தற்போதைய செய்திகள்

சென்னையில் கோலாகல கொண்டாட்டம்:தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழா முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு…..

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விழா நேற்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

ஓராண்டு நிறைவு

தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கு பிறகு, தமிழக அரசியலில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கடந்த 2017ம் ஆண்டு தமிழகத்தில் உருவானது. இதனையடுத்து, தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அமைந்து கடந்த பிப்ரவரி மாதம் 16ந் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்கள் மூலம் தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தியது. மேலும், பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

நலத்திட்ட உதவிகள், அடிக்கல் நாட்டு விழாக்கள், கோப்புகள்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கடந்த ஓராண்டுகளில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்கள் தமிழகத்தின் 30 மாவட்டங்களில் கொண்டாடப்பட்டது. இந்த விழாக்களில், முதல்வர் முழுமையாக நிறைவடைந்த 2,319 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அவற்றின் மதிப்பு ரூபாய் 5,127 கோடி ஆகும். மேலும், ரூபாய் 5,712 கோடி மதிப்பிலான 3,200 நலத்திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 11,483 பயனாளிகளுக்கு ரூபாய் 5, 397 ேகாடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளார்.

மேலும், அரசு விழா மற்றும் காணொலி காட்சி மூலமாக ரூபாய் 11,827 கோடி மதிப்பிலான 35,819 பணிகளை திறந்து வைத்துள்ளார். மேலும், ரூபாய் 8,837 கோடி மதிப்பிலான 6,411 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். எடப்பாடி பழனிசாமி முதல்–-அமைச்சராக பொறுப்பேற்ற கடந்த ஓராண்டில், 5,208 கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனை விழாவாக கொண்டாட, தமிழக அரசின் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

ஓராண்டு சாதனை விழா

இதனையடுத்து, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவுக்கு சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமை தாங்கினார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்புரை ஆற்றினார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் வாழ்த்துறை வழங்கினர். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

பின்னர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. அரசின் கடந்த ஓராண்டு சாதனைகளை சிறப்பு மலர்கள், சாதனை விளக்கப்படங்கள், குறும்படங்கள், பாடல்கள், புகைப்படத் தொகுப்பு, முதல்வரின் உரைகள் மற்றும் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்புகளாக வெளியிட்டார். பின்னர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசின் சாதனைகளை பற்றி பேசினார். பின்னர், அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அறிவித்தார்.

சிறப்பு கண்காட்சி

இந்த விழாவில், தமிழக அரசின் சாதனைகளை பொதுமக்கள் அறிந்துகொள்வதற்காக சிறப்பு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த கண்காட்சியில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, பள்ளிக்கல்வித்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை,

எரிசக்தித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, உயர்கல்வித் துறை, தொழில்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை, கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, வேளாண்மைத் துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை.

அமைச்சர்கள், எம்.பி.க்கள் பங்கேற்பு

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையங்கள் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆகிய துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டப்பணிகள், அளிக்கப்பட்ட நிதி உதவிகள் ஆகியன பற்றி இந்தக் கண்காட்சியில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக இந்த கண்காட்சி ஒரு வாரகாலத்துக்கு நடைபெற உள்ளது. இந்த விழாவில், அமைச்சர்கள், எம்.பி.க்கள், மற்றும் அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Leave a Reply