தற்போதைய செய்திகள்
10512CNI_IMG_20171205_WA0110

ஜெயலலிதா நினைவிடத்தில் தினகரன் அஞ்சலி தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தார்…

சென்னை, டிச.6-

மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து டி.டி.வி.தினகரன் அஞ்சலி செலுத்தினார்.
பேரணி
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நேற்று மவுன ஊர்வலமும், அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவும் டி.டி.வி.தினகரன் அழைப்பு விடுத்திருந்தார். அதன்பேரில் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை முன்பு தினகரன் ஆதரவாளர்களும், தொண்டர்களும் திரண்டனர். மதியம் 12.45 மணி அளவில் தினகரன் அங்கு வந்தார்.

அதைத் தொடர்ந்து அவரது தலைமையில் பேரணி புறப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி, இன்பத்தமிழன், செந்தமிழன் மற்றும் வெற்றி வேல், கலைராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பேரணி வாலாஜா சாலை வழியாக மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை சென்று அடைந்தது.

வாக்குவாதம்

டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் அனைவரையும், ஜெயலலிதா சமாதிக்கு அனுமதிக்க போலீசார் அனுமதி மறுத்தனர். அதனால், போலீசாருடன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஜெயலலிதா சமாதியில் மரியாதை செலுத்துவதற்காகத் தினகரன், கலைராஜன், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஒரே வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது, ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக 3 பேரும் தடுமாறினர்.

மலர் அஞ்சலி

இதில் மலர்க்கொத்தை வாங்கிய கலைராஜன் கீழே விழுந்தார். தினகரன் நிலைதடுமாறி ஜெயலலிதா சமாதியில் ஏறிவிட்டார். தங்க தமிழ்ச்செல்வன் திணறிக் கொண்டே இருந்தார். ஜெயலலிதா சமாதியில் நடந்த இந்தத் தள்ளுமுள்ளு சம்பவம் அங்கு சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் டி.டி.வி.தினகரன் மலர் வைத்து அஞ்சலி செலுத்தும்போது, ஆதரவாளர்கள் நெருக்கியதால், டி.டி.வி.தினகரன் மற்றும் முன் வரிசையில் நின்றிருந்தவர்கள் தவறி விழும் நிலை ஏற்பட்டது. பின்னர், மிகுந்த சிரமப்பட்டு டி.டி.வி.தினகரன் கூட்டத்திலிருந்து வெளியே சென்றார்.

இரு அணியினரும் பேரணியாகச் சென்றதால் அண்ணா சாலையில் செல்ல வேண்டிய பேருந்து மற்றும் வாகனங்கள், பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாகத் திருப்பிவிடப்பட்டன. அதனால், சென்னை நகரம் முழுவதும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால், பொதுமக்கள் பெரிதும் அவதியுற்றனர்.




Leave a Reply