BREAKING NEWS

சாம்பார் வெங்காயம் கிலோ ரூ.200 ஆக விற்பனை

காய்கறி கடை, மளிகை கடைகளில் சாம்பார் வெங்காயம் ரூ.180 முதல் ரூ.200 வரையிலும் பெரிய வெங்காயம் ரூ.100 முதல் ரூ.120 வரையிலும் விற்கப்படுகிறது. வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெரிய வெங்காயம் எனப்படும் பல்லாரியும், சின்ன வெங்காயம் எனப்படும் சாம்பார் வெங்காயமும் ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் விலை உச்சநிலையில் உள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரத்தில் பெய்த கன மழை காரணமாக வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.

விளைச்சலின் போதே அழுகியதால் வெங்காயத்தின் வரத்து குறைந்தது.கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் பல்லாரி வெங்காயம் (பெரியது) கிலோ ரூ.90க்கும், சிறிய ரகம் ரூ.80 க்கும் நேற்று விற்கப்பட்டது. இதேபோல் சாம்பார் வெங்காயம் கிலோ ரூ.160 க்கு விற்கப்படுகிறது.காய்கறி கடைகள், மளிகை கடைகளில் வெங்காயம் சில்லறை விற்பனையில் அதைவிட கூடுதலாக விற்கப்படுவது வழக்கம்.சாம்பார் வெங்காயம் ரூ.180 முதல் ரூ.200 வரையிலும் பல்லாரி ரூ.100 முதல் ரூ.120 வரை என விற்கப்படுகிறது.

பெரும்பாலான காய்கறி கடைகளில் சாம்பார் வெங்காயம் விற்பதே இல்லை.பொதுமக்கள் விலையேற்றத்தால் பல்லாரி வெங்காயத்தைதான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.இதுகுறித்து கோயம்பேடு மொத்த வியாபாரி சவுந்திரராஜன் கூறியதாவது:பெரிய வெங்காயம் கிலோ ரூ.90க்கு விற்கப்படுகிறது. அதில் சிறிய அளவில் உள்ள பல்லாரி வெங்காயம் ரூ.80 க்கு விற்கப்படுகிறது. பெரும்பாலானவர்கள் சிறிய அளவில் உள்ள பல்லாரி வெங்காயத்தை விரும்பி வாங்கி செல்கின்றனர்.

சாம்பார் வெங்காயம் ரூ.130க்கு ஒரு ரகமும், ரூ.150க்கு ஒரு ரகமும் விற்கப்படுகிறது. வெங்காயம் நேற்று 30 லாரிகளில் தான் வந்துள்ளது. வரத்து குறைவாக இருப்பதால் விலை குறையவில்லை. ஜனவரி மாதம் 15-ந் தேதி வரை வெங்காய விலை குறைய வாய்ப்பு இல்லை.முருங்கைக்காய் கிலோ ரூ.200க்கு விற்கப்படுகிறது. மற்ற காய்கறிகள் விலை குறைவாக உள்ளது. வெங்காயம் வரத்து குறைவாக இருப்பதால் வியாபாரம் மந்தமாக உள்ளது.

வெங்காயத்தின் விலை அதிகமாக இருப்பதால் அவற்றின் பயன்பாட்டின் அளவை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சின்ன வெங்காய விலை அதிகமாக இருப்பதால் பெரிய வெங்காயத்தை தான் சமையலுக்கு பயன்படுத்துகிறோம். முன்பு சின்ன வெங்காயத்தை உணவின்போது பச்சையாக பயன்படுத்துவோம். இப்போது அவற்றை விட்டுவிட்டோம்.சமையலுக்கு பெரிய வெங்காயத்தை உபயோகப்படுத்துகிறோம்.

விலை குறைந்த பிறகு தான் வெங்காயத்தை வழக்கம் போல அதிகமாக பயன்படுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.வெங்காய விலை உயர்வால் சென்னை ஓட்டல்களில் பிரியாணி விலை உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.170க்கு விற்ற மட்டன் பிரியாணி ரூ.180, 190க்கு விற்கப்படுகிறது.ரூ.130க்கு விற்கப்பட்ட சிக்கன் பிரியாணி ரூ.140, 150ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பிரியாணியுடன் வழங்கப்படும் தயிர் வெங்காயத்திற்கு பதிலாக வெள்ளரிக்காய் கொடுக்கப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *