BREAKING NEWS

சென்செக்ஸ் 37,000 புள்ளிகளை கடந்து சாதனை.


 

இந்திய பங்குச் சந்தைகளில் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் மிகவும் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இதையடுத்து, பங்குச் சந்தை வரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 37,000 புள்ளிகளை தாண்டி சாதனை படைத்தது.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை முடிவுகள், சந்தை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் அமைந்திருந்தன. இது பங்குச் சந்தைகளின் சாதனை ஏற்றத்துக்கு பக்கபலமாக அமைந்தது. மேலும், சர்வதேச நிலவரங்களைப் பொருத்தவரையில், ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தாதது, அமெரிக்கா-ஐரோப்பிய யூனியன் இடையே ஏற்பட்டுள்ள வர்த்தக பதற்றம் குறைவதற்கான நம்பிக்கையான அறிகுறிகள் தென்படுவது உள்ளிட்டவை இந்தியப் பங்குச் சந்தைகளின் விறுவிறுப்புக்கு உரமூட்டின.

வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் துறை குறியீட்டெண் 2.04 சதவீதமும், நுகர்வோர் சாதனங்கள் 2.03 சதவீதமும், உலோகம் 1.89 சதவீதமும், எண்ணெய்-எரிவாயு துறை குறியீட்டெண் 1.69 சதவீதமும் உயர்ந்தன. அதேசமயம், தகவல் தொழில்நுட்ப துறை குறியீட்டெண் மட்டும் சரிவை சந்தித்தது.

சென்செக்ஸில் இடம்பெற்றுள்ள டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை அதிகளவாக 3.56 சதவீதம் உயர்ந்தது. டாடா ஸ்டீல் 2.71 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 2.62 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ 2.24 சதவீதமும், ஆக்ஸிஸ் வங்கி 1.85 சதவீதமும், ஹீரோ மோட்டோகார்ப் பங்கின் விலை 1.79 சதவீதமும் உயர்ந்தன.

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 352 புள்ளிகள் அதிகரித்து வரலாறு காணாத சாதனை அளவாக 37,336 புள்ளிகளில் நிலைத்தது. கடந்த ஆறு மாதங்களில் சென்செக்ஸ் 36,000 புள்ளிகளிலிருந்து அதிகரித்து 37,000 புள்ளிகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி 111 புள்ளிகள் உயர்ந்து 11,278 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டியது.




Leave a Reply