BREAKING NEWS

டி.ஜி.பி.யிடமும் சி.பி.ஐ.யை நெருங்கி விடாமல் தயங்கி நிற்பது ஏன்?  மு.க.ஸ்டாலின் கேள்வி.

 

 

இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குட்கா ஊழல்

குட்கா வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன் வீடுகளில் சி.பி.ஐ சோதனை நடத்திய பிறகும், இருவரையும் தமிழக அரசு டிஸ்மிஸ் செய்யாமல் இருப்பதும், ஆளுநர் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. ஆளுநரின் அமைதி அரசியல் சட்டப்படி செயல்பட வேண்டிய அரசுக்கு, ஏற்ற செயலாக இருக்க முடியாது.

குட்கா டைரி அடிப்படையில், 60 லட்சம் ரூபாய் லஞ்சம் அன்றைய சென்னை கமிஷனருக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மாதவராவின் கணக்குப் புத்தகத்தில் உள்ளது. அந்த தேதிகளில், கமிஷனராக இருந்தவர் டி.கே.ராஜேந்திரன். இதே போல், ஹெல்த் மினிஸ்டருக்கு 56 லட்சம் ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. அப்போது அமைச்சராக இருந்தவர் விஜயபாஸ்கர். மேலும், பல அதிகாரிகளும், சென்னை மாநகர காவல் உதவி ஆணையர்களும் லஞ்சம் பெற்றிருக்கிறார்கள்.

அமைச்சர், டி.ஜி.பி.

வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ள வாக்கு மூலத்தின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் சி.பி.ஐ டி.ஜி.பி. ராஜேந்திரன், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்தியது.

மாதவராவையும், இடைத் தரகர்களையும், மத்திய அரசு அதிகாரிகளையும் கைது செய்து அவர்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டு விட்டார்கள். ஆனால், லஞ்சம் பெற்ற அமைச்சரையும், டி.ஜி.பி.யையும் கைது செய்யாத மர்மம் என்ன என்பது விளங்கவில்லை.

ஏன்?

ஊழல் வழக்கில் லஞ்சம் பெற்றவர்களை முதலில் கைது செய்வதுதான் வழக்கம். ஆனால், குட்கா ஊழல் வழக்கில் லஞ்சம் பெற்றவர்களை பதவியில் நீடிக்க விட்டு, லஞ்சம் கொடுத்தவர்களையும், இடைத்தரகரையும் முதலில் கைது செய்திருக்கிறது சி.பி.ஐ. மாநில அமைச்சரிடமும், மாநிலத்தில் உள்ள டி.ஜி.பி.யிடமும் சி.பி.ஐ.யை நெருங்கி விடாமல் தயங்கி நிற்பது ஏன்? எனவே, தமிழக ஆளுநர் அமைச்சர் விஜயபாஸ்கரையும், டி.ஜி.பி. ராஜேந்திரனையும் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். மேலும், அமைச்சரையும், டி.ஜி.பி.யையும் சி.பி.ஐ உடனடியாக கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply