BREAKING NEWS

சீன இந்திய உறவு – சிற்பத் தலைநகரில்

சீன அதிபரும் பாரதப் பிரதமரும் மாமல்லையில் கண்டு பேசும் நிகழ்ச்சி உலக வரலாற்றின் உன்னதமானதாகும் . ஒப்பற்ற தலைவர்களை வரவேற்கும் வகையில் தமிழகம் ஈடில்லாத மகிழ்ச்சி கொள்கிறது என்று நம் மாண்புமிகு முதலமைச்சர் பெருமிதமாகப் பாராட்டியுள்ளார் . உள்ளார்ந்த உணர்வோடு உற்சாக வரவேற்பு வழங்குவதாக தமிழக முதலமைச்சர் மாமல்லையை நட்புறவுக் களமாகத் தேர்ந்தெடுத்த பெருந்தலைவர்களுக்கு நாம் எப்போதும் நன்றி பாராட்டுவோம்.

 இந்த நிலையில், சீனம் பற்றிய சிந்தனையைப் பகிர்ந்து கொள்வோம் .
நீண்ட வரலாறும் நெடிய நிலப்பரப்பும் கொண்ட நாடு சீனம் ஆகும். தொன்மையில் பெருமை காணும் நாடுகளில் மாற்றங்கள் எளிதில் அமைவதில்லை.” பழையன கழிதலும் புதியன புகுதலும் “  என்று சொன்னாலும் வளமான சிந்தனைகள் ,  முதிர்ந்த முடிவுகள்  வெற்றி பெறும்போதுதான் நீக்கப்பட வேண்டியவைகளையும் , நிலைப் படுத்திக்கொள்ள வேண்டியனவும் , காத்துச் செழிப்பாக்குவது நாட்டுக்குப் புகழ் சேர்க்கும் .

ஒரு நாட்டின் வளர்ச்சி மக்கள்தொகை , இயற்கை வளம் , அரசியலமைப்பு, பொருளாதாரச் செழிப்பு , கல்வி மேம்பாடு, மகளிர் நலம்  ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது . மக்கள் தொகை இருந்தாலும் நாடு முழுவதையும் வழிநடத்தும் தலைவர்களின் அணுகுமுறையைப் பொறுத்துத்தான் அந்த நாட்டின் எதிர்காலம் வளம் பெறும் . ஒரு நாட்டின் உற்பத்தி அமைப்புகள் , ஓய்வில்லாத உழைப்பு , செயல்களை அணுகும் முறை , ஆட்சியின் செயற்பாடுகள்தான் என்றும் முதலிடம் பெறும் .     

வாழ்வில் வெற்றிபெறச் சீனர்கள் கடுமையாக உழைப்பவர்கள் என்பது உலகறிந்த உண்மை . உலகில்  அனைவருடனும் அமைதியான முறையில் வாழ்வதே சீன மக்களின் நோக்கமாகும் . சீனாவில் சுமார் நூற்று நாற்பது கோடி மக்கள் வாழ்கின்றனர் . அனைவரும் ஒரே வகைப்பட்ட வாழ்க்கை முறையிலேயே வாழ்கின்றனர் . சீனர்களில் ஒருவர் அவரைப் போலவே ஐவர்களாக வெளிப்படுவார்கள் என்று கூறுவார்கள் . சீனர்கள் தமக்குள் ஒருவருக்கொருவரை ஈடு செய்ய முடியாதபடி இருக்கிறார்கள் . சீனர்களுக்குத் தனிச்சிறப்புகள்  என்று பல உண்டு. அறிவுத்திறன் மிக்கவர் என்று ஒருவரைக் கருதினால், அவரை விட அறிவுத் திறன் மிக்கவர்கள் இவ்வுலகில் ஆயிரம் பேர் உள்ளனர். ஒருவரை வலிமையானவர் என்று கருதினால், உலகில் வலிமை மிக்க ஆயிரம் பேர் உள்ளனர். இந்த மனப்போக்கு சீனர்களுக்கு நிதானத்தைத் தருகிறது . ” பெரியோரை வியத்தலும் இலமே ,சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே ”  என்ற சங்கப்பாடல் நமக்கு நினைவுக்கு வருகிறது .

ஒரு தனி நபராக  வெற்றி பெறுகிறோமா இல்லையா என்பது குறித்து எவரும் வருந்தமாட்டார்கள். ஆனால்,  கூட்டு முயற்சியில் வென்றுள்ளோம் என்பதை அறிந்தால்,  அவர்கள் குடும்பம் பெருமிதம் கொள்ளும்.  வெற்றி வாய்ப்பைச் சிலர் இழக்க நேரிடலாம். இவ்வுலகில் எவையும் நமக்கானதல்ல. வெற்றி வாகை  நம்மைத்  தேடி வர வேண்டுமென்று எவரும் எதிர்பார்ப்பதில்லை. எவரும் சீனர்களுக்கு என்று எவற்றையும் வழங்குவதில்லை. தாங்களே உழைத்துத்தான் உயர வேண்டும்.

வெற்றிக்கான முயற்சியில், இழப்பதற்கு ஒன்றுமே இல்லை என்பதை நன்கறிந்தவர்கள் . எனவே, தொடர்ந்து முயற்சி செய்வதற்குச் சீனர்கள் தயங்குவதே இல்லை .சிறு வயது முதலே, ஒவ்வொரு  சில்லரைக் காசையும்  மிகக் கவனமாகக் கணக்கிட்டுச் செலவு செய்ய சீனர்கள் சிறு   வயதிலிருந்தே கற்பிக்கப்படுகிறார்கள் . சிக்கனம், அளவாகச் செலவு செய்தல் , மீதத்தைக் சேமித்துக் காத்தல் பற்றி சீனர்களுக்குக் கற்பித்தது போல, வேறு எந்தச் சமுதாயமும் தங்கள் வீட்டில், பிள்ளைகளுக்குக் கற்பிப்பது இல்லை என்று நான் கேட்டறிந்தேன். எந்த ஒரு சமுதாயமும் தங்கள் பிள்ளைகளுக்கு இத்தகைய திறனை வளர்ப்பதில்லை . அவர்களைப் பொறுத்த மட்டில் அது தானாக ஒருநாள் வருவதாகும்.ஆனால், சீனர்கள் கணக்கிட்டுச் செலவு செய்ய சிறு வயதிலேயே வலியுறுத்தப்படுகிறார்கள்  . மேலும், தொடக்கம் முதலே பணம் , செலவு , சிக்கனம் குறித்த கோட்பாடு சீன மனத்தில் விதைக்கப்பட்டுள்ளது. சீனக்குழந்தையின்  பாலுக்காகவும், இடைத்துணிக்காகவும் ஒரு தாய் எவ்வளவு செலவு செய்தாள் என்பதை பிள்ளைகளிடம் அடிக்கடி கூறுவார்கள் .

வாழ்வியல் சுழற்சிகளை எளிமையாக ஏற்றுக்கொள்கிறார்கள் . ஒரு குடும்பத்தின் சொத்து முதல் மூன்று தலைமுறை வரைதான்  நீடிக்கும் . எனவே, ஒவ்வொரு நான்காம் தலைமுறையினரும் புதிதாகச் செல்வத்தை உருவாக்க வேண்டும். அதாவது, முதல் தலைமுறையினர் உழைப்பின் மூலம் பணம் ஈட்டுவர், இரண்டாம் தலைமுறையினர் தங்களின் கல்விக்காக அப்பணத்தைச் செலவிடுவர், மூன்றாம் தலைமுறையினர் அவர்களின் முன்னோர்கள் உருவாக்கியதை விரயம் செய்வர்.  பின்னர், தாம் முன்பிருந்த நிலைமைக்கே திரும்புவர் . சில குடும்பங்கள் மேலும் சில தலைமுறையினருக்குப் பயனாகும் வகையில் செல்வம் சேர்த்து வைப்பதுண்டு , முந்தைய தலைமுறையை விடச் சிறப்பாக செயல்பட வேண்டி அடுத்த தலைமுறையை முன்னெடுத்துச் செல்வது சீனர்களின் பழக்கமாகும்.

முந்தைய தலைமுறையினரைவிட திறமைமிக்கவராகவும், வலிமைமிக்கவராகவும், சுறுசுறுப்பாகவும், நேர்மையாகவும், கடமையுணர்வு மிக்கவராகவும்,  புதிய சிந்தனையாளராகவும் , புதுமைவாணராகவும் , செல்வம் மிக்கவராகவும், வாழ்வில் அனைத்தையும் அடைந்தவராகவும் அமைய வேண்டும் என்பது குறிக்கோளாகும் . சாதனைகளைக் கொண்டே சீன நாடு சமுதாயத்தை மதிக்கும் .

உங்களுக்கு இரண்டு கைகள், இரண்டு கால்கள், இரண்டு கண்கள் மற்றும் வாய் உள்ளதெனில், அவற்றை வைத்து நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?  “கைகள் இல்லாதவர்கள் உங்களை விடச் சிறப்பாக செயலாற்றுவார்கள் !” என்று சிறு வயது முதலே பிள்ளைகளுக்கு நெறிப்படுத்துவார்கள் . வறுமை நிறைந்த தங்களின் பிள்ளைகளுக்குச் செல்வங்களை வழங்குவதிலும் சீனர்கள் நம்பிக்கை கொள்கின்றனர். சமநிலை வாழ்வு மிகப்பெரிய தேவையாகிறது . தங்களின் பிள்ளைகள் எந்த அளவிற்கு வாழ்வில் வெற்றி பெறுகிறார்களோ, அந்த அளவிற்கு அவர்களின் பெற்றோர்கள் இச்சமுதாயத்திற்குச் செல்வத்தைத் திருப்பியளிக்கின்றனர். தங்கள் பிள்ளைகளுக்குக் கிடைத்த வளமான வாழ்க்கைக்கு நன்றி செலுத்தும் வகையில் இதனைச் செய்கின்றனர்.

சீனர்கள் தங்களின் பணியை நிறைவேற்றி அதன் மூலம் கிடைக்கும் பயன்களை மட்டுமே அடைய விரும்புவார்கள் .சீனர்களைப்போலச்  சிந்தனையுடைய அனைத்து இன மக்களின் நட்பையும் பெற சீனர்கள்  எப்போதும் விழைவார்கள் . கால வரலாற்றில், மிகக் குறைவான நேரத்தை மட்டுமே நாம் கடந்து செல்கிறோம்…  எனவே, நாம் நமது திறனை முழுமையாகப் பயன்படுத்தினால்,  நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து முன்னேற இயலும் என்பதே சீன வாழ்வின் அடிப்படையாகும். உழைப்பு என்பதுதான் மூலதனம். ஈட்டுவது மிகவும் கடினமானதாகும் . உணவில் உள்ள ஒவ்வொரு அரிசியும் உழைப்பால் விளைந்தவை. கடினமான உழைப்பு சீனர்களைக் கைவிடாது என்ற நம்பிக்கைதான் வாழ்க்கையை நடத்துகிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் பழைமை கொண்ட நம் பாரத நாட்டின் ஒப்பற்ற பிரதமர் மோடி அவர்களும் – சீன அதிபராக உலகப் புகழ் பெற்ற ஜின்பிங் அவர்களும் பல்லவர் கோன் பெருமையை கல்லில் வரைந்து காட்டும் மாட்சிவாய்ந்த நம் மாமல்லபுரத்தில் சந்தித்து இருநாடுகளின் உறவுகள் வளர்ச்சி – பொருளாதார வளம் – கலை பண்பாடு  முதலியவற்றைப் பற்றி உரையாடுகிறார்கள் .


இந்த சந்திப்பு, உலகமே வியக்கும் உன்னத நட்புறவுப் பாலமாகும் . இந்திய நாடு கௌதம புத்தரை ஈன்று உலகினுக்கே தந்து புகழ் கொண்டது . காஞ்சி மாநகரத்து பௌத்த முனிவர் நாளந்தா பல்கலைக்கழகத்துக்கு தலைமை தாங்கியவர் . சீன வழிநடையாளர் யுவான் சுவாங் எழுதிய குறிப்பு நமக்குச் சிலிர்ப்பைத் தருவது . காஞ்சியில் புத்தநெறிப்
பல்கலைக்கழகத்தில் சீனர்கள் பயின்றனராம் .

நம் நாகப்பட்டினத்தில் பௌத்த சயித்தியதைத் சீன அரசர் கட்டியுள்ளார். சீனாவுக்கும் தமிழகத்துக்கும் கடல் வாணிக உறவு இருந்ததை இலக்கியங்கள் காட்டுகின்றன . சென்னைக்கு அருகில் பழவேற்காடும் புகழ்வாய்ந்த துறைமுகமாகத் திகழ்ந்தது . அங்கும் சீனக் கப்பல்கள் நங்கூரமிட்டு நின்றன என்றெல்லாம் வரலாற்றின் பொன்னேடுகள் இருநாடுகளின் உறவை இசைத்து மகிழ்கின்றன .

உலகத்தின் செல்வாக்கு வாய்ந்த இரு தலைவர்களையும் தமிழகம் போற்றிப் பாராட்டி வாழ்த்தி வரவேற்கிறது .        

ஔவை அருள்

இயக்குநர்,

மொழி பெயர்ப்புத் துறை,

தமிழ்நாடு அரசு


தொடர்புக்கு: dr.n.arul@gmail.com
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *