BREAKING NEWS

சீன பால் பொருள்கள் இறக்குமதிக்கு தடை நீட்டிப்பு


 

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் பொருள்களுக்கு மேலும் ஆறு மாதங்களுக்கு தடையை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சாக்லெட்

இதுகுறித்து வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்ககம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மற்றும் பால் பொருள்களுக்கான (சாக்லெட், மிட்டாய், பாலாடைக்கட்டி அல்லது மூலப்பொருளாக பயன்படும் பால் திடப்பொருள் உள்பட) தடை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த தடை வரும் டிசம்பர் 23, 2018 வரை அமலில் இருக்கும் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் பொருள்களுக்கு கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பரில் முதன்முறையாக தடை விதிக்கப்பட்டது. அதற்கு, பிறகு நேரத்துக்கு ஏற்ப அவ்வப்போது இந்த தடை நீட்டிக்கப்பட்டு வந்தது.

நச்சு ரசாயனம்

இந்த நிலையில், டி.ஜி.எப்.டி-யின் இறுதியாக விதித்த தடை கடந்த ஜூன் 23-ந் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், மேலும் 6 மாதங்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில வகை பால் பொருள்களில் பிளாஸ்டிக் மற்றும் உரத் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மெலமைன் என்ற நச்சு ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அதன் இறக்குமதிக்கு மத்திய அரசு உடனடியாக தடை விதித்தது. சர்வதேச அளவில் பால் உற்பத்தி மற்றும் நுகர்வில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு 15 கோடி டன் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. பால் உற்பத்தியில், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்கள் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன.




Leave a Reply