தற்போதைய செய்திகள்

டிஜிபி அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற-ஆயுதப்படை காவலர்களுக்கு ஜாமீன்…..

சென்னை,
சென்னை டிஜிபி அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற ஆயுதப்படை காவலர்கள் இரண்டு பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
5 பிரிவுகள் ரத்து
சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற ஆயுதப்படை காவலர்கள் தரப்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றம், காவலர்கள் மீது 7 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், 5 பிரிவுகளை ரத்து செய்தும் உத்தரவிட்டது.
தீப்பற்றக்கூடிய பொருட்களை அலட்சியமாக கையாளுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் மட்டும் ஆயுதப் படை காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருவரையும் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேனி மாவட்ட காவல் துறையின் ஆயுதப் படையைச் சேர்ந்த காவலர்கள் ஜெ. கணேஷ் (28), ஆ.ரகு (29). இருவரும் தேனி மாவட்டம், ஆயுதப் படை ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை டிஜிபி அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை புகார் கொடுத்தனர்.
விசாரணை
பின்னர் டிஜிபி அலுவலகத்தை விட்டு வெளியே வந்த இருவரும், வாயிலில் நின்ற பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அதைத் தொடர்ந்து, இருவரும் தாங்கள் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயற்சித்தனர்.
இதனால் அங்கிருந்த பாதுகாப்பு போலீஸார், இருவரையும் மீட்டு டிஜிபி அலுவலத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் இருவரிடமும் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து இருவரும், மயிலாப்பூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஜாமீனில் விடுவிப்பு
இந்நிலையில் வியாழக்கிழமை காலை கிழக்கு மண்டல காவல் துறை இணை ஆணையர் டி.எஸ். அன்பு, இரு காவலர்களிடமும் சுமார் அரைமணி நேரம் விசாரணை நடத்தினர். இதையடுத்து இரு காவலர்கள் மீதும் மெரீனா காவல் நிலையப் போலீஸார் தற்கொலைக்கு முயன்றது, ஆபத்தான பொருளை வைத்திருந்தது, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, மிரட்டல் விடுத்தது உள்பட 7 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
கைதான கணேஷ், ரகு ஆகியோர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து இருவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
Leave a Reply