BREAKING NEWS

டி20 கிரிக்கெட் தொடர் – அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து.

 

கார்டிபில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியால் இந்தியாவை வீழ்த்தி தொடரை இங்கிலாந்து அணி சமன் செய்தது.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் கடந்த 3-ந் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா அபாரமாக வென்றது. அந்த வெற்றி உற்சாகத்துடன் இந்திய அணி நேற்றுமுன்தினம் 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கார்டிப் நகரில் இந்திலாந்துடன் மோதியது. இந்த போட்டியில் இங்கிலந்து அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணி கடந்த ஆட்டத்தில் களமிறங்கிய அதே வீரர்களை அதே வரிசையில் இறக்கியது.

இந்தியா தடுமாற்றம்

இந்திய அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். இங்கிலாந்தின் டேவிட் வில்லி, ஜேக்பால் ஆகியோரின் ஸ்விங் தாக்குதலில் ரோகித் ரொம்பவே திணறினார். ரோகித் சர்மா 5 ரன்களிலும், ஷிகர் தவான் 10 ரன்களிலும், லோகேஷ் ராகுல் 6 ரன்களிலும் வெளியேறினர். இதனால் இந்தியா 3 விக்கெட்டுக்கு 22 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

149 ரன்கள் இலக்கு

அடுத்து களம் இறங்கிய கேப்டன் விராட் கோலியும், சுரேஷ் ரெய்னாவும் நிதானமாக ஆடினர். அணியின் எண்ணிக்கை 79 ஆக இருக்கும்போது சுரேஷ் ரெய்னா 27 ரன்னில் அவுட்டானார். அடுத்து கோலியுடன் எம்.எஸ்.தோனி சேர்ந்தார். கோலி 38 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தது. தோனியும், பாண்ட்யாவும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து அணி சார்பில் ஜேக் பால், பிளங்கட், அடில் ரஷித் ஆகியோர் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

உமேஷ் சிறப்பான பந்துவீச்சு

இதையடுத்து, 149 ரன்களை இலக்காக கொண்டு இங்கிலந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் இறங்கினர். உமேஷ் யாதவ் தனது சிறப்பான பந்து வீச்சால் தொடக்க ஆட்டக்க்காரர்களை வெளியேற்றினார். ராய் 15 ரன்னிலும், பட்லர் 14 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய ஜோ ரூட் 9 ரன்னில் வெளியேறினார்.

தொடர் சமன்

அவரை தொடர்ந்து ஆடிய அலெக்ஸ் ஹேல்ஸ் ஒருபுறம் நிதானமாக ஆடினார். அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இங்கிலாந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹேல்ஸ் 41 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து டி 20 தொடர் 1-1 சமனிலையில் உள்ளது. ஹேல்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார். 3-வது ஆட்டம் ஜூலை 8-ந் தேதி நடக்கிறது.




Leave a Reply