BREAKING NEWS

சென்ட்ரல்-மீனம்பாக்கம் வரை புதிய மெட்ரோ ரெயில் கட்டணம் 70 ரூபாய் ஆட்டோ, கார் கட்டணத்தை விட குறைவு.

சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய ரூ.70 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆட்டோ கார் கட்டணத்தை விட குறைவாகும்

நேரு பூங்கா

சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 28 கி.மீ. தூரத்திற்கு பணிகள் முடிந்து மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேரு பூங்கா, எழும்பூர், சென்ட்ரல் (2.7 கி.மீ.) மற்றும் சின்னமலை-டி.எம்.எஸ். (4.5.கி.மீ) வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்களை இயக்க பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதையடுத்து இந்த 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவையை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் சென்ட்ரலில் இருந்து இனி நேரடியாக மீனம்பாக்கம் விமான நிலையம் வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடியும். 25 கி.மீ தூரமுள்ள இந்த வழித்தடத்தில் ஒரு மணி நேரத்தில் பயணம் செய்யலாம்.

2 வழிப்பாதை

சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை 2 வழிப்பாதையில் மெட்ரோ ரெயில் சேவை இனி செயல்படும். மே தின பூங்கா-ஏ.ஜி. டி.எம்.எஸ். இடையே ஒரு வழிபாதை மட்டுமே தற்போது நிறைவடைந்துள்ளது.சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய ரூ.70 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எழும்பூர், நேரு பூங்கா, ஷெனாய் நகர், அண்ணா நகர், கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்வதற்கு ஆட்டோ, காரை விட மிகு குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நீண்ட தூரம் செல்லக்கூடிய எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்திற்கு ரூ.60 கட்டணமும், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு ரூ.40 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சொகுசு பயணம்

எழும்பூரில் இருந்து கோயம்பேடு செல்ல ஆட்டோவில் ரூ.100-க்கு குறைவாக யாரும் வாங்குவது இல்லை. ரூ.40 கட்டணத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குள் மிக எளிதாக மெட்ரோ ரெயில் மூலம் சொகுசாக பயணம் செய்ய முடியும்.

சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு ரெயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் சேவை தற்போது தொடங்கி இருப்பதால் இனி பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயண நேரம்

இதே போல ஏ.ஜி.டி.எம்.எஸ்.-விமான நிலையம் வரை உள்ள 12 கி.மீ தூரத்திற்கு ரூ.50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் கட்டணம் அதிகமாக உள்ள நகரங்களில் சென்னை 2-வது இடமாக உள்ளது. ஆனாலும் சென்னையில் ஆட்டோ, கார் போன்றவற்றை பயன்படுத்தும் கட்டணத்தை விட இது குறைவாகும். பயண நேரம் குறைவாக இருப்பதால் மெட்ரோ ரெயிலை மக்கள் இனி அதிகம் விரும்புவார்கள். அண்ணா சாலையில் பணிகள் முடித்து சேவை தொடங்கும் போது இதை விட விரைவாக விமான நிலையம் செல்ல முடியும்.




Leave a Reply