BREAKING NEWS

சவூதி பெண்கள் இனி தனியே விடுதியில் அறை எடுத்து தங்கலாம்

பழமைவாத இஸ்லாமிய நாடான சவூதி அரேபியாவில் நாளுக்கு நாள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அங்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டு ஆண்களும் பெண்களும் இனி விடுதியில் ஒன்றாக அறை எடுத்து தங்கிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் கட்டுப்பாடுகளை தளர்த்தும் சவூதி

சவுதி அரேபியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்களையே சார்ந்திருக்கிறது. இதனைப் படிப்படியாகக் குறைத்து வேறு வழிகளிலும் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த கடந்த சில ஆண்டுகளாகவே பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது சவுதி அரேபிய அரசு. அந்நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறையின் பங்கு வெறும் 3 சதவீதம் மட்டுமே இருக்கிறது.

இதனை வரும் 2030-ம் ஆண்டுக்குள் சுமார் 10 சதவீதமாக உயர்த்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. சவூதியில் மெக்கா, மதீனா போன்ற ஆன்மீகப் பயணிகள், தொழில், விளையாட்டுப் பயணங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், 49 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு சுற்றுலா விசா வழங்கப்போவதாக சமீபத்தில் அறிவித்தது.சவூதி அரசு.

உறவுக்கான ஆதாரங்கள் தேவையில்லை

இந்நிலையில், இதுவரை ஆண் மற்றும் பெண் வெளிநாட்டுப் பயணிகள் தங்களுக்கு இடையேயான உறவை நிரூபிக்கும் சான்று அளித்தால் மட்டுமே ஒன்றாக ஒரே விடுதி அறையில் தங்க முடியும் என்ற நடைமுறைக்கு பட்டத்து இளவசரர் முகமது பின் சல்மான் தலைமையிலான நிர்வாகம் முடிவு கட்டியுள்ளது.

உறவுக்கான ஆதாரங்கள் ஏதுமின்றி, அடையாள அட்டை மட்டுமே காட்டி வெளிநாட்டைச் சேர்ந்த ஆணும், பெண்ணும் ஒன்றாக ஒரே விடுதி அறையில் தங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், வெளிநாட்டுப் பெண்களும் அடையாள அட்டை மட்டும் காண்பித்து தனியே விடுதி அறை எடுத்து தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சவுதி பெண்களுக்கு கட்டுப்பாடு

இதனிடையே சவூதியைச் சேர்ந்த பெண்கள் தனியே விடுதி எடுத்துத் தங்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த விதியும் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. சவூதி பெண்கள், குடும்ப அடையாள அட்டையை காண்பித்து தனியே விடுதி அறையில் தங்கலாம் என்றும், அதேசமயம் உடன் ஏதேனும் ஆண் தங்கினால், சவூதி பெண்ணுக்கும் அந்த நபருக்குமான உறவு குறித்து ஆதாரம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் சவூதி சுற்றுலாத்துறை விளக்கமளித்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *