BREAKING NEWS

சாதி ஆணவ ஒழிப்பை எங்கேயிருந்து தொடங்குவது?

ஆங்கில ஊடகங்கள் அதனை ‘ஹானர் கில்லிங்’ என்று குறிப்பிடுகின்றன. அதன் மொழிபெயர்ப்பாக இங்கே ‘ கௌரவக் கொலை’ என்ற பதம் உருவாக்கப்பட்டது. ஆனால் சாதியின் பெயரால் காதலர்களைக் கொலை செய்வதில் கௌரவம் என்ன இருக்கிறது எனக்கேட்டு ‘சாதி ஆணவக் கொலை’ என்ற சொல் இங்கே வந்தது. குடும்ப கௌரவத்தையும் சாதி கௌரவத்தையும் காப்பாற்றுவதாக நினைத்துகொண்டுதான் இக்கொலைகள் நடக்கின்றன, ஆகவே, கௌரவக் கொலை என்று சொல்வதில் தவறில்லை என்ற வாதமும் வைக்கப்படுகிறது. இவ்வாறாக எப்படிச் சொல்வது என்ற வாதங்கள் போய்க்கொண்டிருக்க, வேற்று சாதிகளைச் சேர்ந்தவர்கள் காதலித்ததால் வெட்டிக் கொல்லப்படுவது தடையின்றித் தொடர்கிறது.

சென்ற ஆண்டு வந்த ஒரு செய்தி, அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் 300 கொலைகள், சாதி வரப்பு தாண்டி காதலித்ததற்காக நடந்துள்ளன என்று தெரிவித்தது. தேசிய குற்றப் பதிவுகள் நிறுவனத்தின் (என்சிஆர்பி) அறிக்கைப்படி, 2014-ம் ஆண்டிலிருந்து 2015-ம் ஆண்டுக்குள் இக்கொலைகள் 798 சதவிதம் அதிகரித்தன. திடீரென்று ஒரே ஆண்டில் கொலைகள் அதிகரிதது எப்படி? முந்தைய ஆண்டுகளில் இப்படிப்பட்ட கொலைகள் தனியாகப் பதிவு செய்யப்படவில்லை, வழக்கமான மற்ற கொலைக்குற்றங்களோடு சேர்க்கப்பட்டிருந்தன என்பதுதான் ரகசியம்.
2014 முதல் 2015 வரையிலான ஓர் ஆய்வின்படி தமிழ்நாட்டில் 145 சாதி ஆணவக் கொலைகள் நடந்திருக்கின்றன. ஆனால், இந்தக் குற்றத்தைக் கையாளுவதற்கு என தனிச்சட்டம் இல்லை என்பதால், முறையான அதிகாரப்பூர்வ பதிவுகள் இல்லை. ஆகவே முழுமையான புள்ளிவிவரமும் கிடைக்கவில்லை. 2014-ம் ஆண்டிலிருந்துதான் என்சிஆர்பி இவ்வகைக் கொலைகளைத் தனியாகப் பதிவு செய்யத் தொடங்கியது. அதன் பின், அந்த ஆண்டில் தமிழகத்திலிருந்து ஓர் ஆணவக் கொலைகூடப் பதிவாகவில்லை! 2015-ம் ஆண்டில் ஒரே ஒரு ஆணவக் கொலை பதிவானது. அதற்கடுத்த ஆண்டில் பதிவான சாதி ஆணவக் கொலை எண்ணிக்கையும் ஒன்றே ஒன்றுதான். இது உண்மை நிலவரத்திலிருந்து மிகப்பெரிய அளவிற்கு விலகிச் சென்ற பதிவு என்று விளக்க வேண்டியதில்லை. தமிழகத்தில் சாதிய ஆணவப் படுகொலைகளே நடக்கவில்லை என்று மாநில அரசு கூறிவந்த நிலையில் இதில் வியப்புமில்லை.

ஆனால், சங்கர், கோகுல்ராஜ், ஓசூர் நந்தீஷ், வயிற்றில் வளர்ந்துகொண்டிருந்த சிசுவோடு அவரது இணையர் சுவாதி, மிக அண்மையில் சோலைராஜ், அவரது இணையர் ஜோதி… பட்டியலிட்டால், கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை மிகப் பெரியதாக நீளும். ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில், 2018 வரையிலான 5 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 157 சாதி ஆணவக் கொலைகள் நடந்திருக்கின்றன – அதாவது சராசரியாக 12 நாட்களுக்கு ஓர் ஆணவக் கொலை. இந்தியா முழுவதுமாகப் பார்த்தால் சாதி ஆணவக் கொலை நடக்காத நாளே இல்லை எனலாம். இது எழுதப்படுகிற/அச்சிடப்படுகிற/படிக்கப்படுகிற நேரத்தில் இந்தியாவில் எங்கோ ஒரு கொலை நடந்திருக்கலாம், அடுத்த கொலைக்கு அரிவாள்கள் தீட்டப்பட்டுக்கொண்டிருக்கலாம். தற்செயலானதா?
அந்த அரிவாள்களின் பசிக்குப் பலியாகிற ஆண்கள் பெரும்பாலும் பட்டியல் சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பது தற்செயலானதா? சாதி ஆணவக் கொலைத் தாகத்தைத் தணிக்க ஊற்றப்படும் குருதிக்காக வெட்டிச் சாய்க்கப்படுகிறவர்கள் “மேல் சாதி” என்று சொல்லிக்கொள்ளும் சாதிகளைச் சேர்ந்த பெண்கள்தான் என்பதும் தற்செயலானதா?

உலகம் வியக்கத்தக்க பல்வேறு பண்பாட்டு மாண்புகளும் வரலாற்று அத்தியாயங்களும் இந்தியாவில் உண்டு. அதேவேளையில், உலக அரங்கில் இந்தியாவை வெட்கித் தலைக் குனிய வைக்கிற இரண்டு முக்கியமான அவமானங்கள் இங்கே இருக்கின்றன. ஒன்று சாதியம், இன்னொன்று பெண்ணடிமை. நுட்பமாகப் பார்த்தால் சாதியத்தைக் கட்டிக் காப்பதற்கென்றே பெண்கள் குறிப்பிட்ட எல்லைகளுக்குள் முடக்கப்படுகிறார்கள். அதே போல், பெண்களை ஒடுக்கிவைப்பதற்கென்றே சாதியம் ஒரு கொடூரமான ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது.

எளிமையாகப் புரிந்துகொள்ள இவ்வாறு சொல்லலாம். பெண்தான் கருவைச் சுமந்து ஆணின் வாரிசைப் பெற்றுக் கொடுக்கிறாள் என்பதால், அவளுடைய ரத்தத்தில் வேற்று சாதி ஆணின் உயிரணு கலந்துவிடக்கூடாது என்று வெகு ஜாக்கிரதையாகக் கண்காணிக்கப்படுகிறது. அந்தக் கண்காணிப்பை மீறி ஒரு பெண் வேற்று சாதி ஆணை – குறிப்பாக தனது சாதியை விடத் தாழ்வானதாகச் சொல்லப்படும் சாதியைச் சேர்ந்த ஆணை – விரும்பி உறவுகொண்டால், அதனால் அவளுடைய ரத்தம் தூய்மைக் கேடு அடைகிறது! இவர்களின் மூலமாகப் பிறக்கிற குழந்தைகளால் சாதித் தூய்மை கலப்படமாகிறது! அந்தக் கலப்படத்தைத் தடுக்கவும், சாதித் தூய்மையைப் பாதுகாக்கவும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் – கொலையும் செய்யலாம். குழந்தைப் பருவத்திலிருந்தே பல்வேறு வடிவங்களில் ஊட்டப்படும் சாதிப்பெருமையின் அடிப்படைப் பாடம் இதுதான்.
மேட்ரிமோனியல் சாட்சியம்

அம்பேத்கர் கண்டறிந்து சொன்னது போல, அகமண முறை மூலம் சாதியம் தலைமுறை தலைமுறையாகப் பேணப்படுகிறது. அகமணமுறை என்றால், அந்தந்த சாதி சார்ந்த, குடும்ப உறவுகளுக்குள்ளேயே பெண் எடுப்பதும் பெண் கொடுப்பதும்தான். குடும்ப உறவுகளுக்கு உள்ளேயே மண உறவை முடிப்பதில் ஓரளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றாலும், சொந்த சாதிக்குள்ளேயே மண முடிப்பதில் மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை. ‘மேட்ரிமோனியல்’ நிறுவனங்கள் குறிப்பிட்ட சாதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, அந்தச் சாதிகளிலேயே வரன்கள் முடித்துத் தரப்படும் என்றே கூச்சமில்லாமல் விளம்பரம் செய்வது, இதற்குச் சரியான சாட்சி.

இவ்வாறு அகமண முறை மூலம் சாதி காணப்படுகிறது என்றால், சாதிப் பெருமையில் தலையை ஊற வைக்க வேறு ஒரு முறை பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு சாதியும் தன்னை மற்றொரு சாதியை விட உயர்வானதாகச் சொல்லிக் கொள்கிறது. அதற்கு ஆதரவாக வரலாற்றில் இல்லாத ஆண்ட பெருமைக் கதைகளை இட்டுக்கட்டிப் புகட்டுகிறது. இந்தியாவின் வர்ணக் கட்டமைப்பில் உயர்ந்த பிரிவினர் என்று சொல்லிக் கொள்ளும் பிராமணர்களிடையே கூட பல பிரிவுகள். கோயிலுக்குள் பூசை செய்யும் பிரிவினரும், இறந்தவர்களுக்காகப் புரோகிதம் செய்யும் பிரிவினரும் சமமானவர்கள் அல்ல. இது எல்லாச் சாதி பிரிவுகளிலும் ஊடுருவி கெட்டி தட்டிப் போயிருக்கிறது. ஒடுக்கப்பட்ட ஒரு சாதிக்குள்ளேயே உட்பிரிவுகள் உள்ளன. ஒரு பிரிவைச் சேர்ந்த பெண் இன்னொரு பிரிவைச் சேர்ந்த ஆணை காதலித்து இணைந்து வாழ முடியாது. முதலில் குறிப்பிட்ட சோலைராஜ்-ஜோதி இருவரும், பட்டியல் பிரிவில் உள்ள ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள்தான் என்றாலும், வேறு வேறு உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான், சாதித் தூய்மைப் பீடத்தில் பலிகொடுக்கப்பட்டார்கள்.
நுட்பமான மனநிறைவு

ஆம், தன்னை மேலேயிருந்து ஒரு சாதி மிதிக்கிறது என்ற கோபத்தை விட, தன் காலில் மிதிபட ஒரு சாதி இருக்கிறது என்ற மனநிறைவு மிக நுட்பமாகப் பின்னப்பட்டிருக்கிறது. அதுதான் சாதிப் பெருமையில் தலையை நனைத்து ஊற வைக்கிறது. இந்த நுட்பத்தைப் புரிந்துகொண்டால்தான் சாதி வரப்புகளைத் தகர்க்கும் போராட்டத்தில் வெற்றி பெற முடியும். சாதிப் பாகுபாடுகள் குறித்த கருத்தரங்கில் ஓர் ஆய்வாளர், சாதி சமத்துவத்தை நிலைநாட்டினால் போதும் என்று கூறினார். ஆனால், நீயும் நானும் சமம் அல்ல என்பதுதானே சாதி?
பணக்காரருக்கும் ஏழைக்கும் ஒரே ஓட்டு, எந்த சாதிக்காரருக்கும் ஒரே விற்பனை வரி என்பதுபோல சாதி சமத்துவத்தை ஏற்படுத்திவிட முடியாது. தலைமுறை தலைமுறையாக தாய்ப்பாலுடன் சேர்த்து புகட்டப்பட்டு வருவது சாதி. பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் சடங்குகள் முதல், இறந்தவருக்கான ஈமச் சடங்குகள் வரையில் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சாதி அடையாளம் மூக்கணாங்கயிறாகக் கட்டப்படுகிறது. திருமண மேடையேறும் மணமகளின் தாலி வடிவமைக்கப்படுவதில் இருக்கிறது சாதி. எவ்வளவு படித்து எவ்வளவு பெரிய ஊதியம் தரும் வேலையில் இருந்தாலும் எந்த ஒரு மேலைநாட்டில் போய் வேலை செய்தாலும், திருமணம் என்று வருகிறபோது “நம்ம கலாசாரப்படி” என்பதாகச் சொல்லிக்கொண்டு பெண்ணை அல்லது பையனைத் தேர்வு செய்வதைப் பெரியவர்களின் விருப்பத்திற்கு விடுவதிலே இருக்கிறது சாதி.
ஆகவேதான் சாதிப் பாகுபாட்டை ஒழிப்பதற்கான ஒரு முன்தேவையாக, அவரவர் ‘மூளையில் நெறிகட்டிப்போயிருக்கிற சாதிப் பெருமை பற்றிய அருவருப்பை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. சுயசாதிப் பெருமை ஒழிப்பு என்பது சாதி ஒழிப்புக்கான முதலடி.
நெடும் பயணத்தில்
இது ஒரு நெடும் பயணம். அந்தப் பயணம் தொடங்கும் வரையில் ஆணவக் கொலைகள் தொடரட்டும் என்று விட்டுவிட முடியாது. இந்தப் பின்னணியில்தான், சாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் ஒன்றை மத்திய-மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று ஒரு சில அமைப்புகளாலும் சில கட்சிகளாலும் வலியுறுத்தப்படுகிறது. மற்ற பல பெரிய கட்சிகள் இதைக் கண்டுகொள்ளாதது ஏன் என்ற வினாவுக்கான விடை எவரும் யூகிக்கலாம்.
மனித உரிமை அமைப்புகள் விடாது வலியுறுத்திவந்த பின்னணியில் தேசிய சட்ட ஆணையம் 2012-ம் ஆண்டில், “(கௌரவம், பாரம்பரியம் என்ற பெயர்களில்) மண உறவுக் கூட்டாளி தேர்வுச் சுதந்திரத்தில் தலையிடுவதைத் தடுத்தல்,” என்ற அறிக்கை ஒன்றை மத்திய அரசிடம் வழங்கியது. அதன் மீது 27 மாநிலங்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துவிட்டன. விரைவில் இதற்கான சட்டம் கொண்டுவரப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் சென்ற ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு தெரிவித்தது. எது எதற்கோ அவசரம் காட்டும் மத்திய ஆட்சியாளர்கள், சமுதாயத்தில் ஆழ்ந்த, ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்தச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு இன்னமும் முனைப்புக் காட்டவில்லை.
சட்டத்தால் மட்டும் மாற்றம் வந்துவிடாதுதான். ஆனால் சாதி ஆணவக்கொலைகளுக்கு எதிராகப் போராட்டக் களம் காண்போருக்கு இப்படிப்பட்ட சட்ட நடவடிக்கைகள் ஒரு வலுவான துணையாக அமையும். அவ்வாறு களம் காண்போருக்குத் துணையாக நிற்க ஒவ்வொருவரும் தயாராவோம். நம் மனதில் ஒட்டியிருக்கக்கூடிய சாதி போதைக் கறைகள் நமக்குக் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தட்டும். அந்தக் கறைகளைத் துடைத்தெறியத் துணியும் வரையில், சாதி ஆணவ அரிவாள்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ நாம் உடந்தையாகிறோம் என்ற உறுத்தல் சேரட்டும்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *