தற்போதைய செய்திகள்

டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு- ‘ஆம் ஆத்மி’ கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லாது மறு விசாரணை நடத்தும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு…..

புதுடெல்லி,

‘‘ஆதாயம் பெறும் பதவியை வகித்ததாகக் கூறி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு செல்லாது’’ என, டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த விவகாரத்தில் மறு விசாரணை நடத்தும்படியும், தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

‘பார்லிமென்ட்ரி’ செயலாளர்கள்

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலில் அமோக வெற்றி (70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் வெற்றி) பெற்று டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியது.

இந்நிலையில், 2015, மார்ச் 13-ந்தேதி, ஆம் ஆத்மி கட்சியின் 21 எம்எல்ஏக்களை பார்லிமென்ட்ரி செயலர்களாக நியமிக்கும் உத்தரவை டெல்லி அரசு பிறப்பித்தது.

அவர்கள் டெல்லி அமைச்சர்களுக்கும், பொது மக்களுக்கும் பாலமாக இருப்பார்கள் என்று முதல்வர் கெஜ்ரிவால் கூறி இருந்தார்.

ஆதாயம் தரும் இரட்டைப்பதவி

சம்பந்தப்பட்ட 21 எம்.எல்.ஏ.க்களும் ஆதாயம் தரும் இரட்டைப் பதவியை வகிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக டெல்லி காங்கிரஸ் சார்பில் 2016, ஜூன் 9-ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

அதில், ‘‘ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 21 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’’ என்று கோரப்பட்டது. இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரித்து வந்தது.

ராஜினாமா

இதற்கிடையில், கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற பஞ்சாப் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, ‘இரட்டைப்பதவி’ குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான டெல்லி ரஜவுரி கார்டன் தொகுதி ஆம் ஆத்மி உறுப்பினர் ஜர்னைல் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இதையடுத்து, 20 எம்எல்ஏக்கள் மீதான விசாரணையை தேர்தல் ஆணையம் தொடர்ந்தது.

முறையீட்டு மனு

பார்லிமென்ட்ரி செயலர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டதால், தங்கள் மீதான ஆதாயப் பதவி விவகார வழக்கு விசாரணையை கைவிடுமாறு சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள் தேர்தல் ஆணையத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

ஆனால், அதை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அவர்களுக்கு தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு அக்டோபரில் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

தகுதி நீக்கம்

விசாரணை முடிந்த நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஆம் ஆத்மி எல்ஏக்கள் 20 பேரையும், பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக பரிந்துரையை அளித்தது.

குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து, 20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களையும் தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்தது.

செல்லாது என தீர்ப்பு

இதனை எதிர்த்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்து வந்த டெல்லி உயர் நீதிமன்றம், நேற்று தனது தீர்ப்பை வழங்கியது.

‘‘எம்.எல்.ஏ.க்களுக்கு போதிய அவகாசம் வழங்காமல் தகுதி நீக்கம் செய்தது இயற்கை நீதிக்கு எதிரானது. சட்டத்தில் இது மோசமான செயல்’’ என்று, நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, சந்தர் சேகர் ஆகியோர் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளனர்.

மறு விசாரணை

மேலும் இந்த விவகாரத்தில், மறு விசாரணை நடத்தவும் தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

டெல்லி முதல்-அமைச்சர் கெஜ்ரிவால், ‘‘உண்மை வெற்றி பெற்றுள்ளது’‘ என, தீர்ப்பை வரவேற்று இருக்கிறார்.

இந்த பிரச்சினையை தேர்தல் ஆணையத்திடம் எழுப்பியவரும், வழக்கறிஞருமான பிரசாந்த் பட்டேல், ‘‘இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. அரசியல் சட்ட பிரச்சினை ஒன்றைத்தான் நான் எழுப்பி இருந்தேன். எனவே, இந்த தீர்ப்பில் எனக்கு பின்னடைவு எதுவும் இல்லை’‘ என்று கூறினார்.
Leave a Reply