BREAKING NEWS

சமையலரை மிரட்டியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தேவை – மார்க்சிஸ்டு வலியுறுத்தல்.

 

 

 

தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்தால், சமையலரை மிரட்டி பணி செய்ய விடாமல் தடுத்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மிரட்டல்

திருப்பூர், அவிநாசியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பாப்பம்மாள் சத்துணவு சமையலராக சமீபத்தில் மாற்றலாகி வந்துள்ளார். இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவ்வூரைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர், இவர் சமைத்து எங்களது குழந்தைகள் சாப்பிடக் கூடாது என அவமானப்படுத்தி, இவரைப் பணி செய்யவிடாமல் தடுத்து, சமையலறையையும், பள்ளியையும் பூட்டி ஆசிரியர்கள், ஊழியர்களை மிரட்டியுள்ளனர்.

கண்டிக்கத்தக்கது

இதையடுத்து மாவட்டக் கல்வி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் பாப்பம்மாள் ஏற்கனவே பணிபுரிந்து வந்த ஒச்சாம்பாளையம் பள்ளிக்கு அவரைப் பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளனர். இச்செயல் கண்டிக்கத்தக்கது.

12 வருடங்களுக்கு முன்னால், பாப்பம்மாள் சமையலராக முதன்முதலில் இப்பள்ளியில் பணியில் சேர்ந்த போதும் இவ்வூரைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். பிறகு கந்தாபாளையம் பள்ளிக்கு மாறிய போதும் அங்கும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

தீண்டாமை

ஒரே மாதத்தில் 3 இடங்களுக்குச் சென்று, கடைசியாக ஒச்சாம்பாளையம் பள்ளிக்கு மாறுதலாகி 12 வருடங்களாக பணியாற்றி வருகிறார். தற்போது திருமலைக் கவுண்டம்பாளையம் பள்ளியில் சமையலர் பணியிடம் காலியாக இருப்பதை அறிந்து, மாறுதல் வாங்கிப் பணியில் சேர்ந்த போது ஆதிக்க சாதியினர் திட்டமிட்டு இவரைப் பணி செய்யவிடாமல் தீண்டாமை வன்கொடுமைச் செயலைப் புரிந்துள்ளனர்.

நடவடிக்கை தேவை

எனவே, பாப்பம்மாளை பணி செய்யவிடாமல் தடுத்து, பள்ளியையும் பூட்டி மிரட்டிய ஆதிக்க சாதியினர் மீது தமிழக அரசு உடனடியாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களுக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பாப்பம்மாள் தொடர்ந்து திருமலைக் கவுண்டம்பாளையம் பள்ளியிலேயே பணிபுரிய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். நவீன காலத்திலும் இத்தகைய தீண்டாமை கொடுமை தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள தலைக்குனிவாகும். இந்தக் கொடுமையை எதிர்த்து அனைத்து கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் குரல் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply