BREAKING NEWS

செங்கல்பட்டு அருகே எரித்துக் கொல்லப்பட்டவர் சென்னை பெண் – போலீசார் விசாரணை.

செங்கல்பட்டு அருகே எரித்துக் கொல்லப்பட்ட பெண் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

எரித்து கொலை

கடந்த 28-ந் தேதி அதிகாலை செங்கல்பட்டு அடுத்த பழவேலி பகுதியில் பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டு கிடப்பதை ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்த போலீசார் கண்டறிந்தனர். இதனால் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற செங்கல்பட்டு தாலுகா போலீசார், எரிந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட அந்த பெண் யார் என்பது தெரியாத நிலையில், மர்மநபர்கள், அந்த பெண்ணை வேறு எங்காவது கொலை செய்து விட்டு உடலை இங்கு கொண்டு வந்து எரித்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கேரளா மாநிலத்தில் பத்தனம்திட்டா பகுதியில் காணாமல் போன ஜேஸ்னா மரியா ஜேம்ஸ் என்று போலீசாரால் சந்தேகிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கேரள மாநிலம் பத்தினம்திட்டா போலீசாரான ப்ரிஜீ, அஷ்ரப் மற்றும் ஜேஸ்னாவின் சகோதரர் ஜென்சன் அவனது நண்பரும் செங்கல்பட்டிற்கு விசாரணை மேற்கொள்ள வந்தனர்.

அண்ணாநகரை சேர்ந்தவர்

காலை 11.00 மணியளவில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்த அவர்கள் பிரேத பரிசோதனை செய்ய படாமல் இருந்த உடலை பார்த்தனர். பின்னர் வெளியே வந்த ஜென்சன் அந்த உடல் ஜேஸ்னா மரியா ஜேம்ஸ் அல்ல என்று தெரிவித்தார்.

போலீஸ் விசாரணையில் தொய்வு ஏற்பட்ட நிலையில் காணாமல் போனவர்களின் அடையாளங்களை வைத்து தேடி வந்ததனர். அப்போது உயிரழந்த பெண்ணின் பல்லில் உள்ள க்ளிப் மற்றும் முக்குத்தி ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்ததிலும், போலீசாரின் பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்பு உயிரிழந்த பெண் சென்னை அண்ணா நகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த அருள்தாஸ் என்பவரது மகள் பொக்கிஷா (வயது 31). இவர் கடந்த 26-ந் தேதி அன்று அன்று வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. பொக்கிஷா வீடு திரும்பாததையடுத்து அவரது தந்தை புகாரின் அடிப்படையில் அண்ணா நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணை

விசாரணையில் அவரது மோட்டார் சைக்கிளை கோயம்பேடு அருகே ஜெயின் நகர் பகுதியில் போலீசார் கண்டெடுத்துள்ளனர். இந்நிலையில் செங்கல்பட்டு அருகே கொலை செய்யப்பட்டது பொக்கிஷா என்பது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் அடையாளம் காணப்பட்ட நிலையில் போலீசார் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




Leave a Reply