BREAKING NEWS

சிலை கடத்தல் வழக்குகளில் தமிழக அரசு கொள்கை முடிவு – சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு.

 

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஐ. பொன்.மாணிக்கவேல் விசாரணையில் திருப்தி இல்லை என்பதால் தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அதன்படி, சிலை கடத்தல் வழக்கையை சி.பி.ஐ.க்கு மாற்றிட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சிலை கடத்தல் புகார்

தமிழகம் முழுவதும் உள்ள மிக பழமையான கோவில்கள் உள்ளன. இதில் சில கோவில்கள் இருக்கும் விலைமதிக்கமுடியாத சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்று புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன், ‘‘சிலைகள் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் விசாரணை நடத்த போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை ஒன்றை அமைத்து உத்தரவிட்டார்.

கூடுதல் ஆணையர் கைது

இதையடுத்து போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் சாமி சிலைகள் குறித்து தீவிர விசாரணையில் இறங்கினார். சாமி சிலை கடத்தல் சம்பவத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட பல முக்கிய நபர்களுக்கு தொடர்பு உள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட பல சிலைகள் மீட்கப்பட்டன. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, சாமி சிலை செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை புதன் கிழமையன்று தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சிறப்பு டிவிஷன் பெஞ்ச்

இந்த சூழ்நிலையில், சாமி சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் தலைமையில் சிறப்பு டிவிசன் பெஞ்சை உருவாக்கி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டார். இந்த நிலையில், ஸ்ரீரங்கம் கோவிலில் சிலை காணாமல் போனது குறித்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது.

கொள்கை முடிவு

அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ‘‘சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைப்பது குறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இதுமட்டுமல்ல எதிர்காலத்தில் பதிவாகும் வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்துவது என்று முடிவு எடுத்துள்ளது’’ என்று தெரிவித்தார்.

நீதிபதிகள் கேள்வி

இப்படி அரசு தரப்பில் தெரிவித்ததும் நீதிபதிகள், ‘தமிழக போலீசார் மீது தமிழக அரசுக்கு நம்பிக்கை இல்லையா?’ என்று கேள்வி எழுப்பினர். ‘நம்பிக்கை உள்ளது. சிலை கடத்தல் பிரிவு போலீசாரின் விசாரணையில் திருப்தி இல்லை. அவர்கள், எந்த தகவலையும் அரசுக்கு தெரிவிப்பது இல்லை. ஆனால், இந்த வழக்கை ஒரு சுதந்திரமான அமைப்பு விசாரித்தால் சரியாக இருக்கும் என்று தமிழக அரசு கருதுகிறது’ என்று அரசு வழக்கறிஞர் பதில் அளித்தார். அப்போது குறுக்கிட்ட மனுதாரர் யானை ராஜேந்திரன், ‘தமிழக அரசின் கொள்கை முடிவை எதிர்த்து உடனடியாக நான் வழக்கு தொடர்வேன்’ என்றார்.

இதையடுத்து கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது குறித்த சில ஆவணங்களை நீதிபதியிடம் காட்டினார். அதை படித்து பார்த்த நீதிபதிகள், இந்த வழக்கை வருகிற 8-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். தமிழக அரசு எடுத்துள்ள கொள்கை முடிவு குறித்த ஆவணங்கள், உத்தரவு ஆகியவற்றை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அரசாணை

இந்த சூழ்நிலையில், சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த முடிவுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசைசெளந்ததரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிலை கடத்தல் வழக்கை தற்போது விசாரித்து வரும் போலீஸ் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply