BREAKING NEWS

சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக இருந்த பொன்.மாணிக்கவேல் மாற்றப்பட்டது ஏன்? முதல்வர் விளக்கம்.

 

ஐந்தரை ஆண்டு காலம் ஒரு பிரிவில் பணியில் இருந்ததால் தான் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் இடமாற்றம் செய்யப்பட்டார் என்று மு.க.ஸ்டாலின் கேள்விக்கு முதல்வர் விளக்கமளித்தார்.

ஏன் செய்தீர்கள்

சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேலை ஏன் இடமாற்றம் செய்தீர்கள்’ என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து கூறியதாவது:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சட்டசபையில், சிலை திருட்டு தடுப்புப் பிரிவு – உயர்நீதிமன்ற வழக்கு தொடர்பாக விளக்கம் அளித்தார்கள்.

சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் துறைத் தலைவர், சிலை திருட்டு தடுப்புப் பிரிவுக்கு தமிழ்நாடு அரசு போதிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றும், இந்தப் பிரிவிலுள்ள போலீசாரை தன்னிடம் தெரிவிக்காமல் இடமாற்றம் செய்து விடுவதாகவும், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறியதாக வந்த செய்திகள் தொடர்பாக நான் கீழ்க்கண்ட விளக்கங்களை பேரவைக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

சிலை திருட்டு தடுப்புப் பிரிவில் ஏற்கனவே ஒரு காவல் துறை கண்காணிப்பாரும், ஐந்து ஆய்வாளர்களும், மூன்று உதவி ஆய்வாளர்களும், நான்கு சிறப்பு உதவி ஆய்வாளர்களும், 16 காவலர்களும் என மொத்தம் 29 நபர்கள் பணிபுரிந்து வந்தனர்.

கூடுதல் நியமனம்

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பொன் மாணிக்கவேல், சிலை திருட்டு தடுப்புப் பிரிவின் காவல் துறைத் தலைவர் திருச்சி சிறப்பு முகாம் அலுவலகத்திற்கு கூடுதலாக கேட்ட 7 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களும், 10 காவல் துணை கண்காணிப்பாளர்களும், 18 ஆய்வாளர்களும், 50 உதவி ஆய்வாளர்களும், 140 தலைமைக் காவலர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 325 அலுவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டனர்.

மேலும், அவர் கேட்ட இன்னோவா கார்-1, பொலீரோ ஜீப்-2, டெம்போ டிராவலர்-2, மோட்டார் சைக்கிள்-10, வாக்கி-டாக்கி-17 மற்றும் அலுவலகத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் 35 லட்சத்து 39 ஆயிரத்து 857 ரூபாய் செலவில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவின் திருச்சி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.

அனுப்பவில்லை

தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் சிலை திருட்டு தடுப்புப் பிரிவில் அயற்பணியில் உள்ளார். தூத்துக்குடியில் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக காவல் அதிகாரிகள் தேவைப்பட்டதால், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராமை சில நாட்களுக்கு அவசர நிமித்தமாக அனுப்பக் கோரி, காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திலிருந்து, சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் துறைத் தலைவர் பொன் மாணிக்கவேல் அவர்களுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர், புலன் விசாரணைக்கு தேவைப்படுவதால், அவரை விடுவிக்க இயலாது என்று பொன் மாணிக்கவேல் கூறியதன் பேரில், அவர் தூத்துக்குடிக்கு அனுப்பப்படவில்லை. அவர் தற்போதும் சிலை திருட்டு தடுப்புப் பிரிவில் தான் பணிபுரிந்து வருகிறார்.

கலந்து கொள்வதில்லை

மேலும், காவல் துறை உயர் அதிகாரிகள் நடத்தும் ஆய்வுக் கூட்டத்தில், நிலுவை வழக்குகளின் முன்னேற்றம் குறித்த புள்ளி விவரங்கள் ஆய்வு செய்யப்படும். இதுபோன்ற ஆய்வுகள், அனைத்து காவல் துறைப் பிரிவுகளிலும் மாதாமாதம் நடைபெறும் வழக்கமான நடைமுறைதான். இவ்வாறான ஆய்வுக் கூட்டங்களிலும், சிலை திருட்டு தடுப்புப் பிரிவு தலைவர் பெரும்பாலும் கலந்து கொள்வதில்லை.

சிலை திருட்டு தடுப்புப் பிரிவு விசாரணையில், இந்து சமய அறநிலையத் துறை முழுமையான ஒத்துழைப்பு அளிக்கின்றது. மேலும், இந்து சமய அறநிலையத் துறை சார்பாக சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என சிலை திருட்டு தடுப்புப் பிரிவினால் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நீதிமன்றத்தில் விளக்கம்

இந்த கோரிக்கைகள் இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாக வரம்பிற்கு உட்பட்ட விஷயங்களாக இருப்பதால், அது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறையால், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆணையுறுதி ஆவணத்தில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சொல்கின்ற போது, எல்லா துறைகளிலுமே உயர் அதிகாரிகள், அவர்களுக்கு கீழ் பணிபுரிகின்ற அதிகாரிகளை விளக்கம் கேட்டால் விளக்கம் தருவது வழக்கம். அதன் அடிப்படையிலே, பொன் மாணிக்கவேல் அவர்கள், நீதிமன்றத்திலே உயர் அதிகாரிகள் விளக்கம் கேட்பதாக நீதிமன்றத்திலே தெரிவித்தார். நீதிமன்றத்திலே நீதிபதி அவர்கள், உயர் அதிகாரிகள் விளக்கம் கேட்டால் தாராளமாக தரலாம் என்ற செய்தியும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

தெய்வ பக்தி உடையவன்

அதேபோல, ஏதோ அ.தி.மு.க. ஆட்சியில் தான் சிலை திருட்டு போனது போலவும், நாங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது போலவும், காங்கிரஸ் எதிர்க்கட்சி சட்டமன்றத் தலைவர் குறிப்பிட்டார். நாங்கள் எப்போதுமே தெய்வ பக்தி உடையவர்கள். நானும் தெய்வ பக்தி உடையவன். ஆகவே, உங்களுக்கு அந்த மாறுபட்ட கருத்தே தேவையில்லை.

பதவி உயர்வு

அதுமட்டுமல்ல, காவல்துறை தலைவர் மரியாதைக்குரிய பொன் மாணிக்கவேல் இடம் மாற்றத்தை பற்றி சொன்னார். அவர் ஜெயலலிதா இருக்கின்ற போது தான், 2012-ம் ஆண்டு இந்த பணியிலே அமர்த்தப்பட்டார். அப்போது டி.ஐ.ஜி.யாக இருந்தார். 2015-ல் ஐ.ஜி.யாக பதவி உயர்வு வழங்கப்பட்ட போது, அந்த துறையிலேயே தொடர்ந்து இருந்தார். ஐந்தரை ஆண்டு காலம் அதே துறையிலே இருந்தார். ஆகவே, பணியிடம் மாற்றுவது எல்லா ஆட்சியிலும் நடைபெறும் ஒரு சம்பவம். நீண்ட நாட்கள் பணியிலே இருந்ததால், பணி மாறுதல் செய்வார்கள். அந்த அடிப்படையிலே தான் அவர் பணிமாற்றம் செய்யப்பட்டார் தவிர, வேறு ஒன்றும் இல்லை.

நியமனம்

இந்த பணிமாற்றம் செய்யும் போது, ஒரு தனிநபர் ஒரு பகுதியிலே சிலை திருட்டு போய்விட்டது, அந்த சிலை திருட்டை இவர் இருந்தால் சரியாக கண்டுபிடிப்பார் என்று நீதிமன்றத்திலே சொன்னதின் காரணமாக, நீதிபதி இவரை நியமித்தார். ஆகவே, சிலை திருட்டு தடுப்புப் பிரிவிலே இவர் தொடர்ந்து இதை கூடுதலாக கவனிக்க வேண்டும் என்று தான் ஆணை பிறப்பித்தார்கள் என்பதை உறுப்பினர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே, களவு போன சிலைகளை கண்டுபிடிப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

கேட்டதை கொடுத்தோம்

எதிர்க்கட்சித் தலைவர் நான் சொன்னதை சரியாக கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். நீதிமன்ற உத்தரவின்படி, பொன் மாணிக்கவேல் என்ன என்ன கேட்டார் என்ற விவரம் முழுவதும் நான் சொல்லிவிட்டேன். அவர் கேட்டதை எல்லாம் கொடுத்துவிட்டோம். அந்த சிலை திருட்டு தடுப்புப் பிரிவிலே கூடுதலாக காவலர்களை கேட்டார்கள், கொடுத்துவிட்டோம். வாகனங்கள் கேட்டார்கள், கொடுத்து விட்டோம். ஆகவே, எல்லாமே கொடுத்துவிட்டோம், எதுவும் கொடுக்காமல் இல்லை.

ஆகவே, நீங்கள் எதுவுமே கொடுக்கவில்லை, செய்யவில்லை என்று சொல்வது எந்த விதத்திலே சரியாக இருக்கும். நீதிமன்ற உத்தரவுப்படி அவர்களுக்கு கூடுதலான வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையிலே, அவர்கள் கேட்ட கோரிக்கைகள் எல்லாம் அரசு செய்து கொடுத்திருக்கிறது.

மரபு இல்லை

அவையிலே நீதிமன்றத்தை விமர்சிப்பது மரபு இல்லை. ஓரளவுக்கு தான் நாம் பேச முடியும். நீதிமன்றத்திலே வழக்கினுடைய தீர்ப்பை நாம் விமர்சிப்பது கிடையாது. ஆகவே, அந்த தீர்ப்பையொட்டி சில கருத்துக்களை நாம் இங்கே தெரிவிக்கின்றோம். ஆகவே, உங்களுடைய ஆட்சி காலத்தை விட, அ.தி.மு.க. ஆட்சியில் தான் அதிகமான சிலை கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

நீங்கள் உங்கள் ஆட்சியிலே எவ்வளவு வசதி செய்து கொடுத்தீர்கள். அப்போது 29 பேர் தான் இருந்தார்கள். ஆகவே, இது பல ஆண்டுகளுக்கு முன்பு களவு போன சிலைகள். ஆகவே, அதையெல்லாம் கண்டு பிடிப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தாலும், தனிநபர் நீதிமன்றத்திலே வழக்கு தொடர்ந்ததின் அடிப்படையிலே மீண்டும் பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார்.

கண்டுபிடிக்கிறோம்

அப்பொழுது நிறைய களவு போன சிலைகள் கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்கு முன்பு அதையெல்லாம் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று சொன்னால், தேவையான காவலர்கள், பிற வசதிகளை எல்லாம் செய்து கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்திலே தெரிவித்தார். அந்த நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையிலே, அரசு அவர்கள் வைத்த கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றி தந்திருக்கிறது.

இது இரண்டு துறை சம்பந்தப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறையும், காவல்துறையும் சம்பந்தப்பட்டது. ஆகவே, இதிலே எங்கெங்கெல்லாம் சிலைகள் களவு போய் இருக்கிறது என்று கண்டுபிடித்து வருகிறோம். அதிகமான சிலையை கண்டுபிடித்த அரசு அ.தி.மு.க. அரசு, அதற்கான நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகிறது.

இவ்வாறு முதல்வர் விளக்கமளித்தார்.




Leave a Reply