தற்போதைய செய்திகள்

ஜெயலலிதாவின் 70 பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் 120 ஜோடிகளுக்கு திருமணம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்தார்….

மதுரை, மார்ச்.31-
ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் 120 ஜோடிகளுக்கு திருமணத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்தார்.

120 ஜோடி திருமணம்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு, அம்மா பேரவை சார்பில் 120 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிழ்ச்சியை மதுரையில் அதன் செயலாளரும், அமைச்சருமான உதயக்குமார் ஏற்பாடு செய்து இருந்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துக்கொண்டு 120 ஜோடிகளுக்கும் திருமணம் செய்து வைத்து ஆற்றிய உரை வருமாறு:-

8 கிராம் தங்கம்

எந்த அரசியல் இயக்கமும் கடைபிடிக்காத அளவிற்கு குடும்பப் பாசத்துடன் கட்சியை காப்பாற்றியவர் எம்.ஜி.ஆர். அவர் வழியிலே ஜெயலலிதாவும் இந்த இயக்கத்தை ஒரு பாசமிகு குடும்பத் தலைவராக, இந்த இயக்கத்தைச் சார்ந்தவர்களை பாசத்துடனும், நேசத்துடனும் தொடர்ந்து கட்டிக்காத்து வந்தார். அப்பெரும் இயக்கத்தை இன்று நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து காத்து வருகின்றோம்.

திருமண நிதி உதவிதி திட்டத்தின் மூலமாக ரூபாய் 25 ஆயிரம், ரூபாய் 50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. பயனாளிகளின் ஆண்டு வருமான வரம்பு ரூபாய் 72 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலமாக மதுரை மாவட்டத்தில் இதுவரை ரூபாய் 58 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் 217.616 கிலோ தங்கமும் ரூபாய் 177 கோடியே 66 லட்சம் நிதி உதவியும், 49,754 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது, இது ஒரு சரித்திர சாதனை. ஜெயலலிதா ஏழைக் குடும்பத்தினர் மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தார் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

திருமண உதவி

தமிழ்நாடு முழுவதும் 9,23,783 குடும்பங்களில் விளக்கேற்றியவர் ஜெயலலிதா. டாக்டர் முத்துலெட்சுமி மகக்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதி உதவியை ரூபாய் 6 ஆயிரத்திலிருந்து ரூபாய் 12 ஆயிரமாக ஜெயலலிதா முதலில் உயர்த்தினார். பிறகு, மகளிரின் நலம் பேணும் ஜெயலலிதா அரசும் இந்த நிதி உதவியை 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்த ஆணையிட்டது. இதில் 4 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 12வது வாரம் ஒரு முறையும், 16வது வாரம் ஒரு முறையும் என இரண்டு முறை ‘அம்மா தாய்சேய் நல ஊட்டச் சத்து பெட்டகம்’ வழங்கப்பட உள்ளது.

நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறந்திட, கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகையை போக்கவும், பிறக்கும் குழந்தைகளின் எடையை உயர்த்தவும், இரும்புச்சத்து டானிக் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய ‘அம்மா தாய்சேய் நல ஊட்டச் சத்து பெட்டகம்’ விரைவில் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தினால், தமிழ்நாடு முழுவதும் 46 லட்சத்து 61 ஆயிரம் கர்ப்பிணி தாய்மார்கள் பயன்பெறுவார்கள்.

அம்மா பெட்டகம்

அம்மா மகப்பேறு சஞ்சீவிகிட், பிறந்த குழந்தைகளுக்கு 16 பொருள்கள் அடங்கிய “அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம்”, கர்ப்பிணி தாய்மார்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு இலவச 108 ஆம்புலன்ஸ் வாகனம், பெண்களுக்கான உயர்கல்விதிட்டத்தின்படி அரசு சேவை இல்லங்களில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த பெண் குழந்தைகள் தொழிற்கல்வி பயின்றிட 50,000 ரூபாய் மற்றும் பட்டப்படிப்பு, பட்டயம் படித்திட 30,000 என்ற நிதி உதவி அரசால் வழங்கப்படுகின்றது.

கிராமங்கள் மற்றும் நகரங்களில் பெண்கள் வசிக்கும்இடத்திற்கு அருகாமையிலேயே பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஜெயலலிதா அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெண்களின் பொருளாதார நிலையை தாங்களே உயர்த்திக் கொள்ளும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மதுரை மாவட்டத்தில் 9055 மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மகளிர் முன்னேற்றம்…

மகளிர் தொழில் முனைவோருக்கான பிரத்யேக தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி பதவிகளில் மகளிருக்கென 50 சதவிகித இட ஒதுக்கீடு ஜெயலலிதாவின் அரசால் வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புற பெண்களில் வாழ்வியல் முன்னேற்றத்திற்காக விலையில்லா கறவைப் பசு, வெள்ளாடுகள் வழங்கும்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.

வீட்டில்பெண்கள் பணி சுமையைக் குறைக்கும், விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும்மின்விசிறி வழங்கும்திட்டத்தை ஜெயலலிதா கொண்டுவரப்பட்டு, நாடே பாராட்டுகின்றவகையில் அந்தத் திட்டத்தை வெற்றி பெறச் செய்தார்.
அம்மா மகளிர் இருசக்கர வாகனத்திட்டம்த்தின்வாயிலாக தமிழ்நாடு முழுவதும் 3 லட்சத்து 36 ஆயிரம் நபர்கள் பதிவு செய்திருக்கின்றார்கள். மதுரை மாவட்டத்தில் 2017-18-ம் ஆண்டில் 4 ஆயிரத்து 328 மகளிருக்கு 10 கோடியே 82 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட உள்ளது.

இல்லற வாழ்வை தொடங்கும்நீங்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு வாழ வேண்டும். மாறான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டாம். வாழ்க்கையில் வெற்றி பெற நற்சிந்தனையோடு இருவரும் உழைத்து மேன்மை அடைய வேண்டும். வீண் சஞ்சலத்திற்கு ஆளாகி மகிழ்ச்சியான நேரங்களில் கூட கவலை கொண்டு, வாழ்வை வீணடிக்காமல், துணிச்சலுடன் செயல்பட்டால், வாழ்வில் வெற்றிநிச்சயம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

முதல்வர் சொன்ன சுண்டெலி கதை….

ஒரு ஞானியை கண்ட ஒரு சுண்டெலி அவரிடத்தில் எனக்கு பூனையைக் கண்டால் பயமாக இருக்கிறது. என்னை பூனையாக மாற்றிவிட்டால் உங்களுக்கு புண்ணியம் உண்டு என்றது. ஞானியும் எலியை பூனையாக மாற்றினார். மீண்டும் அப்பூனை ஞானியிடம் வந்தது என்னை எப்பொழுதும் நாய் துரத்துகிறது.என்னை நாயாக மாற்றி விட்டால் நன்றாக இருக்கும் என்றது.

ஞானி அப்பூனையை நாயாக மாற்றினார்.சில காலம் கழித்து அந்த நாய் ஞானியிடம் எனக்கு புலியினால் ஆபத்து வருகிறது.எனவே என்னை புலியாக மாற்றுங்கள் என்றது.ஞானியும் அந்த நாயை புலியாக மாற்றினார்.மீண்டும் அந்த புலி ஞானியிடம் வந்து, எனக்கு மனிதர்களால் ஆபத்து ஏற்படுவதால் என்னை மனிதனாக மாற்றுங்கள் என்றது.உடன் இடைமறித்த ஞானி, “சுண்டெலியே உன்னை நான் எதுவாக மாற்றினாலும் உன் பயம் உன்னை விட்டுப் போகாது.உருவம் மாறினாலும், எப்பொழுதும் உள்ளத்தால் நீ சுண்டெலிதான்.

எனவே, நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு”” என்று கூறி சென்று விட்டார். ஆக உள்ளத்தில் தன்னம்பிக்கையும், உயர்ந்த எண்ணமும், அதற்கான அச்சமற்ற தன்மையும் இல்லாதவர் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது.உங்களைப் பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள்.தாழ்வு மனப்பான்மையை விலக்கிவிட்டு துணிச்சலுடன் செயல்பட்டால் உங்களால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. நற்சிந்தனை, தன்னம்பிக்கை ஆகியவை உங்கள் வாழ்வை வானளவிற்கு உயர்த்தும். நம்பிக்கையுடன்நீங்கள் செயல்பட்டால், உங்கள் வாழ்வில் வெற்றிநிச்சயம்.

பாக்ஸ்

மதுரையில் பறக்கும் பாலம்

அதுமட்டுமல்ல, நம்முடைய மதுரை மாவட்டத்திலே ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததின் மூலமாக இந்த மாவட்டத்திலே பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா அரசு நடைமுறைப்படுத்தியிருக்கின்றது. மதுரையில் முதன்முறையாக போக்குவரத்து நெரிசலை குறைக்கும்பொருட்டு, காலவாசல் சந்திப்பில் ரூபாய் 54 கோடி மதிப்பீட்டில் பறக்கும் பாலம் அமைக்கும் பணிக்கு என்னால் நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் விரைவில் துவங்கப்படும்.

பரவை-கோரிப்பாளையம் இடையே வைகையாற்றின் குறுக்கே ரூபாய் 18 கோடி மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலம் விரைவில் கட்டப்படும். ரூபாய் 51 கோடி மதிப்பீட்டில், மதுரை, அழகர்கோவில் சாலையை 4 வழிச்சாலையாகவும், வைகை வடகரையில் குருவிக்காரன் சாலையிலிருந்து அண்ணாநகர் சாலை வரை பாலம் அமைக்கும் பணி என்னால் நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் விரையில் துவங்கப்படவுள்ளது.

திப்பம்பட்டி முதல் நகரி வரை 31 கி.மீ. நீளம் உள்வட்டச் சுற்றுச்சாலை அமைப்பது, பழங்காநத்தத்தில் 6 வழித்தட ரயில்வே மேம்பாலமும், திருமங்கம் அருகில் குண்டாறு-சௌண்டாறு ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் கட்டுவதற்கும் மற்றும் மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்பொருட்டு, கோரிப்பாளையம் மற்றும் பெரியார் பேருந்து நிலையம் முதல் யானைக்கால் வரை உயர்மட்ட பறக்கும் பாலம் அமைக்க, மேற்படி திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, உத்தங்குடி முதல் கப்பலூர் வரை 27.2 கி.மீ. நீளமுள்ள மதுரை சுற்றுச்சாலை        2 வழிச்சாலையிலிருந்து 4 வழிச்சாலையாக அகலப்படுத்தி தரம்உயர்த்தும் பணி ரூபாய் 214 கோடி மதிப்பீட்டில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது. அனைத்து வசதிகளையும் கொண்ட, நவீன பேருந்து நிலையம் உடனடியாக, விரைவாக துவங்கப்படும்.

அதேபோல, மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் இடம் பற்றாக்குறை இருப்பதாக ஏற்கனவே சுட்டிக்காட்டி, இன்றைக்கு ஜெயலலிதாவின் அரசு, அதற்கு கூடுதல் கட்டடம் கட்டப்படும் என்ற அறிவிப்பைத் தந்து அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, இப்பொழுது ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நீங்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக கூடுதல் கட்டடம் கட்டித்தரப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Leave a Reply