BREAKING NEWS

ஜே.என்.யூ.மாணவர்கள் போராட்டம் முடிவுக்கு வரவேண்டும்…!

டெல்லியில் உள்ள பழைமையான புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்.  ஜே.என்.யூ என அழைக்கப்படும் இந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 18 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.  பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் தங்கும் விடுதிக் கட்டணத்தை 300 மடங்கு உயர்த்தி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததை எதிர்த்துத்தான் இந்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தங்கும் விடுதிக் கட்டணம் மட்டுமல்ல கல்விக் கட்டணமும் 200 விழுக்காடு உயர்த்தியதுடன், புதிய வகையில் சில விதிகள் வகுக்கப்பட்டு அதனை விடுதியில் தங்கும் மாணவர்கள் ஏற்க வேண்டும் என்று, ஒரு வரைவு அறிக்கையையும், ஜே.என்.யூ பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.  இந்தியாவில் உள்ள மற்ற உயர்கல்வி நிறுவனங்களை விட ஜே.என்.யூ, என்பது பொதுமக்கள் சார்ந்த சிந்தனையுடன் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே மிக உயர்ந்த தரத்தில் இருக்கும் ஜே.என்.யூ-வை ஏன் புதிய விதிகள் என்கிற பெயரால், ஒரு கல்லூரியைப் போல சுருக்க நினைக்கிறீர்கள் என்பதுதான் இன்றைக்கு போராடிவரும் மாணவர்களின் மத்தியில் இருக்கும் கேள்வியாக உள்ளது.

காலம் காலமாக நடைமுறையில் இருந்த மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கான புதிய வரைவில், வெளியாட்கள் யாரும் தங்கக் கூடாது என்கிறது பல்கலைக்கழக நிர்வாகம்.  இதை மாணவர் அமைப்பு கடுமையாக எதிர்க்கிறது.  ஜே.என்.யூ மாணவர்களின் அரசியல் அறிவை மட்டுப்படுத்துவதற்காகவே இந்தப் புதிய வரைவு அறிக்கையினை தயார் செய்துள்ளனர் என்று மாணவர் அமைப்பு குற்றம் சாட்டி உள்ளது.  இந்த குற்றச்சாட்டில் ஓரளவு உண்மையும் இருக்கிறது.

ஜே.என்.யூ-வில் படிக்கும் மாணவர்கள் வெறுமனே ஏட்டுக் கல்வியுடன் நின்று விடுவதில்லை.  இந்தியாவில் உள்ள அரசியல் சூழல்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகள், விவாத அரங்குகள், கருத்தரங்கம் என பல்வேறு வடிவங்களில் நிகழ்கால அரசியல் குறித்த தகவல்களை, பேராசிரியர்களும், மாணவர்களும் பகிர்ந்து கொள்ளும் முறை என்பது தொடர்ச்சியாக இருந்துவரும் நடைமுறையாகும்.

இதனை தடுக்கின்ற வகையில்தான் தற்போது உளவியல் ரீதியாக மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் பல்கலைக்கழக நிர்வாகமும், மத்திய ஆளும் கட்சியின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி-யும் சேர்ந்து குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சமீபத்தில் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்துள்ளார்.  அவரை சந்தித்து கோரிக்கைகளை எடுத்துச் சொல்ல மாணவர் அமைப்புக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், போராட்டம் தீவிரமடைந்து காவல்துறை தடியடி, தண்ணீர் பீய்ச்சுதல் போன்றவைகளை நடத்தியதில் வன்முறை ஏற்பட்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஏற்கெனவே 2016-ல் தேசவிரோத முழக்கங்களை எழுப்பினர் என்று கண்ணையா குமார் மற்றும் அனிர்பார்ன் பட்டாச்சார்யா போன்ற மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  பின்னர் நீதிமன்றம் தலையிட்டு விடுதலை செய்தது.  அதன்பிறகு கடந்தாண்டில் பட்டப் பகலில் (BASO) மாணவர் அமைப்பின் தலைவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் மயிரிழையில் தப்பித்தார்.

ஜே.என்.யூ வில் எப்படியாவது வலதுசாரி சித்தாந்தம் நுழைந்துவிட வேண்டும் என்பதிலும், மதவாத கருத்துகள் கொண்ட ஆய்வுகளை முன்னெடுப்பதில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற முறையில் ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பு தீவிர முயற்சி செய்கிறது.

இருந்த போதிலும் மாணவர் அமைப்புத் தேர்தலில் 2017-ல் ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பு தோல்வியைத்தான் தழுவியது.  இன்றைய சூழலில் லக்னோ பல்கலைக்கழக மாணவர்களும் ஜே.என்.யூ மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து களத்திற்கு வந்திருக்கின்றனர்.

எனவே, அரசியல் பார்வையுடன் உயர்கல்வி நிலையங்களை அணுகும் முறையை கைவிட மத்திய அரசு முன்வர வேண்டும்.  அத்துடன் ஜே.என்.யூ-வில் உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணத்தை குறைத்திடவும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் தற்போது அவசியமாகிறது. ஏனெனில் சர்வதேச அளவில் ஜே.என்.யூ பல்கலைக்கழகம் புகழ்பெற்றதாக விளங்கி வருகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *