தற்போதைய செய்திகள்

சென்னையில் ஐ.பி.எல். 2018 கிரிக்கெட் – விறுவிறுப்பான டிக்கெட் விற்பனை….

சென்னை,
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று அதிகாலையில் இருந்து விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந் தேதி முதல் மே 27-ந் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல். போட்டியில் விளையாடுகிறது. சூதாட்ட பிரச்சினை காரணமாக அந்த அணிக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. ஐ.பி.எல். போட்டியில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 7 ‘லீக்’ ஆட்டம் நடக்கிறது.
சேப்பாக்கத்தில் 10-ந் தேதி போட்டி
முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வருகிற 10-ந் தேதி கொல்கத்தா நைட்ரைடர்சை சந்திக்கிறது. இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது. இந்தப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று  காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதற்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,300 ஆகும். அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.6,500.
நீண்ட வரிசையில் ரசிகர்கள்
ரசிகர்கள் இதேபோல ரூ.2,500, ரூ.4,500, ரூ.5 ஆயிரம் விலையிலும் டிக்கெட்டுகள் விற்பனையானது. இந்த டிக்கெட் விற்பனை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. குறைந்தபட்சமான ரூ.1,300 டிக்கெட்டை வாங்க ரசிகர்கள் நீண்ட வரிசையில் குவிந்து நின்றனர். ஏராளமான ரசிகர்கள் இன்று அதிகாலையில் இருந்தே ஸ்டேடியம் முன்பு திரண்டனர்.
ஆன்லைனில் டிக்கெட் விற்பனை
விக்டோரியா சாலையில் உள்ள 6 நம்பர் பூத்தில் இதற்கான டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டது. குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,300 ஆக இருந்தாலும் அதை வாங்குவதில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். விலை உயர்வை பற்றி கவலைப்படாமல் ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கி சென்றனர்.இதேபோல ஆன்- லைனிலும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஒருவருக்கு 2 டிக்கெட்
இன்று காலை 9.30 மணியில் இருந்து மதியம் 12.30 வரை டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. இதை தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு விற்பனை தொடங்கியது. மாலை 6 மணி வரை டிக்கெட்டுகள் வழங்கப்படும். ஒருநபருக்கு 2 டிக்கெட்டுக்கு மேல் கொடுக்கப்படவில்லை. சேப்பாக்கத்தில் நடைபெறும் அடுத்த 6 ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் ஏப்ரல் 12 மற்றும் 22, மே 1 மற்றும் 6-ந் தேதிகளில் விற்பனை செய்யப்படும்.
Leave a Reply