BREAKING NEWS

சென்னை தனியார் மருத்துவமனையில் டாக்டர்கள் தொடர் கண்காணிப்பில் கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை –  தமிழக ஆளுநர், அகில இந்திய தலைவர்கள் உடல் நலம் விசாரித்தனர்.

 

இல்லத்தில் சிகிச்சை

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சிறுநீர் பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு கோபாலபுரம் இல்லத்திலேயே மருத்துவர்கள் குழு கடந்த 26-ந் தேதி சிகிச்சையளித்து கண்காணித்து வந்தது.

துணை முதல்வர்

இதையறிந்த, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார் ஆகியோர் அன்றைய தினமே கருணாநிதி இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடல் நலம் குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தனர்.

தவிர, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கோபாலபுரம் வந்து கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்து சென்றனர். பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா உள்ளிட்ட தலைவர்களும் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

வீட்டுக்கு புறப்பட்டனர்

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் பேசுகையில், ‘கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, யாரும் வதந்திகளை நம்பவேண்டாம்’ என்றார். இதைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்தில் இருந்து ஆழ்வார்பேட்டையிலுள்ள தனது வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். அதே போல துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்களும் புறப்பட்டுச் சென்றனர்.

ரத்த அழுத்தம் குறைந்தது

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு கருணாநிதிக்கு திடீரென்று ரத்த அழுத்தம் குறைந்தது. இந்த தகவலை அறிந்ததும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கோபாலபுரம் இரவு 12.30 மணிக்கு வந்தனர். இதையடுத்து, கருணாநிதி ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

ரத்த அழுத்தம் சீரானது

மருத்துவமனையில் அனுமதித்து, முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ரத்த அழுத்தம் குறைவு காரணமாக கருணாநிதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பிறகு ரத்த அழுத்தம் சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையறிந்த, தி.மு.க.வினர் சற்று ஆறுதல் அடைந்தனர்.

ஆளுநர் வந்தார்

இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று காலை மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் இருந்த மு.க.ஸ்டாலினை சந்தித்த அவர், கருணாநிதியின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அப்போது கருணாநிதியின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார். மருத்துவர்களும் கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆளுநரிடம் விளக்கி கூறினர்.

காங். தலைவர்கள்

இதைத் தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோரும் நேற்று பகல் 11.45 மணிக்கு மருத்துவமனைக்கு வந்தனர்.

அவர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதி உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர். குலாம்நபி ஆசாத்துடன் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, புதுச்சேரி சபாநாயகர் வைத்தியலிங்கம் உள்ளிட்ட தலைவர்களும் உடன் வந்திருந்தனர்.

நிர்மலா சீதாராமன்

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் நேற்று மருத்துவமனைக்கு நேரில் வந்தார். அங்கு மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதி உடல் நலம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் இரா.முத்தரசன், நடிகர் பிரபு, டி.டி.வி. தினகரன், டாக்டர் எச்.வி.ஹண்டே உள்ளிட்டவர்களும் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.

தொண்டர்கள் குவிந்தனர்

தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் மற்றும் முன்னணித் தலைவர்கள் துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்டவர்களும் கருணாநிதி மகள் கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் மருத்துவமனைக்கு வந்தனர். கருணாநிதியின் உடல் நலம் குறித்து அறிந்து கொள்வதற்காக ஏராளமான திமுகவினர் மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர். கருணாநிதி உடல் நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் எதிர்மறையான செய்திகள் பரவி வரும் நிலையில், அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என தொண்டர்கள் பிரார்த்தனை செய்தவண்ணம் உள்ளனர்.

——-

(பாக்ஸ்)

உடல் நிலையில் முன்னேற்றம்

மருத்துவ அறிக்கையில் தகவல்

——

காவேரி மருத்துவமனை சார்பில் கருணாநிதி உடல் நிலை குறித்து நேற்று வெளியிட்ட அறிக்கை விவரம் வருமாறு:-

“கருணாநிதிக்கு திடீரென ஏற்பட்ட ரத்த அழுத்த குறைவு காரணமாக 28-ந் தேதி அதிகாலை 1.30 மணிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் தற்போது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் ரத்த அழுத்தம் சீராக உள்ளது. தொடர்ந்து கருணாநிதியின் உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ச்சியாக கண்காணித்து வருவதாகவும்’’ மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply