BREAKING NEWS

சாதனை அரசி – சிகாகோவின் அன்னை தெரேசா

இந்தியா, நேபாளம், மலேசியா, பாகிஸ்தான், வங்காளதேசம், தென்கிழக்கு ஆசிய நாடுகள், அமெரிக்காவின் பழங்குடி மக்கள் முதலிய அனைத்து நாடுகளைச் சேர்ந்த  முதியோர், நலிந்தோர், திக்கற்றோர், ஏதிலர், வழிவகை காணாதார் என எந்த வேறுபாடும் காட்டாமல் அனைவருக்கும் அன்னையாகப் பரிவு காட்டி  முதியோர் வள நலக் குடும்ப நலக் காப்பகத்தைப் பதினெட்டு கிளைகளாகச் சிகாகோ, இலியானாஸ் நகரங்களில் தோற்றுவித்து அரும்பணியாற்றி வரும் மாப்ஸ் என்னும் காப்பகத்தின் தலைவராக நாற்பதாண்டுகளாகத் தன்னலமற்ற உயரிய பொதுநலப் பணிக்குச் சிகரமாக அன்னை சந்தோஷ் குமார் திகழ்கிறார். சிகாகோவில் வாழும் “தேவதை”  என்றும், அன்னை  தெரேசாவின், “அடுத்த அடையாளம்”  என்றும் சந்தோஷ் குமார் அம்மையாரைப் போற்றிப் புகழ்கின்றனர்.

வீரத்துறவி விவேகானந்தர் சிகாகோ சென்றிருந்தபோது இடம் தெரியாமல் களைத்துச் சோர்ந்து,  சாலையிலேயே சரிந்து அமர்ந்திருந்தார். கண்கண்ட கடவுளர்களாக திருமதி.கேட் சான்பான், திருமதி.ஜார்ஜ் யேல் ஆகிய இரு மாதரசியர்கள்தான் தன்னை அழைத்துப்போய்த் தன் வளமனையில் உணவும், உடையும் தந்து வழிகாட்டியாக இருந்தார்கள். பாஸ்டன் மாநகருக்குத் தொடர்வண்டியில் சென்றபோது தம்மைப் பரிவோடு அழைத்து அவர்கள் நெறிகாட்டியதையும் விவேகானந்தர்,  ‘திருவருளால் அமைந்த திலகங்கள் இவர்கள்’ என்று குறிப்பிட்டார்.

அப்படி வாய்த்த அமெரிக்க மாதரசியர் இருவரையும் சுவாமி விவேகானந்தர் நெஞ்சுருகப் போற்றினார். ‘சமூகச் சேவை என்பது ஒரு கூட்டு முயற்சியால் மட்டுமே அமையும்’ என்று அவர் உணர்த்தினார். அந்த உணர்ச்சியின் ஒளி வட்டமாகவே மாப்ஸ் பணி மன்றம் சந்தோஷ் குமாரால் உருவாக்கப்பட்டது.  காலம் கொண்ட கோலத்தால் இந்தியத் திருமகள்  இராஜபுதனத்திலகம் சந்தோஷ் குமார் இனம், சமயம், நாடு, மொழி என்ற வேறுபாடு காணாமல் நலிந்த முதியோருக்கு நற்றாயாகச்  சிகாகோவில்  வாழ்கிறார்.  இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும் அந்தந்த மண்ணுக்கு உரிய பெருமை பெற்றவை.  இராஜஸ்தான் மாநிலம் மாவீரர்களின் வீரப் பெருமையையும் மாதர்களின் கற்பற மாட்சியையும், காத்துப் புகழோடு மிளிர்கிறது.  ஓங்கி உயர்ந்த மாட மாளிகைகள் இன்றும் அவர்கள் உள்ளத்தின் உயர்வைக் காட்டுகின்றன.

இராஜஸ்தான் மாநிலத்தில் சம்புதயாள் குலசிரேஷ்டர், சத்தியவதி இருவருக்கும் பரத்பூரில் 1949 -ம் ஆண்டில் பிப்ரவரித் திங்கள் 2-ம் நாள் செல்வச்செழிப்பு மிகுந்த ஜமீன்தார் குடும்பத்தில் குலக்கொழுந்தாய்ப் பிறந்தார்.  சீரோடு வளர்ந்த சந்தோஷ் குமார் இயல்பான கலை இலக்கிய இசை பண்பாட்டு சார்பிலேயே வளர்ந்தார். விளையும் பருவத்திலேயே பொதுநலச் சுடராக வளர்ந்ததால் சிகாகோ நகரத்தில் தன்னலமற்ற தியாகத் தீபமாக ஒளிவிட முடிந்தது. இளமையில் இருந்தே பொது நலத்துக்கு வாதாடுகின்ற திறமையை வளர்த்துக் கொண்டார், சட்டம் பயின்றார், வழக்கறிஞரானார். சட்டத்துறை பேராசிரியரானார்.  இந்தியப் பண்பாட்டு கூறுகளை எல்லா நிலைகளிலும் போற்றி வாழ்த்தும் பொற்புடையவராக மிளிர்ந்தார்.

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற தியாக நெறிக்குத் தன்னைத் தத்தம் செய்து கொண்டு சந்தோஷ் குமார் அந்நாளில் பெண்கள் சமுதாயம் பட்ட அவலங்களைக் கண்டு கண்ணீர் சிந்தினார். வல்லமை வாய்ந்த வழக்கறிஞர் என்ற திறத்தால் உடன்கட்டை ஏற்றுவித்தல், மணமான மகளிரை விலக்கம் செய்தல், கைம்பெண்களின் கடுந்துயரம், பழங்குடிமக்களின் வடுக்கள்  ஆகிய கொடுமைகளைத் தன் வாதத்திறமையால்  சட்டத்தின் வழியாகத் தீர்த்ததோடு சந்தோஷ் குமார் தான் அந்தச் சட்டத்தைத்  தண்டனைக்குரியதாகவும் பெண்களுக்குச் சொத்துரிமைக்குரியதாகவும் திருத்தம் செய்யப்பட்டது.

இராஜஸ்தானம், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பிற்பட்டோருக்கான பள்ளிகள், காப்பகங்கள், தொழிற்பயிற்சிக்கூடங்கள் இவரால் தொடங்கப்பட்டன.

ரோமில் இருந்தால் ரோமானியனாகவே மாறிவிடவேண்டும்  என்ற முதுமொழி உண்டு. ஆனால், எங்கே வாழ்ந்தாலும் இந்தியப் பண்பை இழந்து விடாதே என்பது இந்திய மக்களின் இயல்பாகும். குடியிருப்புகளில் கோயில்கள் அமைத்தல், பள்ளிகளில் தாய்மொழியைக் கற்பித்தல், பக்தி உணர்ச்சியை ஆடல் பாடல் மூலம் பரப்புதல் முதலிய பண்பாட்டு அடையாளங்களைக் காத்து வளர்ப்பதில் பிற இனத்தவர்களுக்கு முன்னோடிகளாவர். வழக்கறிஞராகச் சந்தோஷ்குமார் இந்தியாவில் வாகைசூடி இருந்தாலும், மகள் என்ற நிலை தாண்டி அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த மருமகளாக பொறியாளர் பிரமோத் குமாரை மணந்து சிகாகோ வந்து சேர்ந்தார்.  சிகாகோ சூழலில் அங்குலம் அங்குலமாகச் சந்தோஷ் குமார் அன்னை தெரேசாவாக உயர்ந்தார்.  பத்தாயிரத்துக்கு மேற்பட்ட முதுமையாளர்களும், நலிந்தவர்களும், மகளிரும், காப்பகத்தில் அடைக்கலம் பெற்றுள்ளனர். கரை காணாத எங்களுக்குக் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறார்.

காப்பகத்துக்குச் சென்றபோது கறுப்பர்கள், பழுப்பு சிவப்பு மஞ்சள் நிறத்தவர் என்று பல்வேறு நாடுகளைச் சார்ந்த முதியோர்களைக் கண்டேன். மேலும், அவர்களின் அமைப்பின் வாயிலாகப் பல்வேறு நாட்டைச் சார்ந்த முதியோர்கள் புரிந்துகொள்ளும் வகையில், அவரவர்கள் தாய் மொழியில் அமெரிக்க நாட்டின் சட்டங்களை விளக்குவதும், அந்தந்த மொழிகளில் மொழிபெயர்த்து ஆற்றும் பணிகளையும் கண்டு மகிழ்ந்தேன்.  அங்கு வாழும் முதியோர்களுக்குச் சிறந்த இந்திய உணவுகளைச் சமைத்து நாள்தோறும் 10,000 உணவுப் பெட்டகங்கள் வழங்கப்படுகின்றன.

“பல்வேறு இனங்களின் முதியோர் வாழ்நிலைப்” பற்றிய கருத்துரை வழங்க வெள்ளை மாளிகைக்கு விருந்தினராக அழைக்கப்பட்ட பெருமையும் சந்தோஷ் குமாருக்குப் புகழாரமாக அமைந்தது.

முதியோர் நலமிழந்தோர் வாழ்க்கை நிலைகளை உணர்ந்து பல்வேறு காப்பகங்கள் அமைவது வரவேற்கத்தக்கதாகும், நமது நாட்டிலும் அத்தகைய அமைப்புகள் உருவாகின்றன. செல்வச் செழிப்புமிக்க சிகாகோவிலும்  நமது பாரத நாட்டு  பண்பாட்டைக் காக்கும் வகையில் சந்தோஷ் குமார் அமைத்த நிறுவனம் ஒப்பற்றது.

– ஒளவை அருள்

இயக்குநர்

மொழிபெயர்ப்புத்துறை

தமிழ்நாடு அரசு

dr.n.arul@gmail.com
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *