BREAKING NEWS

சாக்லேட் திருடிய பெண் காவலர் சஸ்பெண்ட் –  ஊழியரை தாக்கிய கணவர் கைது.

சாக்லேட் திருடிய பெண் காவலர் சஸ்பெண்ட் –  ஊழியரை தாக்கிய கணவர் கைது.

 

 

சென்னையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் சாக்லேட் திருடிய பெண் காவலர் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டார். காவலருக்கு ஆதரவாக கடைக்குள் புகுந்து ஊழியரை தாக்கிய அவரின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

சாக்லேட் திருட்டு

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் சூப்பர் மார்கெட்டில் சீருடையுடன் வந்த பெண் காவலர் திருடியதை தட்டிக் கேட்டதால், அவரது கணவர் அடியாட்களுடன் வந்து உரிமையாளர் மற்றும் ஊழியர்களை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி இருந்தது.

எழும்பூர் மேயர் ராமநாதன் தெருவில் உள்ள நீல்கிரீஸ் கிளைக்கு பிற்பகலில் சீருடையில் வந்த பெண் காவலர் நந்தினி, பொருட்கள் வாங்குவது போல சுற்றித் திரிந்ததார். இவர் சாக்லெட் உட்பட சிறுவகைப் பொருட்களை தன் சீருடைப் பையில் எடுத்துப் போட்டுக்கொள்ளும் காட்சிகள் கடையில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியுள்ளன. சி.சி.டி.வி. காமிராவை கண்காணித்த கடை உரிமையாளர் பிரனவ், இது குறித்து ஊழியர்களை எச்சரித்ததையடுத்து அவர்கள் பெண்காவலரை மறித்துக் கேட்டபோது அவர் தான் திருடவில்லை என மறுத்தார். இதையடுத்து ஊழியர்கள் அவரை சோதனையிட்டபோது அவர் திருடியது உறுதிப்படுத்தப்பட்டது.

ஊழியர் மீது தாக்குதல்

வேறு வழியின்றி தவறை ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுத்துவிட்டு பெண் காவலர் நந்தினி அங்கிருந்து சென்றார். இந்நிலையில் பெண் காவலரின் கணவர் என்று கூறிக்கொண்டு வேறு இருவருடன் வந்த நபர் போலீஸ் எனத் தெரிந்த பின்பும் எப்படி சோதனையிடலாம் என மிரட்டியதாகவும், பெண் ஊழியர்களை ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் ஆண் ஊழியர்களை தாக்கினர். நடப்பதை சி.சி.டி.வி.யில் பார்த்து விட்டு அங்கு வந்த கடை உரிமையாளர் பிரனவையும் அவர்கள் சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பியோடினர்.

சஸ்பெண்ட்

தாக்குதலில் முகம் தலை உள்ளிட்ட இடங்களில் காயம் அடைந்த உரிமையாளர் பிரனவும் மற்றும் ஊழியர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், பெண்காவலர் மற்றும் அவரது கணவர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அந்த பெண் காவலரின் பெயர் நந்தினி என்றும் அவர் வேப்பேரி காவல்நிலையத்தில் பணிபுரிவதாகவும் தெரியவந்தது. அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி சஸ்பெண்ட் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் பெண் போலீஸ் நந்தினியை சஸ்பெண்டு செய்து சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். மேலும் நந்தினிக்கு ஆதரவாக, கடை ஊழியர்களை தாக்கிய அவரின் கணவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

——–




Leave a Reply