BREAKING NEWS

சிவகங்கை அருகே இரட்டை கொலை, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் – டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிப்பு.

மானாமதுரை அருகே கச்சநத்தம் கிராம மக்கள் மீதான தாக்குதலுக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இரட்டை கொலை

இது தொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், சண்முகநாதன் ஆகிய 2 பேர், ஆவாரங்காடு கிராம ஒரு சாதிப் பிரிவினரால் கடந்த 28-ந் தேதி நள்ளிரவில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று இருக்கிறார்கள். அவர்களுடைய சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவத்திற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கிற ஒரே காரணத்தினால், கச்சநத்தம் உள்ளிட்ட சில கிராம மக்களை, பல்வேறு கிராமங்களிலிருந்து வந்து ஆவாரங்காடு கிராமத்தில் குடியிருக்கக்கூடியவர்கள் தொடர்ந்து பல்வேறு விதமான ஒடுக்குமுறைகளை ஏவி வந்துள்ளனர்.

சமாதானம்

பழையனூர் காவல்நிலைய அதிகாரிகள் மேற்படி வன்முறைக் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, கட்டப்பஞ்சாயத்து, சமாதானம் என்ற மென்மையான போக்கை கடைபிடித்ததன் விளைவுதான், தற்போது கச்சநத்தம் ஏற்பட்டுள்ள கொடும் தாக்குதலுக்குக் காரணமாகும்.

ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்குப் பின்பும் 28-ந் தேதி அதே கோவில் விழாவில் வன்முறைக் கும்பல் தாக்குதல் தொடுத்திருக்கிறது. இந்த வன்முறைச் சம்பவத்தை கண்டித்து வருகிற 31-ந் தேதி அன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

படுகொலை செய்த வன்முறைக் கும்பலைக் கைது செய்யவும், இருவர் குடும்பத்திற்கும் தலா ரூ.20 இலட்சம் வழங்கிடவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிடவும், படுகாயமுற்றோருக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும் வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.




Leave a Reply