BREAKING NEWS

சீன அதிபருக்கு தமிழக மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ள, சீன அதிபருக்கு தமிழக மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்-ம் நாளை மாமல்லபுரத்தில் சந்தித்து பேச உள்ளனர். இதையடுத்து, மகாபலிபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையடுத்து, இரு தலைவர்களையும் வரவேற்பதற்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரதமருக்கு நன்றி

இந்தியா-சீனா நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்த சீன அதிபர் ஜி ஜின்பிங்க்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள பேச்சு வார்த்தை, மாமல்லபுரத்தில் நடைபெறுவது தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டிலுள்ள மாமல்லபுரத்தை தேர்வு செய்தமைக்கு பிரதமருக்கு நன்றி. தமிழக மக்கள் சார்பாகவும், தமிழ்நாடு அரசின் சார்பாகவும் இவ்விரு உலகத்தலைவர்களையும் வரவேற்கிறேன்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வணிக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் சீனாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே தொடர்பு இருந்துள்ளது. பண்டைய சீன தூதுவர் யுவான் சுவாங், பல்லவ நாட்டிற்கு வந்து சென்றிருக்கிறார் என்பதும், அக்காலத்தில் பல்லவ நாட்டின் துறைமுகமாக விளங்கிய இதே மாமல்லபுரம், இந்த நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டது மிகவும் பொருத்தமானது. சீனநாட்டுடன் கடல் வழி வியாபாரம் மாமல்லபுரம் வழியாக நடைபெற்றதாக வரலாறு கூறுகிறது.

வரவேற்பு அளிக்க வேண்டும்

அதே போல் சோழர்கள் காலத்திலும், சீனாவுடனான வணிக தொடர்புகள் வலுவாக இருந்துள்ளது தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாகும். ஏற்கனவே 1956-ம் ஆண்டு, சீன அதிபர் சூ என்லாய், மாமல்லபுரம் அருகிலுள்ள குழிப்பான்தண்டலம் கிராமத்திற்கு வருகை தந்ததை இங்கே நினைவு கூற விரும்புகிறேன். இந்த இரு தலைவர்களின் சந்திப்பு யுனெஸ்கோ உலக பாரம்பரிய மையமான மாமல்லபுரத்தில் நடைபெறுவது, பண்டைய வரலாற்றின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சீன அதிபரின் வருகை, தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்தியாவிற்கே வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வாகும். தமிழ்நாட்டிற்கு வருகை புரியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும், பிரதமர் மோடிக்கும், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் உள்ளார்ந்த உணர்வோடு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *