BREAKING NEWS

சென்னை மாநகராட்சி  லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை கூண்டோடு மாற்ற வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு.


சென்னை மாநகராட்சியில் எந்த வேலையும் லஞ்சம் தராமல் நடப்பதில்லை என உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்தார். சென்னை மாநகராட்சியின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை கூண்டோடு மாற்ற உத்தரவிட்டார்.

மருத்துவமனை

சென்னை ஷெனாய் நகர் பகுதியில் வசிக்கும் லட்சுமி என்பவர் தன் வீட்டின் முன்புறம் தனியார் மருத்துவமனை சார்பில் மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டரை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த 14-ந் தேதி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நேரில் ஆஜராகி இருந்தார். மாநகராட்சி எல்லைக்குள் சட்டவிரோத கட்டுமானங்கள், ஆக்கிரமிப்புகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பட்டியலிட்டார்.

அதிருப்தி

மாநகராட்சி நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதி, சட்டவிரோத கட்டுமானங்களைத் தடுக்க மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது சென்னை மக்களை விரக்தி அடையச் செய்துள்ளதாக வேதனை தெரிவித்தார்.

கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்திய நீதிபதி, மாநகராட்சி எல்லைக்குள் விதிகளைப் பின்பற்றி கட்டிட ஒப்புதல்கள் வழங்கப்படுகிறதா, சட்ட விரோத கட்டுமானங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்துப் பதிலளிக்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

மேலும் ஊழல் நடவடிக்கைகள் மலிந்து விட்டதாகச் சுட்டிக்காட்டிய நீதிபதி, ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மாநகராட்சி அதிகாரிகள் சொத்து விவரங்கள், ஊழலைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள், மாநகராட்சி ஊழல் கண்காணிப்பு பிரிவின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

கட்டிட ஒப்புதல்

லஞ்சம் கொடுக்காமல் கட்டிட ஒப்புதல் உள்ளிட்ட எந்தச் சான்றிதழும் பெற முடியாத நிலை உள்ளதால் மக்கள் விரக்தி அடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, நிலுவையில் உள்ள சொத்து வரியை வசூலிக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிப்பதாக லோக் அதாலத் ஆய்வுக் கூட்டத்தில் உத்தரவாதம் அளித்தும், எந்த வித நடவடிக்கைகளும் எடுக்காத அதிகாரிகள் மீது மாநகராட்சி ஆணையர் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளார் என அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.

கேமரா

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சியின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அனைவரையும் மாற்றிவிட்டு புதிய அதிகாரிகளை நியமிக்க உத்தரவிட்டார். புதிய அதிகாரிகளை 4 வாரத்தில் நியமிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.

மாநகராட்சியின் அலுவலகங்களில் சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும், லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்கிற வாசகங்கள் அனைத்து இடங்களில் இருக்க வேண்டும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும், அப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பகிரங்கமாக ஊடகங்களில், பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

சிறப்பு குழு

சென்னை மாநகராட்சியில் கட்டப்பட்டு வரும் விதிமீறிய கட்டிடங்களில் அனுமதி இல்லாத கட்டிடங்கள் மீது குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அது குறித்த அறிக்கையை 12 வாரத்திற்குள் அளிக்க உத்தரவிட்டார். சென்னை மாநகராட்சி லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு குழுக்கள் அமைத்து அடிக்கடி சோதனை நடத்த உத்தரவிட்டார்.

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்து விபரங்களை பெற்று பணியில் சேரும் முன் அவர்களுக்கு இருந்த சொத்து விபரத்தையும் ஒப்பிட்டு முறைகேடு ஏதேனும் இருந்தால் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதி இதுகுறித்து 12 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

\




Leave a Reply