தற்போதைய செய்திகள்

ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள்,முதல்-அமைச்சர், துணை முதல்வர் தலைமையில் அமைதிப் பேரணி….

ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி இன்று மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க. சார்பில் மலர் அஞ்சலி செலுத்தியபிறகு அ.தி.மு.க. தொண்டர்கள் உறுதிமொழி ஏற்கப்படுகிறது.
இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–
நினைவு நாள்
கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் மேலான அறிவிப்பிற்கிணங்க, அ.தி.மு.க. நிரந்தரப் பொதுச் செயலாளர், முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் முதலாமாண்டு நினைவு நாளான டிசம்பர் 5-ந் தேதி அன்று நினைவு நாள் அமைதி ஊர்வலம், நினைவு அஞ்சலி, உறுதிமொழி ஏற்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருஉருவச் சிலை அருகே, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சரும் ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கழக உடன்பிறப்புகளோடு நினைவு நாள் அமைதி ஊர்வலம் காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, அம்மாவின் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி, அம்மாவின் வழியில் அரசியல் பயணம் தொடர்ந்திட கழக உடன்பிறப்புகளோடு உறுதிமொழி ஏற்பர்.
அணி திரண்டு வாரீர்
இந்த நிகழ்ச்சிகளில் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூராட்சி, வட்ட, கிளை, வார்டுக் கழக நிர்வாகிகள், ஊராட்சிக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம்,
வழக்கறிஞர் பிரிவு.
சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகளும், கூட்டுறவு அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகளும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளாக பங்கு பெறுவார்கள்.
கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இவ்வாறு அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




Leave a Reply