BREAKING NEWS

சொத்து குவிப்பு வழக்கு மத்திய கலால் வரித்துறை அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை.

 

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் மத்திய கலால் வரித்துறை அதிகாரி மற்றும் அவரது மனைவிக்கு தலா நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சொத்து குவிப்பு

சென்னையில் உள்ள மத்திய கலால் வரித்துறை 4 ஆவது பிரிவு அலுவலகத்தின் தணிக்கைத் துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் முத்துக்குமாரசாமி.

இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரையிலான பணிகாலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.40 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பிலான சொத்துக்களை வாங்கியது மத்திய புலனாய்வு குழுவிற்கு (சி.பி.ஐ.) தெரியவந்தது.

4 ஆண்டு சிறை

இதற்கு முத்துக்குமாரசாமியின் மனைவி கிருஷ்ணாபாய் உடந்தையாக இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கின் விசாரணை சென்னையில் உள்ள 14 ஆவது சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வசந்தி, குற்றம்சாட்டப்பட்ட முத்துக்குமாரசாமி மற்றும் அவரது மனைவி கிருஷ்ணாபாய் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், இருவருக்கும் சேர்த்து ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில், அதிகாரிக்கு தண்டனை வழங்கப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

——




Leave a Reply