தற்போதைய செய்திகள்

சேலம் ஏற்காடு கோடை விழா மலர்க்காட்சி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

சேலம் ஏற்காடு கோடை விழா மலர்க்காட்சி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
கண்கவர் வண்ண மலர்கள்-காய்-கனி காட்சிகள்
சேலம்.ஏற்காட்டில் 43-வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க் காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.43-வது கோடை விழா.

ஒவ்வொரு ஆண்டும் சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டில் கோடை விழாவும் மலர்க் காட்சியும் நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான, ‘43-வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்காட்சி விழா’ வை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

ஏரிப்பூங்கா

இந்த நிகழ்ச்சியின் போது, ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் ரூ.25 லட்சம் மதிப்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் நினைவு வளைவு அமைக்கும் பணிக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார். ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ஏரிப்பூங்கா நடைபாதையையும் முதல்வர் திறந்து வைத்தார்.

தலைமைச் செயலகம்

இதைத் தொடர்ந்து, ஏற்காட்டில் தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள காய்-கனி கண்காட்சி, தலைமைச் செயலகம் போல கண்கவர் வண்ண மலர்களால் அலங்கரித்து அமைக்கப்பட்டுள்ள மலர் காட்சி உள்ளிட்டவைகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

அமைச்சர்கள் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், வெல்லமண்டி என்.நடராஜன், இரா.துரைக்கண்ணு, வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் சுகன்தீப் சிங் பேடி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் சுப்பையன், சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
Leave a Reply