BREAKING NEWS

சிறு வணிகர்களை சிதைக்கும் ஆன்லைன் ஷாப்பிங்!

இது பண்டிகை சீசன்!  ‘தள்ளுபடிகள் வரும் முன்னே.. பண்டிகைகள் வரும் பின்னே’ என்று கூறுமளவுக்கு வணிக நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தள்ளுபடிகள், சிறப்பு சலுகைகள், பரிசு மழைகளை அள்ளி வீசி, வாடிக்கையாளர்களை திக்குமுக்காடச் செய்கின்றன. தீபாவளியின் போது உள்ளூரில் இருக்கும் சிறு கடைகள் தொடங்கி, நகரில் இருக்கும் பிரமாண்ட பெருவணிக நிறுவனங்கள் வரை, தள்ளுபடி தருவது வழக்கமானது தான். ஆனால், முன்னணி வணிக நிறுவனங்களையே திணறச் செய்யும் வகையில், பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள், தள்ளுபடி திருவிழா என்ற பெயரில் அடிக்கும் கூத்துகள், பரபரப்பை தொற்ற வைத்துள்ளன.

இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்க நிறுவனமான அமேசான், 36 மணி நேரத்தில், 750 கோடி ரூபாய் அளவுக்கு ஸ்மார்ட்போன்கள் மட்டுமே விற்பனை செய்து சாதனை படைத்திருப்பதாக, சில தினங்களுக்கு முன் வெளியான செய்தியை படித்திருப்பீர்கள். இது, கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது, 4.6 மடங்கு அதிகமாம்; இன்னும் தள்ளுபடி விற்பனை முடிவடைய அவகாசம் இருப்பதால், அதன் விற்பனை 36,000 கோடி ரூபாயை எட்டும் என்கிறார்கள்.

இந்த செய்தி வெளியான நாளில், சமூக வலைதளங்களில் ஆளுங்கட்சி அனுதாபிகள் பலர், மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துவிட்டதாகவும், இந்திய பொருளாதாரம் சரிகிறது என்பதெல்லாம் வெத்து வெட்டு என்ற ரீதியில் கருத்துகளை பகிர்ந்தனர். ஆனால், அதே சமூக வலைதளத்தில் தான், சிறு வணிகர் ஒருவரின் “எங்களையும் வாழ வையுங்கள்” என்ற தலைப்பிலான வீடியோ ஒன்றும் வெளியாகி இருந்தது. அவர், ஆன்லைன் நிறுவனங்களின் இதுபோன்ற அதிரடி ஆஃபர்கள் தங்களை எவ்வாறு பாதிக்கிறது என்று, உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.

 

ஆன் லைன் ஷாப்பிங் எளிதானது, விரைவானது என்பதால் பலரும் அதை நாடுகின்றனர். இதனால், பல லட்சம் வங்கிக் கடன் பெற்று கடை நடத்தும் நாங்கள் நடுத்தெருவுக்கு வர வேண்டியுள்ளது. எளிதில் கிடைக்காத பொருட்களை ஆன் லைனில் வாங்கலாம்; எல்லாவற்றுக்கும் ஆன் லைன் ஷாப்பிங் என்பது எங்களை ஒழித்துவிடும் என்று, வருத்தத்துடன் அவர் கூறியிருந்தார். அவரது கூற்று, பல லட்சம் சில்லறை வணிகர்களின் குரலாகவே பார்க்கலாம். வட்டிக்கு கடன் வாங்கி, கடை ஆரம்பித்து, மாதந்தோறும் வாடகை, முதலீடு போக, சொற்ப லாபமே கிடைக்கும். இப்போது, அதற்கும் ஆன்லைன் நிறுவனங்கள் வேட்டு வைக்கின்றன.

இந்திய சில்லறை வர்த்தக தொழிலானது , உலகில் வேகமாக வளர்ந்து வரும் ஒன்றாகும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதத்தில் (ஜி.டி.பி.) 10 சதவிகித பங்களிப்பையும், மொத்த பணியாளர் திறனில் 8 சதவிகிதத்தையும் இத்துறை கொண்டிருக்கிறது.  இந்தியாவில் பெரும்பாலான சில்லறை விற்பனை கடைகள், அளவில் மிகச்சிறியவை. நாட்டில் 1.4 கோடிக்கும் அதிகமான சில்லறை விற்பனை கடைகள் உள்ளன; அவற்றில் 4% மட்டுமே 500 சதுர அடி அளவை விட பெரியவை என்கிறது ஒரு புள்ளிவிவரம். இந்தியாவில் ஒவ்வொரு 1000 பேருக்கும், சுமார் 11 சில்லறை விற்பனை கடைகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் பொருளாதார சீர்த்திருத்தங்கள், தாராளமயமாக்கல் கொள்கை அமலுக்கு வந்த பிறகு நாம் பல பலன்களை அனுபவித்து வருகிறோம். அதே நேரம், அதில் பக்க விளைவுகளும் இல்லாமல் இல்லை. குறிப்பாக ஆன்லைன் ஷாப்பிங் வந்த பிறகு சில்லறை வணிகர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது.

இந்தியாவில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது, ஒரு நிறுவனத்தின் ஒட்டுமொத்த கொள்முதலில் 30% பொருட்கள் இந்தியாவில் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆன்லைன் வணிகத்திற்கு அத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை; 100 சதவிகித அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இது, அமெரிக்க நிறுவனங்களான அமேசான், வால்மார்ட் போன்றவற்றுக்கு வரப்பிரசாதமாகிவிட்டது.

ஏற்கெனவே அமேசான், இந்தியாவில் வலுவாக கால் ஊன்றிய நிலையில், இந்தியாவை சேர்ந்த பிளிப்கார்ட் நிறுவனமோ தடுமாறிக் கொண்டிருந்தது. இதை  மோப்பம் பிடித்த வால்மார்ட், பிளிப்கார்ட்டை தன்வசப்படுத்தி இந்தியாவில் தடம் பதித்தது. பிரமாண்ட இந்த இரு நிறுவனங்களுக்கு முன், இங்குள்ள வேறு சில ஆன் லைன் ஷாப்பிங் நிறுவனங்களே தாக்குப்பிடிக்க முடியாமல் திணறுகின்றன. இன்று, ஐந்து ரூபாய்க்கு மருந்து தொடங்கி, லட்சம் ரூபாய் வரை பொருட்கள், ஆன் லைனில் கிடைக்கிறது. கடைகளில் கிடைப்பதைவிட மலிவு விலை என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி, நுகர்வோரை தங்கள் பக்கம் இவை இழுக்கின்றன. இந்த மோகத்தால் ஈர்க்கப்படும் பெருவாரியான மக்கள், ஆன்லைன் ஷாப்பிங்கை நாடுகிறார்கள். அதன் விளைவுதான், 36 மணி நேரத்தில், 750 கோடி ரூபாய்க்கு மொபைல்போன் விற்பனை என்பது.

அன்னிய முதலீட்டில் செயல்படும் ஆன் லைன் நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களின் வாயிலாகவே பொருட்களை விற்க வேண்டும் என்பது, அன்னிய  நேரடி முதலீட்டு விதிகள் ஆகும். அதன்படி கிளவுட் டெயில் அபாரியோ போன்ற ஒப்புக்கு சில இந்திய நிறுவனங்கள் வாயிலாக, அமேசான் தனது விற்பனையை மேற்கொள்கிறது. எனினும், அன்னிய நேரடி முதலீடு விதிகளில் உள்ள சில ஓட்டைகளை சாதமாக்கி, ஆன்லைன் நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதாகவும், அரசுக்கு வரி இழப்பை ஏற்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதேபோல், பிளிப்கார்ட் நிறுவனம் தங்களிடம் பொருட்களை விற்பனை செய்யும் சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுவதாக, இந்திய வர்த்தகப் போட்டி கண்காணிப்பு ஆணையத்திடம் புகார்கள் சென்றன.

இதைத் தொடர்ந்து,  ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை, கடந்தாண்டு இறுதியில் அரசு கொண்டு வந்தது. அதன்படி, தாங்கள் பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்கள் வயிலாக பொருட்களை விற்பனை செய்யக்கூடாது; ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பொருள் தங்களிடம் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை ஏற்படுத்தி, விலை நிர்ணயிக்கக்கூடாது; எந்த ஒரு நிறுவனத்தையும் தங்களது தளத்தில் மட்டும் தான் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது; குறிப்பிட்ட சில நிறுவன பொருட்களுக்கு கேஷ் பேக் ஆஃபர் தருவது, மற்ற நிறுவனங்களுக்கு  தராமல் இருப்பது கூடாது. பொருட்களின் விலை நிர்ணயத்தில் ஆன்லைன் வர்த்த நிறுவனங்கள் தலையிடக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்தாண்டு தொடக்கத்தில் இந்த விதிகள் அமலுக்கு வந்தபோது, அமேசான், பிளிப்கார்ட் போன்றவற்றுக்கு கடிவாளம் போட்டாகி விட்டது; இனி அவற்றின்  நிலைமை கொஞ்சம் கஷ்டம்தான்; அதிரடி ஆஃபர்கள், தள்ளுபடிகளை அவை  அறிவிப்பது சந்தேகமே என்றெல்லாம் பேச்சுகள் அடிபட்டன. ஆனால், அரசின் கெடுபிடிகள், அவற்றின் சந்தையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏற்கனவே உள்ள பல விதிகளை, முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் காற்றில் பறக்கவிட்டபடி இருக்க, புதிய விதிகள் மட்டும் என்ன தாக்கத்தை ஏற்படுத்திவிடப் போகின்றன?

வியாபாரத்தில் போட்டி இருக்க வேண்டியதுதான்; ஆனால் அது நேர்மையாக,  ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். பணத்தைக் கொண்டு கட்டுப்பாடற்ற முறையில் ஆதிக்கத்தை செலுத்துவது, சில்லறை வணிகர்களை கடுமையாக பாதிக்கிறது. வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாட்டில் சில்லறை வணிகம் என்பது, பொருளாதாரத்தின் உயிர் நாடி. அது, மண் மணத்துடன் மரபுடன் பிணைந்திருக்கிறது.

மாற்றம் ஒன்றுதான் மாறாதது. இன்றைய அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றங்கள், சில்லறை வணிகத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. புதிய தொழில்நுட்பங்களுக்கேற்ப சில்லறை வணிகர்களும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்; அதை சாதகமாக்கிக் கொள்ள வேண்டும். இங்கு நூற்கப்படும் சேலைகள், கைவினைப் பொருட்கள், அணிகலன்களை இணையதளம் வாயிலாக, மற்ற பகுதிகளுக்கு விற்பனை செய்யலாம். எனினும், வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளில் வணிகர்கள் இம்முறைக்கு மாறுவதற்கு, சிலகாலம் பிடிக்கலாம்.

அதுவரை, நமது உள்ளூர்  சில்லறை வணிக நிறுவனங்கள், சிறு கடை வியாபாரிகள் மீது பன்னாட்டு ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துவதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. சில்லறை வணிகம் வீழ்ந்தால், அது நமது பொருளாதாரத்தையும் விழச் செய்துவிடும். இத்துறையை நம்பியுள்ள பல கோடி பேரின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும்; வேலையில்லாத பிரச்சனையை உருவாக்கும்.

நாமும் உணவு, உடை, மருந்து என எல்லாவற்றுக்கும் ஆன்லைன் ஷாப்பிங்கை நாடத் தொடங்கினால், அதனால் பாதிக்கப்படுவது நம் ஊரில் கடை நடத்தி வரும் உறவினரோ, நண்பரோதான். பாரம்பரியத்தை காக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு, கருப்பட்டி வெல்லத்தை ஆன்லைனில் வாங்குவது, நம் மக்களை காக்கத் தவறுவது ஆகாதா? மண்ணின் பாரம்பரியம் மட்டுமல்ல, மண் சார்ந்த வணிகர்களும் காக்கப்பட வேண்டும்.

 

– திருப்பூர் பாலா, ஊடகவியலாளர்

தொடர்புக்கு: baala2018@yahoo.com
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *