தற்போதைய செய்திகள்
MKSTALIN

சென்னையில் தடையை மீறி திடீர் மறியல்-மு.க. ஸ்டாலின் உள்பட 3 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு…

சென்னை,
தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட 3 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த நிலையில் மத்திய அரசு, அந்த குறிப்பிட்ட காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், ஒழுங்காற்று குழுவை அமைப்பதாக கூறியது.
மாநிலம் தழுவிய போராட்டம்
மேலும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள ஸ்கீம் என்ற ஆங்கில வார்த்தைக்கு விளக்கம் கேட்டு நீதிமன்றத்தை நாடியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த காலக்கெடு கடந்த மாதம் 29-ந் தேதியோடு முடிவடைந்து விட்டது.
இதையடுத்து தமிழக எதிர்கட்சி தலைவரான மு.க. ஸ்டாலின், அனைத்துக் கட்சி கூட்டத்தை கடந்த 1ந் தேதி கூட்டினார். அதன்படி 5ந் தேதி (அதாவது நேற்று முன்தினம்) மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஸ்டாலின் பேரணி
இந்த நிலையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் எதிர்கட்சிகள் நேற்று ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் திடீரென சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலை அருகே தனது ஆதரவாளர்களுடன் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதைதொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சிலையை நோக்கி பேரணியாக சென்றனர். அவருடன் விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். ‘‘காவிரி மேலாண்மை வாரியம்’’ அமைத்திடு என்று என்ற கோஷத்துடன் அவர் கருப்பு கொடியே ஏந்திக் கொண்டு ஸ்டாலின் பேரணியாக சென்றார்.
திடீர் மறியல்
சேப்பாக்கம் மைதானம் அருகில் மு.க. ஸ்டாலின் உள்பட மற்ற தலைவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் மு.க. ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன், கே.வி. தங்கபாலு உள்ளிட்ட அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலினை, போலீசார் குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர்.
மேலும் திருநாவுக்கரசர், கே.வி. தங்கபாலு, திருமாவளவன் உள்ளிட்டவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டதால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. மு.க. ஸ்டாலினை கைது செய்யக் கூடாது என்று தி.மு.க. தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் போலீசாருக்கும் தி.மு.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
கைது- வழக்குப்பதிவு
கைது செய்யப்பட்ட தலைவர்கள் அனைவரும் புரசைவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் அண்ணா சாலையில் இருந்து பேரணியாக சென்று சேப்பாக்கம் அருகே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் திருநாவுக்கரசர் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் தொண்டர்கள் என 3 ஆயிரம் பேர் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பொது அமைதிக்குப் பாதிப்பு விளைவித்தல், தடையை மீறி போராட்டம் நடத்தியது, போக்குவரத்து செயல்பாட்டிற்கு இடையூறு செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
பொதுமக்கள் பாதிப்பு
அண்ணாசாலை மற்றும் கடற்கரை சாலைகளிலும் தடையை மீறிய போராட்டத்தில் திமுக மற்றும் பல்வேறு கட்சியினர் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply