BREAKING NEWS

சென்னை ஐ.ஐ.டி. தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

சென்னை ஐ.ஐ.டி. வைர விழாவிற்கான நிகழ்ச்சி நிரலில், தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு ஐ.ஐ.டி. நிர்வாகம் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு

சென்னை ஐ.ஐ.டி.யின் வைர விழா நிறைவுக் கொண்டாட்டங்கள் நாளை நடைபெற உள்ளது. இதற்காக அழைப்பிதழில் இடம்பெற்றுள்ள நிகழ்ச்சி நிரலின்படி, வைர விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படாது என்று உணர்த்தப்பட்டிருக்கிறது. விழாவின் தொடக்கத்தில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படும் என்றும், விழாவில் நிறைவில் தேசிய கீதம் பாடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக எந்தக் குறிப்பும் இல்லாததால் அப்பாடல் இசைக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் நடைபெறும் எந்தவொரு அரசு விழாவாக இருந்தாலும், அந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்க வேண்டும் என்பது விதி. வரலாற்றுச் சிறப்புமிக்க வைர விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுவது தமிழுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அவமதிப்பு.

திட்டமிட்டு அவமதிப்பு

ஐ.ஐ.டி. விழாவில் தமிழ் புறக்கணிக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த ஆண்டு அப்போதைய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்ட விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் அனைத்து விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து கண்டிப்பாக பாடப்படும் என்று வாக்குறுதி அளித்ததால் சர்ச்சை முடிவுக்கு வந்தது.

ஆனால், கடந்த ஆண்டு அளித்த வாக்குறுதிக்கு மாறாக, இப்போது மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுகிறது என்றால், திட்டமிட்டு இழைக்கப்படும் அவமதிப்பு என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஐ.ஐ.டி. அமைப்பதற்காக நிலத்தை முழுமையாக வழங்கியது மாநில அரசு தான். தமிழகத்தில் அமைந்துள்ள ஐ.ஐ.டி. தமிழுக்கும், தமிழர்களின் உணர்வுகளுக்கும் எதிராக செயல்படுவதை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

மன்னிப்பு

நாளை நடைபெறவுள்ள வைர விழாவுக்கான அழைப்பிதழில் தமிழ்த்தாய் வாழ்த்து பற்றிய குறிப்புகள் இடம் பெறாததை தெரியாமல் நடந்த தவறாக பார்க்காமல், தெரிந்தே செய்யப்பட்ட குற்றமாகக் கருதி உரிய வழிகளில் விளக்கம் கேட்டு தமிழக அரசு கண்டிக்க வேண்டும். தமிழை அவமதித்ததற்காக ஐ.ஐ.டி. நிர்வாகம் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நாளை நடைபெறவுள்ள வைர விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply