BREAKING NEWS

டீசல் விற்பனை 80 சதவீதம் குறைந்தது: ரூ.1000 கோடி இழப்பு.


 

5-வது நாளாக இந்தியா முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்ந்து வருகிறது. இதனால் பெட்ரோல் பங்க்கில் டீசல் விற்பனை 80 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. டேங்கர் லாரி உரிமையாளர்களும் போரட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

காப்பீடு

டீசல் விலை, சுங்க கட்டணம், 3-ம் நபர் விபத்து காப்பீட்டு பிரிமியம் உயர்வு போன்றவற்றை குறைக்க வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்றுடன் வேலைநிறுத்தம் 5-வது நாளை எட்டியுள்ளது.

சரக்கு போக்குவரத்து தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் அடியோடு முடங்கியுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. ஆனால் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

நாமக்கல்

லாரிகள் அதிகம் நிறைந்த நாமக்கல் பகுதியில் தொடர் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. சரக்கு ெரயிலில் வந்த ரேஷன் அரிசி, மக்காசோள மூட்டைகளையும் இறக்காமல் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மற்றொரு பிரிவினர் சரக்கு ெரயிலில் வந்த சரக்குகளை இறக்க முயன்றபோது, அதற்கு நாமக்கல் தாலுகா லாரி உரிமை யாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் லோடு ஏற்றிய நிலையில் லாரிகள் நாமக்கல் ெரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு

தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் வாங்கிலி, ட்ரெய்லர் சங்க தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் பல்வேறு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கீரம்பூர் டோல்கேட் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. டோல்கேட் வழியாக அதிகமாக சங்ககிரியை சேர்ந்த லாரிகள் தான் சரக்கு ஏற்றிக்கொண்டு வருகின்றன. அவற்றை லாரி உரிமையாளர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.

உருளைக்கிழங்கு

மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் 100-க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன. இந்த மண்டிகளுக்கு ஊட்டி, குஜராத், கோலார் , கர்நாடகா, ஆக்ரா, நைனிடால், ஆசன், இந்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் 100 லோடு வரை உருளைக்கிழங்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன.

மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் இருந்து உருளைக்கிழங்குகள் கேரளா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது கடந்த 5 நாட்களாக தொடர்ந்து நடைபெறும் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக உருளைகிழங்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

காய்கறிகள்

தற்போது வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி வீதம் ரூ.10 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக உருளைக்கிழங்கு மண்டி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதே போல் நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகள் அறுவடை செய்து லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் லாரி உரிமையளர்கள் சங்கத்தினர் மண்டி உரிமையாளர்களிடம் லாரி வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கேட்டுள்ளனர். இதனால் லாரிகள் பொது வேலை நிறுத்தும் இன்னும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டீசல் விலை

லாரிகள் வேலை நிறுத்தம் நேற்று 5-வது நாளாக நீடிப்பதால் பெட்ரோல் பங்க்குகளில் டீசல் விற்பனை சரிந்துள்ளது. லாரிகள் அதிகம் உள்ள நாமக்கல், திருச்செங்கோடு, சங்ககிரி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் தினமும் 80 சதவீதம் அளவுக்கு டீசல் விற்பனை குறைந்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல்லில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூறுகையில், தினமும் 30 ஆயிரம் லிட்டர் டீசல் விற்பனையான பங்க்கில் தற்போது தினமும் 8 ஆயிரம் லிட்டர் மட்டுமே விற்பனையாகிறது. இதனால் எங்களுக்கு வருமானம் இழப்பு ஏற்படுவதுடன், மத்திய, மாநில அரசுகளுக்கு கடும் இழப்பு என்றனர்.

பேச்சுவார்த்தை

லாரி வேலை நிறுத்தம் குறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறுகையில், மத்திய அரசு இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. கடந்த 5 நாளாக நீடிக்கும் வேலை நிறுத்ததினால் லாரி உரிமையாளர்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு ரூ.1000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கோரிக்கையை ஏற்கும் வரை வேலைநிறுத்தத்தை தொடர்வதை தவிர வேறு வழியில்லை என்றார்.

டேங்கர் லாரிகள்

இந்தநிலையில் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு பெட்ரோல், டீசல் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரி மற்றும் டிரைலர் லாரி சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். நேற்று மதியம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு வேலைநிறுத்தம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனால் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் ஏற்றி செல்வதில் பாதிப்பு உருவாகும். பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும். வீடுகளுக்கு கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் பாதிப்பு உருவாகும்.




Leave a Reply