BREAKING NEWS

சென்னை-சேலம் சாலையை மாற்று வழியில் செயல்படுத்த நிபுணர் குழு அமைக்க வேண்டும் – தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

நிலங்கள், மலைகள், நீர் ஆதாரங்கள் பாதிக்கப்படாத வகையில், சென்னை-சேலம் பசுமை வழிச்சாலையை மாற்று வழியில் செயல்படுத்த ஒரு நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்  வெளியி்ட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பசுமை வழிச்சாலை

சென்னை- சேலம் எட்டு வழி பசுமை விரைவுச்சாலை அமைக்கும் திட்டத்தை காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்ட விவசாயிகள், தங்களின் பாரம்பரிய விளைநிலங்கள் பறிபோகின்றன என்று மிகக்கடுமையாக எதிர்க்கிறார்கள். எங்களின் பிணங்கள் மீது விளை நிலங்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கண்ணீர் சிந்தி போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால், அரசு காவல்துறை துணையுடன் விவசாய நிலங்களுக்குள் கல் ஊன்றிச் செல்வது அங்குள்ள விவசாயிகளுக்கு ஆத்திரத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

பிண்ணனி என்ன?

எட்டு வழிச் சாலை அமைப்பதால், 8,000 ஏக்கர் விளை நிலம் பாதிக்கப்படும். 500 ஏக்கர் வனப்பகுதி அழிக்கப்படும். எட்டு மலைகளை அழிக்க வேண்டியதிருக்கும் என்று விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் போராடும் வேளையில், அவர்களின் கருத்துகளையும் கேட்காமல், எப்படியும் நிறைவேற்றியே தீருவேன் என்று முதலமைச்சர் அதீத ஆர்வமும், அளவில்லா வேகமும் காட்டுவதன் பின்னணி என்ன?

பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர் ஆதாரங்களை அழித்து மண்மேடாக்கி நிறைவேற்ற துடிப்பது ஏன்? நியாயமான கருத்துகளைச் சொல்லும் மக்களை கைது செய்வதையும், மிரட்டுவதையும் நிறுத்தாதது ஏன்? இந்த அராஜகப் போக்கு கண்டனத்திற்குரியது. ஐந்து மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் முக்கியம் என்பதை முதல்வர் உணர வேண்டும்.

நிபுணர் குழு

விவசாய நிலங்களோ, நீர் ஆதாரங்களோ, மலைகளோ பாதிக்கப்படாத வகையில், சென்னை-சேலம் பசுமை விரைவு சாலைத் திட்டத்தை மாற்று வழியில் நிறைவேற்ற திட்டத்தைத் தயாரிப்பதற்கு அல்லது இப்போது பயன்பாட்டில் உள்ள சாலைகளில் ஒன்றை அகலப்படுத்துவதற்கான திட்டத்தைத் தயாரிப்பதற்கு, உடனடியாக ஒரு நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்.

அ.தி.மு.க. அரசு தொடர்ந்து இதே பாதையில் திட்டத்தைப் பிடிவாதமாக நிறைவேற்றவும், மக்களின் விளை நிலங்களை பறிக்க முயன்றால், இந்தத் திட்டம் தொடர்புடைய அனைத்து மாவட்டங்களிலும் தி.மு.க. போராட்டத்தை நடத்தும். முதலமைச்சர் குறுகலான ஒருவழிப்பாதை அணுகுமுறையைக் கட்டாயம் தவிர்த்திட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply