BREAKING NEWS

சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை – அமைச்சர், டி.ஜி.பி. வீடு உள்பட 40 இடங்களில் நடந்தது,


 

தமிழகத்தில் குட்கா விற்பனைக்கு ரூ.40 கோடி லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர், போலீஸ் டி.ஜி.பி. முன்னாள் போலீஸ் கமிஷனர் வீடு உள்பட 40 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் 40 குழுக்களாக சோதனை அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

குட்காவுக்கு தடை

தமிழ்நாட்டில் குட்கா விற்பனை செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. என்றாலும் இந்த தடையை மீறி சென்னை உள்பட முக்கிய நகரங்களில் குட்கா விற்பனை செய்யப்படுகிறது. போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து விட்டு சிறிய கடைகளில் குட்கா விற்பனை படுஜோராக நடக்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் நடக்கும் குட்கா விற்பனையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடப்பதாக மத்திய வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல்கள் சென்றன. அதன்பேரில் சென்னை செங்குன்றத்தில் செயல்பட்டு வந்த எம்.டி.எம். குட்கா ஆலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

குடோன்

இதில் அந்த ஆலையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் தயாரிக்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. இங்கிருந்து தமிழ்நாடு முழுவதும் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு விற்பனை ஆவதும் வெளிச்சத்துக்கு வந்தது.தொடர்ந்து குட்கா ஆலை பங்குதாரர் மாதவராவ் வீட்டிலும், குடோனிலும் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது மாதவராவ் உதவியாளர் வீட்டில் இருந்து ரகசிய டைரி ஒன்று சிக்கியது.அந்த டைரியில் குட்கா தயாரிப்பு மற்றும் விற்பனையை கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக மாநகராட்சி உயர் அதிகாரிகள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவரம் இடம் பெற்று இருந்தது. ஒவ்வொரு போலீஸ் அதிகாரிக்கும் எந்தெந்த தேதிகளில் எத்தனை லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது என்ற விவரமும் துல்லியமாக எழுதப்பட்டு இருந்தது.

வரி ஏய்ப்பு

அதோடு அதிகாரிகள் துணையோடு குட்கா விற்ற வகைக்கு எவ்வளவு வரி கட்டப்பட்டு இருக்கிறது என்ற குறிப்புகளும் இருந்தன. இந்த டைரி தகவல்தான் அதிகாரிகள் சிக்குவதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரும் அந்த டைரியில் இடம் பெற்று இருந்தது.

மேலும் அப்போதைய சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் உள்பட 23 அதிகாரிகளுக்கு ரூ.60 லட்சம் வீதம் மொத்தம் ரூ.40 கோடி லஞ்சம் வழங்கியதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக குட்கா பங்குதாரர் மாதவராவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் மாதாமாதம் தவிர தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களிலும் லஞ்சம் கொடுத்து இருப்பதாக வருமான வரித்துறையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

வழக்குப்பதிவு

இந்த ஆதாரத்தின் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு வருமான வரித்துறை முதன்மை ஆணையர் கடிதம் எழுதி இருந்தார்.

இதையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பெயரளவுக்கு விசாரணை நடத்தி சில போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இதனால் சி.பி.ஐ. விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

சி.பி.ஜ விசாரணை

அதை ஏற்று குட்கா ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.அதன்பேரில் சி.பி.ஐ. சார்பில் பெயர் குறிப்பிடாமல் கலால் துறை, உணவு பாதுகாப்புத் துறை, போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் சட்ட விரோத பணபரிவர்த்தனை நடந்து இருப்பதால் இது தொடர்பாக அமலாக்கப் பிரிவும் வழக்குப்பதிவு செய்தது. இதிலும் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை.சமீபத்தில் டெல்லியில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் குட்கா பங்குதாரர் மாதவராவிடம் விசாரணை நடத்தினார்கள். சுமார் 10 மணி நேரம் நீடித்த இந்த விசாரணையில் குட்கா ஊழல் தொடர்பாக ஏராளமான தகவல்கள் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கிடைத்தது.

சோதனை

இந்த நிலையில் குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டுக்கு காலை 8 மணிக்கு 5 அதிகாரிகள் சென்றனர். வீட்டை பூட்டிக்கொண்டு சோதனையில் ஈடுபட்டனர்.

அதே சமயத்தில் நொளம்பூரில் உள்ள முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் வீட்டிலும் 5 பேர் கொண்ட சி.பி.ஐ. குழு அதிரடி சோதனை நடத்தினர். இவர்கள் தவிர முக்கிய உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளிலும் சி.பி.ஐ. சோதனை நடந்தது. அமைச்சரின் உதவியாளர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் சில பினாமிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

40 இடங்கள்

விழுப்புரம் உள்பட தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 40 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சி.பி.ஐ.யின் இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.குட்கா விற்பதற்கு லஞ்சம் பெற்ற போலீஸ் உயர் அதிகாரிகள் யார்-யார் அவர்களுக்கு எவ்வளவு பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டது என்ற தகவல்களை ஏற்கனவே டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் திரட்டி விட்டனர்.

இந்த ஊழலில் ஏராளமான அரசு ஊழியர்கள் மிகப்பெரிய நெட்வொர்க் போல செயல்பட்டு வருவதை கண்டுபிடித்துள்ளனர்.ஆனால் இந்த ஊழலில் மொத்தம் 23 அதிகாரிகளுக்கு மட்டுமே தொடர்பு இருப்பதாக வருமான வரித்துறை தகவலில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதுபோல லஞ்ச ஒழிப்புத்துறையும் சில அதிகாரிகள் பெயரை மட்டுமே குறிப்பிட்டு இருந்தனர்.

போலீஸ் அதிகாரிகள்

இந்த நிலையில் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தி குட்கா ஊழலில் தொடர்புடைய மேலும் சில அதிகாரிகளை கண்டுபிடித்துள்ளனர். அதன் அடிப்படையில் தற்போது அடுத்த கட்ட நடவடிக்கையில் சி.பி.ஐ. இறங்கி உள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள 2 உயர் போலீஸ் அதிகாரிகள், கலால் துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.குட்கா ஊழல் விசாரணையில் சி.பி.ஐ. பிடி இறுகுவதால் இதில் தொடர்புடைய அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

சிக்கிய அதிகாரிகள் (பாக்ஸ்)

மாதவராவிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் லஞ்சம் பெற்றவர்கள் பட்டியலை தயாரித்து சி.பி.ஐ அதிகாரிகள் 2 நாட்களாக ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனையில் கடந்த 2013-2016ம் ஆண்டில் மாதவராவிடம் ரூ.40 கோடி அளவிற்கு லஞ்சம் பெற்ற அப்போது சென்னை மாநகர போலீஸ் கமிஷனர்களாக இருந்த டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உபட்ட 4 பேர், சென்னை வடக்கு மண்டலத்தில் கூடுதல் கமிஷனர்களாக இருந்த 6 பேர், வடக்கு மண்டல இணை கமிஷனர்களாக இருந்த 5 பேர், மாதவரம் காவல் மாவட்டத்தில் இருந்த துணை கமிஷனர்கள் 6 பேர், உதவி கமிஷனர்கள் 3 பேர், இன்ஸ்பெக்டர்கள் 6 என 30 காவல் துறை அதிகாரிகள் மற்றும் அதே காலக்கட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் உணவு மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது.

தனித்தனி குழுக்கள் (பாக்ஸ்)

நேற்று முன்தினம் இரவு டெல்லி, மும்பை மற்றும் சென்னை அலுவலகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சி.பி.ஐ அதிகாரிகள் ரகசியமாக ஒன்று கூடினர். பின்னர் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, விழுப்புரம் என அனைத்து இடங்களுக்கும் சி.பி.ஐ அதிகாரிகள் தனித்தனியாக குழுக்காக ெசன்றனர். இந்த அதிரடி சோதனையில் பல கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததற்கான ஆவணங்களை டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன் மற்றும் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்டதாக சி.பி.ஐ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply