BREAKING NEWS

சென்னை-சேலம் 8 வழி சாலையை எதிர்த்து மக்களை திரட்டி பா.ம.க. போராட்டம் நடத்தும் – ராமதாஸ் அறிவிப்பு.

சென்னை- சேலம் 8 வழி சாலையை எதிர்த்து மக்களை திரட்டி பா.ம.க போராட்டம் நடத்தும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

போராட்டம்

சென்னையிலிருந்து சேலத்திற்கு 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் இந்த நெடுஞ்சாலையை அமைப்பதற்காக பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த வேண்டியிருக்கும்.

அத்திட்டத்திற்கு எதிராக 5 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் மிகவும் நியாயமானது. போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

மக்கள் நலன்

வளர்ச்சித் திட்டங்கள் எனப்படுபவை மக்களுக்கானவையாக இருக்க வேண்டும். மாறாக, தனியார் கார்ப்பரேட் நிறுவங்களின் நலனுக்கானவையாக இருக்கக் கூடாது. அந்த வகையில் கார்ப்பரேட் நிறுவனத்தின் நலனுக்கான சென்னை- சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. மக்களும் அனுமதிக்க மாட்டார்கள்.

இத்திட்டத்திற்கு எதிராக போராடி வரும் 5 மாவட்ட மக்களையும் ஒருங்கிணைத்து மாபெரும் மக்கள் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும். அத்தகைய போராட்டத்துக்கு இடம் தராமல் பசுமைச் சாலைத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




Leave a Reply