தற்போதைய செய்திகள்

செனனை கடற்கரையில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் -“மாட்டுக்காக போராடிய நாங்கள் நாட்டுக்காக போராடுவோம்” மெரினா போராட்டக்காரர்கள் அறிவிப்பு….

சென்னை,

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து நேற்று சென்னை மெரீனா கடற்கரையில் பெண்கள், இளைஞர்கள் கைககளில் பதாகைகளுடன் போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைதானவர்கள், மாட்டுக்காக போராடிய நாங்கள், நாட்டுக்காக போராடுவோம் என்று கோஷங்களை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினர்.

தமிழகத்திற்கு எதிரான கருத்து

உச்சநீதிமன்றம் காவிரி நதிநீர்பங்கீடு தொடர்பாக, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. மேலும், அதற்காக ஆறு வாரகால அவகாசத்தையும் நிர்ணயித்தது. ஆனால், மத்திய அரசின் சார்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், மத்திய நீர்வளத்துறை அமைச்சரும், மத்திய நீர்வளத்துறை செயலரும் காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிரான கருத்துக்களையே தெரிவித்தனர்.

அ.தி.மு.க., எம்.பி.,க்கள் அமளி

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் காலக்கெடு கடந்த வியாழனோடு முடிவடைந்தது. ஆனால், மத்திய அரசின் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து விளக்கம் கோரும் மனுவை தாக்கல் செய்துள்ளது. இது தமிழக மக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி பாராளுமன்றத்தின் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

டெல்லியில் விவசாயிகள் கைது

காவரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி, டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். பல்வேறு அரசியல் கட்சியினரும், விவசாய அமைப்புகளும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஆளும் கட்சியான அ.தி.மு.க., சார்பில் ஏப்ரல் 3-ந் தேதி உண்ணாவிரதமும், கடை அமைப்பும், தி.மு.க., சார்பில் இன்று அனைத்துக் கட்சி கூட்டமும், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஏப்ரல் 4ல் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டமும் நடத்தப்படும் என்று அந்தந்த கட்சிகள் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மெரீனாவில் போராட்டம்

இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னை மெரினா கடற்கரையில் பெண்கள், இளைஞர்கள் கைகளில் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர் என சமூக வலைதலத்தில் நேற்று புகைப்படம் வைரலானது. இதனால், மெரீனாவில் பெண்கள், இளைஞர்கள் குவிகிறார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மெரினாவில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

போலீசார் குவிப்பு

மெரீனாவில் போராட்டம் நடத்த ஏற்கனவே போலீசார் தடை விதித்துள்ளனர். இதனால், நேற்று மெரீனாவில் போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றிருக்கலாம் என்பதால் அவர்களை போலீசார் ஜல்லடை போட்டு தேடினர். மேலும், அவர்கள் எந்த இடத்தில் போராட்டம் நடத்தினார்கள் என போலீசார் பல மணிநேரம் தீவிரமாக விசாரணை நடத்தினர். நீண்ட தேடுதலுக்கு பிறகு மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்திய பெண்கள், இளைஞர்களை போலீசார் கைது செய்து, இரண்டு ஜீப்புகளில் அழைத்து சென்றனர். இதனால், மெரீனா கடற்கரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வேடிக்கை பார்க்காதே தமிழகமே!

கைதான போராட்டக்காரர்கள், காவிரி ேமலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து, மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்தினர். விவசாயிகளை காப்போம். வேடிக்கை பார்க்காதே தமிழகமே, வீதிக்கு வந்து போராடு. ஏற்கனவே, மாட்டுக்காக(ஜல்லிக்கட்டுக்கு) போராடிய நாங்கள் நாட்டுக்காக போராடு என பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

போராட்டக்காரர்கள் கைது ஏன்?

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றம் மூலம் தடை பெற்றது. இந்த தடையை மத்திய, மாநில அரசுகள் நீக்க வேண்டும் என வலியுறுத்தி மாநில முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், அலங்காநல்லுார், பாலமேடு உள்ளிட்ட இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இது தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே கடந்த ஆண்டு ஜனவரி 17-ந் தேதி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரீனா கடற்கரையில் 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து சென்னை மெரீனாவில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து, நேற்று பெண்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டனர்.
Leave a Reply