சாராம்சம்.

ஜெயலலிதா ஆன்மா

அதனை முழுமையாக கவனத்தில் கொள்ள வேண்டும். வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும், துரோகங்கள் வென்றதாக வரலாறு இல்லை. துரோகம் வீழும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த அரசு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா கிராமங்கள் தோறும் சென்று மக்களைச் சந்தித்து அமைத்தது. இந்த அரசு 5 ஆண்டு காலம் தொடர வேண்டும். இதுதான் தொண்டர்களின் எண்ணம். இந்த எண்ணத்திற்கு மாறாக செயல்படுபவர்களை ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது.

மேலிட முடிவு

ஆட்சி தொடரக்கூடாது என சதி செய்பவர்களை வரலாறு மன்னிக்காது. மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அரசு செயல்படுகிறது. இந்த தீர்ப்பால் மக்கள் துன்பப்படுவார்கள் என தினகரன் கூறியது, ஒருவேளை பாகிஸ்தான் மக்களை குறிப்பிடுவதாக எடுத்துக்கொள்ளலாம்.

தினகரன் தரப்பு 18 எம்.எல்.ஏ.க்களும் எங்களுடன் இணைய விரும்பினால், அவர்களை சேர்த்துக்கொள்வது குறித்து கட்சி மேலிடம் முடிவெடுக்கும். யாரையும் புறந்தள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினகரனை ஒருபோதும் ஏற்கமுடியாது (பாக்ஸ்)

அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது தினகரனையும், அவரை சார்ந்தவர்களையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.




Leave a Reply