BREAKING NEWS

ஜிப்மர் கல்லூரி நுழைவுத்தேர்வு- 200 இடங்களுக்கு 1,97,751 பேர் விண்ணப்பம்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் நுழைவுத்தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது.

நுழைவுத்தேர்வு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் 2018 ஆண்டிற்கான எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு இன்று 3ஆம் தேதி காலை மற்றும் மதியம் என இரண்டு வேளைகளாக நடைபெற உள்ளது. இதில் பங்குபெற 1,97,751 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வு இந்தியாவில் 130 நகரங்களில் உள்ள 291 மையங்களில் நடைபெற உள்ளது. 200 இடங்களுக்கான இந்த நுழைவுத்தேர்வில், 150 இடங்கள் புதுச்சேரியில் உள்ள ஜிப்மருக்கும், 50 இடங்கள் காரைக்கால் கிளைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அடையாள அட்டை

புதுச்சேரியில் உள்ள 7 மையங்களில் 1,925 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். நுழைவுத் தேர்வில் காலையில் 1,01,321 மாணவர்களும், மதியம் 96,424 மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுகள் காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரையும், மதியம் 3.00 மணி முதல் 5.30 மணி வரையும் நடக்க உள்ளது. காலை 9.30 மணிக்கு மேல் மற்றும் பிற்பகல் 2.30 மணிக்கு மேல் தாமதமாக வரும் மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படும். மாணவர்கள் தேர்வு நுழைவு சீட்டு மற்றும் ஆதார்கார்டு, இ-ஆதார்கார்டு, பாஸ்போர்ட் (அசல் மற்றும் நகல்) ஆகிய அடையாள அட்டை கொண்டுவர கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. தேர்வு நுழைவு சீட்டு மற்றும் அடையாள அட்டை கொண்டுவர தவறிய மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மின்னணு பொருட்கள்

செல்போன், கால்குலேட்டர், கைகடிகாரம், இயர் போன் மற்றும் மின்னணு பொருட்கள் எதையும் தேர்வு அறைக்குள் எடுத்துவர அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் குறிப்பிட்டுள்ள கருவிகளை பாதுகாப்பாக வைத்திருத்தல் மற்றும் திரும்ப பெறுதல் ஆகியவற்றுக்காக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளபடமாட்டாது. மாணவர்கள் தங்களது உடமைகளை பாதுகாப்பாக வைத்திருப்பது முற்றிலும் அவர்களது பொறுப்பு.

ஊனமுற்றோருக்காக தரை தளத்தில் தேர்வு எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.

கலந்தாய்வு

தேர்வு முடிவுகள் ஜுன் 20ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் இறுதி வாரத்தில் நடைபெற உள்ளது. வகுப்புகள் ஜுலை 4ஆம் தேதியிலிருந்து துவங்கவுள்ளது. மேலும் இதுகுறித்த தகவல்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.




Leave a Reply