BREAKING NEWS

 சொத்துவரி 50 சதவீதமாக குறைப்பு –  அரசாணையை மாற்றி, தமிழக அரசு உத்தரவு.

 

 

 

தமிழக அரசு சமீபத்தில் சொத்துவரியை 100 சதவீதமாக உயர்த்தியது. இதை குறைக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் விடுத்த கோரிக்கையை ஏற்று 50 சதவீதமாக குறைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் வெளியிட்டது

சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள குடியிருப்புகள், வாடகை குடியிருப்புகள், வணிகம்-தொழிற்சாலை கட்டிடங்களுக்கு சொத்துவரியை உயர்த்தியது. இதற்கான அரசாணையை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது. இதில், குடியிருப்பின் உரிமையாளர்களுக்கு 50 மிகாமலும், வாடகை குடியிருப்புக்கு 100 சதவீதம் மிகாமலும் சொத்துவரி செலுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

குறைக்க கோரிக்கை

இதற்கு குடியிருப்பின் உரிமையாளர்கள், வாடகை இருப்பவர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சொத்துவரியை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதே போல வீட்டின் உரிமையாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, உயர்த்தப்பட்ட 100 சதவீத சொத்துவரி 50 சதவீதமாக அரசு குறைத்துள்ளது. அதன்படி, உரிமையாளர் குடியிருப்புக்கும், வாடகை குடியிருப்புக்கும் ஒரே சீராக 50 சதவீதம் சொத்துவரி வசூலிக்கப்படவுள்ளது.

அரசு செய்தி குறிப்பு

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் பிற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி பொது சீராய்வு 2018-19-ம் ஆண்டு முதலாவது அரையாண்டு முதல் அரசாணை எண்.73, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நாள்:19.7.2018ன்படி உரிமையாளர் குடியிருப்புகளுக்கு 50 சதவீதத்திற்கு மிகாமலும், வாடகைதாரர் குடியிருப்புகளுக்கு 100 சதவீதத்திற்கு மிகாமலும், குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீதத்திற்கு மிகாமலும் மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டது.

20 ஆண்டுகள் உயர்த்தவில்லை

சொத்து வரி சட்ட விதிகளின்படி, ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் சீராய்வு செய்யப்பட வேண்டும். ஆனால், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 1998-ம் ஆண்டு சொத்து வரி சீராய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னர் 2003, 2008, 2013 என கடந்த 20 ஆண்டுகளாக சொத்து வரி சீராய்வு மேற்கொள்ளவில்லை. 2008-ம் ஆண்டு சென்னை மாநகராட்சியை தவிர ஏனைய உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி சீராய்வு மேற்கொள்ளப்பட்டது. 2013-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய சொத்து வரி சீராய்வு மேற்கொள்ளப்படவில்லை. தற்போது 2018-ம் ஆண்டு சொத்து வரி சீராய்வு செய்யப்பட வேண்டும்.

நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம் 17.7.2018 அன்று வழங்கிய வழிகாட்டுதலில் சொத்து வரி சீராய்வு சம்மந்தமாக இரண்டு வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என அரசிற்கு உத்தரவிட்டது.

இதற்கு முன்பு சென்னை மாநகராட்சியில் 1993-ம் ஆண்டு சொத்து வரி பொது சீராய்வு செய்யப்பட்டது. 1998-ம் ஆண்டில் சொத்து வரி சீராய்வின்படி குடியிருப்பு பகுதிகளுக்கு        50 சதவீதத்திற்கு மிகாமலும், குடியிருப்பு அல்லாத பகுதிகளுக்கு 100 சதவீதத்திற்கு மிகாமலும் சீராய்வு மேற்கொள்ளப்பட்டது.

சீராய்வு

தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 1998-ம் ஆண்டு சொத்து வரி சீராய்வின்படி உரிமையாளர் குடியிருப்பு பகுதிகளுக்கு 50 சதவீதத்திற்கு மிகாமலும், வாடகைதாரர் குடியிருப்பு பகுதிகளுக்கு 100 சதவிதத்திற்கு மிகாமலும், வணிகம்-தொழிற்சாலை கட்டிடங்களுக்கு 150 சதவீதத்திற்கு மிகாமலும் சீராய்வு மேற்கொள்ளப்பட்டது. 2008-ம் ஆண்டில் குடியிருப்பு பகுதிகளுக்கு 25 சதவீதத்திற்கு மிகாமலும், வணிக கட்டிடங்களுக்கு 150 சதவீதத்திற்கு மிகாமலும் மற்றும் தொழிற்சாலை கட்டிடங்களுக்கு 100 சதவீதத்திற்கு மிகாமலும் சீராய்வு மேற்கொள்ளப்பட்டது.

அரசாணை

தமிழ்நாடு அரசு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி சீராய்வு மேற்கொள்வது குறித்து பரிசீலனை மேற்கொண்டு இந்திய நாட்டில் பிற நகரங்களில் உள்ள சொத்து வரி விதிப்புகளை ஒப்பிட்டு, தமிழக மக்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் நகரப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நிதி அமைப்பினை உயர்த்தவும், உரிமையாளர் குடியிருப்பு பகுதிகளுக்கு 50 சதவீதத்திற்கு மிகாமலும், வாடகைதாரர் குடியிருப்பு 100 சதவீதத்திற்கு மிகாமலும், குடியிருப்பு அல்லாத பகுதிகளுக்கு 100 சதவீதத்திற்கு மிகாமலும் சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டது.

மேலும், சொத்து வரி சீராய்வு என்பது 2018-19 முதலாம் அரையாண்டு முதல் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படவுள்ளது, முன்தேதியிட்டு வெளியிடப்பட்ட அரசாணை இல்லை என்பதால், புதிய வரி விகிதம் முன்தேதியிட்டு வரி செலுத்த தேவையில்லை.

நிதிச்சுமை ஏற்படும்

தற்போது வாடகைதாரர் குடியிருப்புகளுக்கு 100 சதவீதத்திற்கு மிகாமலும் சொத்து வரி சீராய்வு மேற்கொள்வது குறித்து பொது மக்கள், பல்வேறு குடியிருப்பு பொது நலச்சங்கங்கள், பல்வேறு நல அமைப்புகள் ஆகியோரிடமிருந்து வாடகைதாரர் குடியிருப்பு பகுதிகளுக்கு உயர்த்தப்படும் சொத்து வரி குறைக்கக் கோரி அரசிற்கு அனுப்பிய கோரிக்கைகளில் இந்த உயர்வு நிதிச் சுமையும், நடைமுறைச் சிரமங்களையும் ஏற்படுத்தும் என தெரிவித்தனர்.

அரசாணை திருத்தம்

இதை அரசு கனிவுடன் பரிசீலித்து, சென்னை மாநகரம் மற்றும் பிற நகர் பகுதிகளில் பல்வேறு குடியிருப்புகளில் வசிக்கும் வாடகைதாரர்களுக்கு கூடுதல் நிதி சுமை இருக்கும் என்பதாலும், வாடகை குடியிருப்புகளுக்கான வரி உயர்வு 100 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக குறைத்து திருத்திய ஆணைகள் அரசால் வெளியிடப்படுகிறது. இதன் மூலம் உரிமையாளர் குடியிருப்பு மற்றும் வாடகைதாரர் குடியிருப்பு இரண்டிற்கும் சொத்து வரி ஒரே விகிதத்தில் அதாவது 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்கும்.

தமிழகத்தில் வரி குறைவு

தற்போது மேற்கொள்ளப்படவுள்ள சொத்து வரி உயர்வின் பொருள் என்பது குடியிருப்பு பகுதிகளுக்கு 50 சதவீதத்திற்குள்ளும், குடியிருப்பில்லாத பகுதிகளுக்கு 100 சதவீதத்திற்குள்ளும் என்பதே ஆகும். இந்த வரி சீராய்வு அரசாணை தெரிவித்துள்ள வரி சதவீதத்திற்குள் தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் வரியினை நிர்ணயிப்பார்கள். இவ்வாறு உயர்த்தப்பட்ட வரி என்பது பிற மாநிலங்களில் உள்ள நகரங்களில் விதிக்கப்படும் சொத்துவரியினைவிட ஒப்பீடும்போது குறைவு எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply